தென்னாட்டில் செத்துப் போகும் சாமிகள் வடநாட்டில் சாவதில்லையே ஏன்?

Viduthalai
2 Min Read

கடவுள்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கொவ்வொரு விதமாகவும், ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமாகவும் இருந்து வருகின்றன. சாதாரணமாய் இந்தியாவிற்கே பிரதான “புண்ணிய பூமிகளான” காசி, ஜகநாதம், பண்டரிபுரம் முதலிய க்ஷேத்திரங்களிலுள்ள சாமி கோவில்களில் யார் வேண்டு மானாலும் உள்ளே சென்று சாமியைத் தொட்டு பூசை செய்யவும் கட்டி அழுது தனது குறைகளைச் சொல்லிக் கொள்ளவும் உரிமைபெற்ற சாமிகளா கவே இருக்கின்றன. ஆனால் தென் னாட்டிலோ அதே சாமிகளைத் தொடாத போதிலும் கிட்டப் போய் கும்பிட்டாலும உடனே அச்சாமிகள் செத்துப்போய்விடுகின்றன. ஆனால் பார்ப்பானுக்குப் பணமும் சோறும் கொடுத்தால் மறுபடியும் அவைகள் உயிர்பெற்று விடுகின்றன. எனவே நமது தென்னாட்டுச் சாமிகளின் சக்திகள் கூட நமது பார்ப்பனர்களிடம் எவ்வளவு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன என்பது கவனிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இப்போது மத்திய மாகாணத்தில் வார்தாவென்னுமிடத்தில் உள்ள சாமிகள் காசி முதலியவைகளிலுள்ள சாமிகளைப் போலவே தங்கள் சக்தியை பிராமணனிடமிருந்து விடுதலை செய்து கொண்டதாகத் தெரியவருகின்றது. அதாவது, வார்தாவில் உள்ள லட்சுமி நாராயண சாமி கோவிலுக்குள் தீண்டாத வர்கள் எனப்படுபவர்கள் போய் கும்பிடலாம் என்று அங்குள்ள மக்கள் தீர்மானித்து அந்தப்படியே இந்த ஒரு வாரமாக எல்லோரும் உள்ளே போய் கும்பிட்டு வருகிறார்களாம்.
இதுவரை அந்தக் கோவிலில் உள்ள ஒரு சாமி கூட சாகவில்லையாம். இன்னும் சில இடங்களிலும் இது போலவே நடைபெற்று வருகின்ற தாம்.
ஆனால் நம் தென்னாட்டு சாமி களுக்கு மாத்திரம் பார்ப்பனர்கள் கையி லிருந்து தப்பிக்க இன் னும் சக்தியேற்படவில்லை என்கின்ற தானது நமக்கு மிகவும் வெட்கக் கேடான காரியமாய் தோன்றுகிறது.

“கடவுள் நெறியையும், கடவுள் தன்மையையும் ராமசாமி நாயக்கனும் சுயமரியாதைக் கூட்டத்தாரும் பாழாக்குகின்றார்கள்” என்று சொல்லுவதற்கு மாத்திரம் நமது நாட்டில் ஆட்கள் ஏராளமாய் இருக்கின்றார்களேயொழிய மற்றபடி இக்கூட்டத்தாருக்கு பார்ப்பானைத் தவிர கடவுள்களின் கோவிலுக் குள்ளே மற்றவர் போனாலும் அதைத்தொட்டாலும் கடவுள் செத்துப் போவார் என்கின்ற கொள்கை கடவுள் தன்மைக்கும் கடவுள் நெறிக்கும் ஏற்றதா என்பதை ஒருவராவது கவனிக்கின்றாரா என்று பார்த்தால் அடியோடு இல்லையென்றே தான் சொல்ல வேண்டியிருக்கின்றது. இனியாவது நமது தென்னாட்டுக் கோவில்களின் நிர்வாகிகள் கவனித்து தங்கள் தங்கள் நிர்வாகத்திலுள்ள கோவில்களில் இருக்கும் கடவுள்களை பார்ப்பன அடிமைத்தனத்திலிருந்து வட நாட்டு சாமிகளைப் போல விலக்கி சுதந்திரமுள்ள சாமிகளாக வும் எல்லோருக்கும் சமமான சாமி களாகவும் இருக்கத்தக்க தான நிலையில் இருக்கும்படி செய்வார் களா? என்று கேட்டுக் கொள் கின்றோம்.

– குடிஅரசு – துணைத்தலையங்கம் – 02.09.1928

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *