தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அதிகாரிகள் நியமனத்தேர்வில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்கள் ஆகஸ்ட் மாதம் முடிந்த நிலையில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்று ஒன்றிய துறைமுகம் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சரகம் அறிவித்துள்ளது – பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய துறைமுக இணை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
வ.உ. சிதம்பரனார் துறைமுகத்திற்கான முதல் நிலை அதிகாரிகள் நியமனம் தொடர்பான தேர்வுகள் குறித்த அறிவிப்பு 13.05.2024 அன்று வெளியானது.
இதற்கான எழுத்துத் தேர்வு, நேர் காணல்கள் முடிந்த பின்னர் தற்போது துறைமுக அமைச்சரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஒருவர் கூட தேர்வு பெறவில்லை என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் முடிந்த இரண்டு மாதங்களுக்கு மேல் தேர்வு எழுதிய அதிகாரிகள் பதவி உயர்விற்காகவும் புதிய பணிக்காகவும் காத்திருக்கும் நிலையில் இத்தகைய அறிவிப்பு, பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர்களின் தேர்வு முறைமை குறித்து பலத்த அய்யத்தை ஏற்படுத்தி உள்ளது . இந்தப் புறக்கணிப்பு ஏன் என்று துறைமுக இணை அமைச்சர் மாண்புமிகு சாந்தனு தாகூருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப் பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து மேல்மட்ட ஆய்வு நடத்தி அதன் விவரங்களை பொது வெளியில் வெளியிட்டு, தேர்வின் நம்பகத் தன்மையை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் மற்ற பதவிகளுக் கெல்லாம் தகுதியான ஆட்கள் இல்லை என அறிவித்து விட்டு, இப்போது ஹிந்தி அதிகாரி பதவிக்கு மட்டும் ஆட்களை தேர்வு செய்துள்ளனர்.
தீ அணைப்பு அதிகாரிக்குக்கூட ஆள் இல்லையாம். ஆனால் ஹிந்திக்கு ஆள் கிடைத்து இருக்கிறதாம்.
தீ அணைப்பை விட முக்கியமானது ஹிந்தி திணிப்பு – என்ற அவர்களின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள முடிகிறது.
முதல் நிலை அதிகாரிகள் நியமனத் தேர்வுகளில் -சட்ட அலுவலர் தகுதி 1, உதவி செயல் பொறியாளர்கள் மெக்கானிக்கல், சிவில் ஆகிய பதவி களுக்கானது – ஒருவர் கூட தேர்வு பெறவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
முதல் நிலை அதிகாரிகள் பணிக்கு நடைபெற்ற தேர்வில் எவரும் தகுதி பெறவில்லை என்பதெல்லாம் நம்பத் தகுந்ததல்ல.
யாரையோ மனதிற் கொண்டு – இந்தப் பணிகளுக்கு அவர்களை அமர்த்தியிருக் கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது.