சென்னை, அக்.5- தமிழ்நாட்டில் வெளிநாட்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.
சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப்பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த பின்னா் அமைச்சா் பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் சுற்றுலா கொள்கை அடிப்படையில், அதிக அளவில் சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
மேலும், 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற முதலமைச்சரின் இலக்கை அடைய, சுற்றுலாத் துறையின் பங்களிப்பு முதன்மையாக இருக்கும் வகையில் சுற்றுலாத் துறையும், சுற்றுலா பங்குதாரா்களும் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், சுற்றுலா ஆணையா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் சி.சமயமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ – மாணவியர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி
வேலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வேலூர், அக்.5- திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவ மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கு ரூ. 15,000/- பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்று வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் 2024-2025ஆம் ஆண்டிற்கு வேலூர் மாவட்ட அளவில் அனைத்துப் பள்ளிகளில் (அரசு/தனியார்/நிதியுதவி/பதின்மப்பள்ளிகள்) (1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய) பயின்று வரும் மாணவ மாணவியர் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப் பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கொள்ளப்பெறும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவ மாணவியர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனறி குழுவின் முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறள் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரால் பரிந்துரைக்கப்படும்.
ஏற்கெனவே இம்முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இயலாது. திருக்குறள் முற்றோதலில் பங்குபெறுவதற்கான விண்ணப்பங்களை வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0416 – 2256166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முழுமையாக நிறைவு செய்யப்பெற்ற விண்ணப் பங்களை மாணவ மாணவியர் 31.10.2024ஆம் நாளுக்குள் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், நான்காம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், வேலூர் மாவட்டம் – 632 009 என்ற முகவரியில் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் ரூ.500 கோடியில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைப்பு: அரசாணை வெளியீடு
சென்னை, அக்.5- தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் ரூ.500 கோடி செலவில் 5,000 சிறு பாசன ஏரிகளை புனரமைக்க நிதி ஒப்புதல் வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் 22,051 சிறுபாசன ஏரிகள், 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. சிறுபாசன ஏரிகள் இயந்திரங்களைப் பயன்படுத்தி தூர்வாருதல் மற்றும் ஆழப்படுத்துதல் உபரி நீர்போக்கி, மதகு போன்ற அனைத்து கட்டமைப்புகளையும் புனரமைத்தல், இணைப்பு வரத்து வாய்க்கால்களை தூர்வாருதல் ஆகியவை பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்படுத்தப்படுகின்றன. 2024-2025ஆம் நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையின் போது ஊரகப்பகுதிகளில் உள்ள 5000 நீர்நிலைகளை ரூ.500 கோடியில் புனரமைக்கப்படும் என நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப் புறங்களில் ரூ.500 கோடி செலவில் 5,000 சிறு பாசன ஏரிகள் புனரமைக்க தமிழ்நாடு அரசு நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசு குறிப்பில், ‘‘தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் ரூ.500 கோடி செலவில் 5,000 சிறு பாசன ஏரிகளை புனரமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநில நிதிநிலை அறிக்கையில் இருந்து ரூ.250 கோடி கிடைக்கும். அதே வேளையில், மாநில நிதி ஆணையத்தின் மானியமாக இதே தொகை வரும்” என செப்டம்பர் 5ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனம், சமூக அமைப்புகள், விவசாயிகள் சங்கம், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றின் சொந்த நிதி ஆதாரம் மற்றும் மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மூலமாகவும், மீதமுள்ள சிறுபாசன ஏரிகளுக்கு அரசு நிதி மற்றம் ஊராட்சி அமைப்புகளின் நிதியின் மூலமாகவும் நிறைவேற்றப்படும். ஆயக்கட்டுதாரர்கள் பணிகள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்புகளுடன் சேர்த்து சிறுபாசன ஏரிகளின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆயக்கட்டுதாரர்கள் மற்றும் பயன்பாட்டாளர் அமைப்பு இல்லாத பட்சத்தில் புதியதாக பயன்பாட்டாளர்கள் குழுக்கள் அமைத்து புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் ஊரக பகுதி விவசாயிகள் பெருமளவில் பயன்பெறுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.