கேள்வி 1: அரியானா தேர்தலில் பரப்புரை செய்யக் கூடாதென்று பா.ஜ.க. தலைமையானது மேனாள் முதலமைச்சர் மனோகர்லால் கட்டாருக்கு மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வருகிறதே?
– மலரவன், கோவை
பதில் 1: அரியானா தேர்தலில் பா.ஜ.க. தோற்பது உறுதி என்று செய்திகள் பரவலாக வரும் நிலையில் அதிர்ச்சி அடைந்துள்ள பா.ஜ.க. இப்படி எது, எதனையோ கூறி, ‘வைத்தியமாக்கிப் பார்க்கிறது. எண்ணெய் செலவுதானா? பிள்ளை பிழைக்குமா?’ என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.
– – – – –
கேள்வி 2: தென்காசி கழகப் பொதுக்கூட்டத்திலும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியிலும் கழகப் பேச்சாளர்களுக்கு சங்கிகள் மிரட்டல் விடுத்துள்ளனரே?
– ஆதவன், சைதை
பதில் 2: காவல் துறையினரும் அங்கே கடமை தவறி, சங்கிகளின் மிரட்டலுக்காக அவர்கள் பக்கம் சாய்ந்து நடந்து கொண்டது முறையற்றது – கண்டனத்திற்குரியது. மேடையை அகற்றும்படியெல்லாம் பேசுவது அதீதமானது. உடன் நடவடிக்கை தேவை. தமிழ்நாடு உயர் அதிகாரிகள் கவனிப்பார்களாக.
– – – – –
கேள்வி 3: திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம் என கண்டித்துள்ளனர். ஆனால், கடவுள்களை வைத்து கலவரம் நடத்தி மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதே பா.ஜ.க.?
– வே.காசி, திருத்தணி
பதில் 3: பிள்ளையார் சதுர்த்தி தலைமை நீதிபதி வீட்டில் நடப்பது அவரது தனிப்பட்ட நிகழ்வு. அதற்குப் பிரதமருக்கு அழைப்பு ஏன்? பிரதமர் கலந்துகொண்டதும் மேற்சொன்னவற்றிற்கு முற்றிலும் முரண் நகையாக உள்ளதே! மதச்சார்பின்மை ‘செலக்டிவ்’ (selective) தானா?
– – – – –
கேள்வி 4: “என்கவுண்ட்டர்” என்பது சரியான முறையா?
– மா.முருகன், வந்தவாசி
பதில் 4: சரியானதா, தவறானதா என்று நீங்களும் நானும் கூறக் கூடாது. அங்குள்ள நிலைமைக் கேற்ப காவல்துறை நடந்து, சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவது உலகெங்கும் ஏற்றுக் கொண்ட நடைமுறையே!
– – – – –
கேள்வி 5: கச்சா எண்ணெய் விலை பன்னாட்டுச் சந்தையில் வீழ்ச்சியானாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மறுக்கும் காரணம் என்ன?
– கந்தன், மதுரை
பதில் 5: அதிக கடன் வாங்கி அரசு நடத்தும் ஒன்றிய அரசு. அதனால் ஒருவழிப் பாதையில் நிதியைப் பெருக்கும் வித்தைகளை இப்படிக் கையாளுகிறது!
– – – – –
கேள்வி 6: “ஒரே நாடு ஒரே தேர்தல்” சாத்திய மில்லை என்று தெரிந்தாலும் அதை அமல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு அதீத ஆர்வம் காட்டுவது ஏன்?
– எழில், நெல்லை
பதில் 6: எதிர்க்கட்சி அரசுகளை ஒரே ஆணை – இச்சட்டம் மூலம் கலைத்துவிடும் சூழ்ச்சித் திட்டமும் பின்னணியில் இருக்கலாம்!
முழு நேர கவனம் – மக்கள் மன்றத்தின் விழிப்புணர்வு எல்லாம் தேவை! மிகவும் தேவை!!
– – – – –
கேள்வி 7: காசாவை நாசமாக்கிவிட்டு லெபனான் பக்கம் திரும்பியுள்ளதே இஸ்ரேல் – உலக நாடுகள் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனவே?
– செழியன், நாகை
பதில் 7: உலக நாடுகள் மட்டுமா? அய்.நா. என்பதும் வெறும் அரசியல் கொலுதானா? உலகமறிந்த அநியாயம் இது! ஆயுத விற்பனை பெருகவே இந்த அடாவடிப் போர்கள் போலும். போரிடும் உலகத்தை மாற்றி போரற்ற புதிய உலகம் பற்றி யாருமே கவலைப்படவில்லையே… மகா வெட்கக்கேடு.
– – – – –
கேள்வி 8: கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபு சோரன், கெஜ்ரிவால் என்று தொடர்கிறதே – இதற்கு முடிவே இல்லையா?
– வளவன், பெங்களூரு
பதில் 8: ஆட்சி மாற்றம்தான் முடிவு. முந்தைய பொதுத் தேர்தலின்போதே நாம் எச்சரித்தோம். எப்படியோ மைனாரிட்டி அரசு அதன் பொல்லாப்பை தொடர்கதையாக்கி வருகிறது!
– – – – –
கேள்வி 9: தனது மகளுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைத்துவிட்டு, ஈசா யோகா மய்யத்திற்கு வரும் இளம் பெண்களை மொட்டையடித்து சாமியாராக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதே?
– மாறன், தென்காசி
பதில் 9: அதுபற்றி ஈஷா – மகா நடிகரை மிஞ்சும் அந்த – யோகா வியாபாரிக்கு என்ன கவலை. அவர் அழைத்தால் பிரதமர், உள்துறை அமைச்சர் – அரசுகள் எல்லாமே செல்கின்றனவே. அதனால் அவர் எந்த எல்லைக்கும், அக்கிரமத்திற்கும் தயாராகவே இருப்பார்.
– – – – –
கேள்வி 10: ஏழை, நடுத்தர மக்களின் போக்கு வரத்து சாதனமான “ஆட்டோ” கட்டணத்தை முறைப்படுத்த திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்குமா?
– தமிழ்ச்செல்வி, சென்னை
பதில் 10: நமது போக்குவரத்து அமைச்சர் பார்வைக்கும், முதலமைச்சரின் கவனத்திற்கும் இது ஈர்க்கப்பட்டு நடவடிக்கை வரும் என்று நம்பலாம்!