சென்ற வாரத்திற்கு முந்திய குடி அரசு இதழில் நாடக வரியைப் பற்றி எழுதி யிருந்ததைக் கவனித்த அன்பர்கள் மனம் வருத்தப்படாதிருக்க முடியாது. அவ்வருத்தம் மறைவதற்குள் மற்றொரு வரி தலை விரித்தாடிவிட்டது. அஃதாவது ஈரோடு நகரசபை வைத்தியர் அவர்கள் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போவதை உத்தேசித்து இவ்வூர் அதிகார வர்க்கமும் பிரபுக்கூட்டமும் மற்றொரு வரியை ஜனங்கள் தலையில் சுமத்தினார்கள். இச்சிறிய ஓர் காரியத்திற்காக இந்நகரத்தில் சுமார் அய்நூறு ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம். காரியத்தின் யோக்கியதையையும் அவசியத் தையும் அறிந்து மனப்பூர்வமாய் பொருள் உதவிய கனவான்கள் வெகுசிலரே இருப்பர். ஏனையோர் பிரபுத்துவத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் பயந்து உதவியவர்களே என்பதில் அய்யமில்லை.
நாடகவரி வசூலான காலத்தில் நாமும் நாடகத்திற்குச் சென்றிருந்தோம். நமது சமீபத்தில் ஒரு பக்கம் ஒரு வியாபாரியும் மற்றோர் பக்கம் கிராம அதிகாரி ஒருவரும் வீற்றிருந்தனர். வியாபாரி நம்மை நோக்கி, தாங்களும் வந்துவிட்டீர்களே தங்களுக்குமா வரி? என வினவினார். “இல்லை, யான் வேறு ஒருவரிடம் மிகுதியிருந்த அனுமதிச் சீட்டைக் கொண்டு அவருடைய வற்புறுத்தலுக்காக வந்தேன்” என்று கூறியவுடன், அப்படியாயின் நம்மிடம் இன்னும் நான்கு அனுமதிச் சீட்டுக்கள் மிகுதியாக உள்ளன, ஆறு அனுமதிச்சீட்டுக்களை நமது தலையில் கட்டி அறுபது ரூபாய் வாங்கி விட்டார்கள் என்று கூறி, அவற்றையும் கொடுத்து தங்கள் நண்பர் எவரேனும் வெளியிலிருப்பின் வரும்படிச் சொல்லுங்கள் எனக் கூறினார்.
அதே தருணத்தில் பக்கத்திலிருந்த கிராம அதிகாரி நமது தலையிலும் மூன்று அனுமதிச் சீட்டுக்களைக் கட்டி முப்பது ரூபாய் பெற்றுக் கொண்டனர். யான் வந்த ஒரு அனுமதிச் சீட்டுப் போக மிகுதி இரண்டு என்னிடம் இருக்கிறது. இவற்றையும் எடுத்துக்கொண்டு தங்கள் நண்பர்களிருப்பார்களாகில் வரும்படி சொல்லுங்கள் என்றார். (நமது சர்க்காரார் கள்ளுவரியை ஜனங்களின் கல்விக்குச் செலவு செய்வது போல் சர்க்கார் ஊழியர்கள் நாடக வரியில் தர்மவிடுதி நடத்துகிறார்கள் போலும்)
நிற்க, அதைப் போலவே நமது ஊர் வைத்தியர் அவர்களின் பிரிவுபசாரத் திற்காக நடந்த கொண்டாட்டத்திற்கு யாம் சென்றிருந்த காலையில் ‘உங்களுக்கு என்ன வரி’ உங்களுக்கு என்ன வரி’ என ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் கொடுத்த வரியைச் சொல்லிக் கொண்டு, வரும்படியில்லாத காலத்தில் அதிகாரிகளுடைய தொந்தரவுக்கு என் செய்வது என வருத்தமுற்றனர். அக்காட்சியைக் காணும்போது மனத்திற்குச் சங்கடமாகத்தான் இருந்தது. உள்ளூரிலும், நாட்டிலும் முக்கியமாகச் செய்ய வேண் டிய எவ்வளவோ பொதுக்காரியங்களுக்கு எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லிக் கேட் பினும் பணம் பிரிவது கடினமாக இருக்கின்றது. முயற்சி எடுத்து வேலைசெய்வதற்குத் தகுந்த ஆட்களும் கிடைப்பதில்லை. உதாரணமாக, இவ்வூரில் வெகுகாலமாக நின்று போயிருந்த கிராம தேவதையான மாரியம்மன் ரத உற்சவம் எவ்வளவோ கடினங்களுக்கிடையில் அதிகமான முயற்சி எடுத்தும் பணம் திரட்ட இவ்வருஷம் நடத்த சந்தர்ப்பம் கிடைத்தது. அதை நடத்துவதற்குச் செலவுக்காகப் பணம் திரட்டப் போனவர்களுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இல்லாத காரணத்தால் சரியானபடி பணம் திரட்ட முடியாமல் போயிற்று. அதனால் உற்சவத்திற்குச் செலவு சாமான் கொடுத்த கடைக்காரர்கள் பஞ்சாயத்துக் கச்சேரியில் நிர்வாகிகள் மீது பிராது கொடுத்திருக்கின்றனர். இதை நினைக்கும்பொழுது நமது ஜன சமூகத்தின் நிலையைப்பற்றி நாம் வெட்கப்படாமலிருக்க முடியவில்லை. நமது மக்களுக்குத் தங்களது மனசாட்சிப்படி நடப்பதற்கு தைரியமும் தகுதியறிந்து செலவு செய்யும் மனமும் அதிகாரிகளுக்கும் மற்றும் பிரபுக்களுக்கும் பொதுமக்களின் மனதைப் புண்படுத்தாமலும் நிர்பந்தப்படுத்தாமலும் தங்கள் அதிகாரத்தை இம்மாதிரி துர்வினியோகப் படுத்தாமலும் இருக்கக்கூடிய அறிவும் கடவுளால் என்று கொடுக்கப்படுகின்றதோ அன்றுதான் நமது நாடு சுதந்திரமுடையது எனச் சொல்லத் தினை அளவும் பின்வாங்கமாட்டோம்.
– குடிஅரசு – கட்டுரை – 14.06.1925