தந்தை பெரியார்
இன்று இந்தியாவில் சிறப்பாக தென்னிந்தியாவில் எங்கு பார்த்தாலும் எந்தப் பத்திரிகையைப் பார்த்தாலும், எந்த ஸ்தாபனங்களைப் பார்த்தாலும் அவற்றின் உள் மர்மம் “நாஸ்திகத்தை”க் கண்டு நடுங்கி “ஆஸ்திக”ப் பிரசாரம் செய்வதையே முக்கிய லட்சியமாகக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது.
இதற்கு உண்மையான காரணம் என்னவெனில் இன்றையத்தினம் உலகில் காணப்படும் வலுத்தவன் இளைத்தவன் நிலைமைக்கு அடிக்காரணமாய் இருந்து சோம்பேறிகளுக்கும், பேராசைக் காரர்களுக்கும், மரடர்களுக்கும் ஆதரவாயிருந்து அவர்களது நிலைமையை மேலும் மேலும் பலப்படுத்தி நிலை பெறச் செய்து வந்திருப்பது இந்த ஆஸ்திகமே” யாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஆஸ்திகம் என்பதாக ஒன்று இல்லாதிருந்திருக்குமானால் உலகில் மேல் ஜாதிக் காரனுக்கு இடமேது? குருமார்கள், முல்லாக்கள், பாதிரிமார்கள் அர்ச்சகர்கள் புரோகிதர்கள் பண்டாரசன்னதிகள், பட்டக்காரர்கள், மடாதிபதிகள் ஆகியவர் களுக்கு இடமேது? பிரபுக்கள் முதலாளிகள் லேவாதேவிக்காரர்கள், மிராசுதாரர்கள், பண்ணையார்கள், ஜமின்தாரர்கள், ராஜாக்கள், மகாராஜாக்கள், இளவரசுகள், லட்சுமி புத்திரர்கள் ஆகியவர்களுக்கு இடமேது?
அன்றியும் இந்த ஆஸ்திகம் என்பது இல்லா திருக்குமானால் கீழ் ஜாதிக்காரன், ஏழை, பிச்சைக்காரன், கூலி வேலையாள் முதலிய இழிவுபடுத்தப்பட்ட அடிமைப் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடமேது? என்பவைகளைக் கூர்ந்த அறிவு கொண்டு நடுநிலை என்னும் கண்ணாடி மூலம் பார்த்தால் யாவருக்கும் இதன் உண்மை நன்கு விளங்கும்.
அன்றியும் இன்றைய ஆஸ்திகப் பிரசாரகர்கள் எல்லாம் எங்கு பார்த்தாலும் சரீரத்தினால் சிறிதும் பாடுபடாமல், நோகாமல் உட்கார்ந்து கொண்டு ஊரார் உழைப்பில் உண்டு உடுத்தித் திரியும் சோம்பேறிகளும் நயவஞ்சகர்களுமாகவே இருக்கின்றார்களே ஒழிய வேறு யாராவது இவ்வளவு இருக்கிறார்களா? என்பதைக் கவனித்தாலும் உண்மை விளங்காமல் போகாது.
மேலும் இந்த ஆஸ்திகக் கூட்டம் எல்லாம் நாத்திகத்திற்கு அணுவளவாவது பதில் சொல்ல யோக்கியதை இல்லாமல் இருந்தாலும் நாத்திகம் பரவுவதற்குக் காரணம் என்ன? என்பதைக் கண்டுபிடித்து அதை சரிப்படுத்துவதற்கு யோக்கியதையோ இஷ்டமோ இல்லாமல் இருந்தாலும் அதைப் பற்றிக் கவனிப்பதென்பதில்லாமல் ஒரே அடியாய் “இது ரஷியப் பிரசாரம், போல்ஸ்விக் பிரசாரம், இவை மக்களை மிருகப் பிராயத்திற்குக் கொண்டு வரும் பிரசாரம், என்று சொல்லிப் பாமர மக்களின் மடமையை உபயோகப்படுத்திக் கொண்டு அவர்களை வெறியர்களாக்கி அதனால் ஆத்திகத்தை நிலைநிறுத்தி விடலாம் என்றே கருதுகிறார்கள் பாமர மக்களும், ஏழை மக்களும் தாழ்த்தப்பட்டு இழிவு படுத்தப்பட்ட மக்களும் என்றென்றைக்கும் மூடர்களாகவே இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பது தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருப்பதாகத் தான் முடியுமே அல்லாமல் மற்றபடி அதனால் யாதொரு பயனும் ஏற்படப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி.
நாத்திகம் “ரஷ்யாவிலிருந்து பரவுகின்றது” என்று சொல்லிவிடுவதன் மூலமாகவே ஆத்திகர்கள் நாத்திகத்திற்கு ஒரு இழிவு கற்பிக்க முயற்சிக்கின்றார்கள் அதற்கு உதாரணமாக ரஷியாவின் நாத்திக திட்டத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள்.
அதாவது “ரஷிய சர்க்கார் தங்கள் நாட்டில் 5 வருஷங்களுக்குள் கடவுள், மதம், கோயில் ஆகியவைகள் இல்லாமல் இருக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த 5 -வருஷ நாத்திக திட்டத்தைப் பற்றி லண்டன் பார்லிமெண்டு மெம்பர் தோழர் ஆதல்டச்ச என்பவர் பேசிய ஒரு விருந்துப் பேச்சில் குறிப்பிட்டதென்னவென்றால்
1. முதல் வருஷத்தில் கோவில்களையும், மார்க்க ஆராதனைகளையும் இடங்ளையும் மூடிவிடுவது.
2. இரண்டாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் பிரார்த்தனைக்கு இடம் இருக்கக் கூடாது என்பதுடன், சர்க்கார் உத்தியோகத்தில் மத சம்பந்தமான எண்ணமுடையவர்கள் யாவரும் இல்லாமல் செய்து விடுவது மத சம்பந்தமான புத் தகங்கள் ஆதாரங்க ளெல்லாம் அழிக்கப் பட்டாகவேண்டும். நாத்திக படம், நாடகம், சினிமா முதலியவை நூற்றுக் கணக்காக நடத்த வேண்டும்.
3. மூன்றாவது வருஷத்தில் எந்த வீடுகளிலும் கடவுள் என்ற உச்சரிப்பே இல்லாதபடி செய்து விடுவது. இந்த உத்திர வுக்கு கீழ் படியாதவர்களை தேசத்தை விட்டு வெளியாக்கி விடுவது.
4. எல்லாக் கோவில்களையும் பிரார்த்தனை தலங்களையும் பொது நன்மைக்கு பயன்படும்படி சினிமா இளைப்பாறும் மண்டபம், காலப் போக்கு ஸ்தலம் ஆகியவைகளாக மாற்றுவது.
5. அய்ந்தாவது வருஷத்தில் அதாவது 01-05-1937க்குள் கடவுளுக்கு வீடோ வணங்க இடமோ நினைக்க உள்ளமோ ரஷிய எல்லைக்குள் இருக்கக் கூடாது. என்பதாகும். இந்த காரியங்களில் ரஷியர் வெற்றி பெற்று விடுவார்கள் என்பதற்கு இப்போதே அங்கு பல அறிகுறிகள் காணப்படுகின்றன.
அன்றியும் ரஷ்யா இந்த நிலை எய்தி விட்டால் அங்குள்ள மனித சமுக விடுதலையும் சமத்துவமும் சுதந்திரமும் பெற்றுக் கவலை இன்றி மேன்மையாய் வாழ்வார்கள் என்பதற்கும் அங்கு அநேக அறிகுறிகள் தோன்றுகின்றன. எப்படியெனில் ரஷியர்கள் கடவுளையும் மதத்தையும் அழிக்கவேண்டும் என்று கருதியது இன்று நேற்றல்ல வெகுகாலமாகவே கருதிவந்திருக்கிறார்கள்.
என்றைய தினம் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஏழை மக்களுக்கு, தொழி லாளிகளுக்கு தங்கள் கஷ்டத்தையும் இழிவையும் பசிக் கொடுமையையும் நீக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற உண்மையான எண்ணம் உதிக்கின்றதோ அன்றே கடவுளும் மதமும், ஒடித்தான் தீர வேண்டும், மறைந்துதான் ஆகவேண்டும்.
ஆகவே, ரஷிய ஜனங்கள் கொடுங்கோன்மை யாலும், முதலாளிகள் பிரபுக்கள்மார் ஆதிக்கத் தினாலும் அனுபவித்து வந்த துன்பங்களில் இருந்து மீள வேண்டும் என்று கருதிய நிமிடமே கடவுள் பேரிலும், மதத்தின் பேரிலும் பாய்ந்து அவற்றின் பிடித்தத்தை மக்களிடை இருந்து தளர்த்தி விரட்டி அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களது வெற்றி முரசொலி “கடவுளை ஒழிப்பது பணக்காரர்களை ஒழிப்பதாகும்” “மதத்தை ஒழிப்பது, உயர்வு தாழ்வை அழிப்பதாகும்” என்பதேயாகும்.
இந்த முரசை ரஷியாவெங்கும் அடித்து ரஷிய மக்களின் உள்ளத்தில் கல்லின் மேலேழுதிய எழுத்துப்போல் பதியவைத்த பிறகு தான் கொடுங் கோன்மை வேருடன் சாய்ந்தழிந்தது பணக்காரத் தன்மை அதன் கிளைகளுடனும் சுற்றங்களுடனும் மறைந் தொழிந்தது.
கடவுளும், மதமும் ஒழிந்து விட்டதால் “மக்களுக்கு” ஆபத்து என்பது ரஷியாவில் ஓரளவுக்கு ருஜுப்படுத்தப் பட்டதை நாமும் நன்றாய் மனப் பூர்வமாய் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனால் எந்த மாதிரியான மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டது என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாகும். எனவே எப்படிப்பட்ட மக்களுக்கு ஆபத்து வந்து விட்டது என்றால், இன்றைய தினம் இந்தியாவில் ஆத்திகப் பிரசாரமும், மத பிரச்சாரமும் செய்யும் மக்களைப் போன்ற மக்களுக்குத் தான் ரஷியாவிலும் கடவுளும் மதமும் ஒழிந்ததால் ஆபத்து வந்துவிட்டது. இப்படிப்பட்ட மக்கள் அங்கு 100க்கு 5 பேர்களோ 7 பேர்களோ தான் அதாவது சக்ரவர்த்திகளாகவும், அரசர்களாகவும், ஜமீன்தாரர்களாகவும், முதலாளிகளாகவும் பெரியபெரிய உத்தியோகஸ்தர், டாக்டர்கள், வக்கீல்கள் போன்ற பல ஊரான் உழைப்பில் கொள்ளை அடிப்பவர்களாகவும், பாதிரிகளாகவும் முல்லாக் களாகவும், குருமார்களாகவும் மேல் ஜாதிக்காரர்களாகவும் இருந்து வந்த மக்களுக்கே தான் ஆபத்து வந்து விட்டது.
மற்றபடி இவர்கள் தவிர்ந்த மற்ற 100க்கு 90 பேர்களுக்கு மேற்பட்ட ஏழைகள் தொழிலாளிகள் கீழ்மைப்பட்டவர்கள் என்று சொல்லத்தக்க மக்கள் யாவருக்குமே மேன்மை கிடைத்து விட்டது.
அதுவும் தூங்கும் போது கீழ் மகனாய் கூலியாய் அடிமையாயிருந்து விழித்தெழும்போது மேன்மகனாய் விடுதலை பெற்றவனாய் சமவுரிமை அடைந்தவனாய் ஆனதுபோல் நிலைமை உயர்ந்து விட்டது.
ஆகவே, கடவுளும் மதமும் ஒழிவதின் மூலம் மக்கள் சமுகத்திற்கு எந்த நாட்டிற்கும் இவ்வித “ஆபத்து” நிலைமைதான் ஏற்படகூடும். இந்தப்படியான “ஆபத்து” நிலையை தாழ்த்தப்பட்ட அடிமைப் படுத்தப் பட்ட ஏழைத் தொழிலாளிமக்கள் அதுவும் இந்தி யாவில் மாத்திரமல்லாமல் ரஷியா தவிர உலகமெங்கணும் 100க்கு 90 பேர்களாயி ருப்பவர்கள் மேளதாளம் வைத்து வருந்தி வருந்தி அழைத்து வரவேற்க வேண்டிய வர்களாகவே இருக்கிறார்கள். இவர்களை இனி ஹரிபஜனையினாலும் ஆண்டவன் மகிமையினாலும் – அடியார்கள் தூதர்கள் பெருமையினாலும் ஒரு நாளும் மறக்கடித்து விட முடியாது.
உலகத்தில் எந்த ஆண்டவனை நம்பின சமுகமும் எற்த மதத்தை ஏற்ற சமுகமும், இந்த கதியில்தான் இருந்து வருகின்றதேயொழிய “ஆண்டவனையும் அவனை அடையும் மார்க்கத்தையும்” ஒழித்த ரஷியாவைப்போல் மனித சமுகம் உயர்வுதாழ்வு இல்லாமல் சமதர்மமாய் இருப்பதாக யாராவது சொல்ல முடியுமா?
பணக்காரர்கள் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் கட்டியதினாலும், வேத பாட சாலைகள், யுனிவர்சிட்டிகள் மதராசாக்கள் கட்டி விட்டதினாலேயும், பத்திரிகைகாரர்கள் வேதத்தின் பெருமையையும், புராணத்தின் மகிமையையும், பக்கம் பக்கமாய் எழுதி “ஆண்டவனையும் மார்க்கத்தையும்” புகழ்ந்து கொண்டு “நாஸ்திகர்”களை வைவதினாலேயும் ஏழை மக்கள், இழிவுபடுத்தப்பட்ட மக்கள், பாடுபட்டுப் பட்டினி கிடக்கும் மக்கள் எழுத்து வாசனை அறிய வகையில்லாமல் தடுத்து தாழ்த்திவைக்கப் பட்டிருக்கும் மக்கள் கண்களில் மண்ணைப் போட்டு விடமுடியுமா? என்றுதான் கேட்கின்றோம்.
இப்படிப்பட்ட மக்கள் எந்த நாட்டில் எந்த மார்க்கத்தில் எந்த ஆண்டவன் படைப்பில் இல்லாமலிருக்கின்றார்கள்? என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம். இந்த குறைகளுக்கு கொடுமைகளுக்கு ஆண்டவன் செயல்” என்பதல்லாமல் வேறு என்ன பதில்? இந்த ஆத்திகர்கள் சொல்லக் கூடும் என்று பணிவாய்க் கேட்கின்றோம். உலகம் தோன்றிய பல “லட்சக்கணக்கான” காலங்களாகி விட்டன. “கடவுள்கள்” தோன்றி வெகு காலம் ஆகிவிட்டன. மார்க்கங்கள் தோன்றின ஆயிரக்கணக்கான வருஷங்களாகி விட்டன. இத்தனை கால கடவுள் – மத ஆட்சியிலும் மனித சமுகம் சீர்படவில்லை கவலை யல்லாமல் வயிற்றுக்கு ஆதாரமில்லை. மனிதனுக்கு மனிதன் அடிமைப் பட்டு உழைக் காமல் வாழ முடியவில்லை என்கின்றதான நிலைகள் இன்னமும் இருக்குமானால் இந்த கடவுள்களும், மார்க்கங்களும் இனி அரை நிமிஷமாவது உலகில் இருக்க அருகதை உண்டா? என்றுதான் கேட்கின்றோம்.
160 வருஷ காலம் இந்தியாவை பிரிட்டிஷார் ஏகபோக சர்வாதிகார சக்கிரவர்த்தியாய் ஆண்டும் இந்தியாவில் 100க்கு 90 தற்குறிகளும், 100க்கு 97க்கு கீழ் ஜாதியாரும், மற்றும் தீண்டாத ஜாதியும், தெருவில் நடக்காத ஜாதியும் இன்னும் இந்தியாவில் இருப்பதினால் அவர்கள் இந்தியாவை ஆள ஒரு சிறிதும் யோக்கியதை கிடையாது என்று எப்படி சொல்லுகின்றோமோ, அவர்களை விரட்டி அடிக்க எப்படி பாடுபடுகின்றோமோ, அதுபோல் தான் ஏன்? இன்னும் அதற்கும் மேலாகத்தான் இந்தக் கடவுள்களையும், மார்க்கங்களையும் விரட்டி அடிக்க கடமைப்பட்டிருக்கின்றோம் எப்படி எந்த மதமும் எந்த மார்க்கமும் மக்களை சமமாக பாவிக்காது சமமாக ஆக்காது. இதுவரை பாவிக்கவும் இல்லை ஆக்கவும் இல்லை என்று சொல்லுகிறோமே அதுபோல் தான் இன்று உலகில் வேறு அந்த அரசும், ஆட்சியும் மக்களை சமமாக பாவிக்க வில்லை – நடத்த வில்லை என்று சொல்லி எப்படிப்பட்ட ஆட்சியும் வேண்டியதில்லை சமதர்ம ஆட்சியே வேண்டும் என்கின்றோம். இதனால் யாருக்கு என்ன கஷ்டம்? என்பது நமக்கு விளங்க வில்லை.
யாராவது எங்கள் ஆண்டவன் கட்டளை எங்கள் மார்க்க கொள்கை எங்கள் அரசியல் முறை இதுதான்” என்று சொல்ல வருவார்களானால் குஷாலாய் வரட்டும் மண்டியிட்டு வரவேற்க காத்திருக்கிறோம். அவர்களோடு ஒன்று பட கலர முன்னிற்கிறோம். அதில்லாமல் “இது போல்ஷவிக் பிரசாரம்”, “இது மனித சமுகத்திற்கு ஆபத்து”, “இது தேசியத்திற்கு ஆபத்து”, “இது சுயராஜ்ஜியத்திற்கு ஆபத்து”, “இது சட்டத்திற்கும் நீதிக்கும் அமைதிக்கும் ஆபத்து என்கிறதான பூச்சாண்டிகளைக் கொண்டு ஏழைகள் பட்டினி கிடக்கின்றவர்கள் – கீழ்மைப்படுத்தப்பட்டவர்கள் கண்களில் மிளகு பொடியைக் தூவ முற்பட்டால் கண்கள் போனாலும் உயிர் போனாலும் எத்தனை காலமாவதானாலும் எப்பாடு பட்டாகிலும் இதைச் சாதித்துத் தீர வேண்டுமென்றுதான் சொல்லுவோம் – அவர்களுக்கு இதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்றுதான் சொல்லுவோம்.”
‘குடிஅரசு’ – தலையங்கம் – 04.12.1932