பெரியார் பிறந்த தருணமாகிய 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேலைக் கல்வி கற்ற பார்ப்பனிய மேல் வருணத்தார் இந்தியத் தேசியப் பாதையை உருவாக்கியதும் முசுலீம்கள் சர். சய்யது அகமதுகான் போன்றோருடைய வழியை ஆதரித்ததும் மதச்சார்புப் போக்குகள் ஆகும். அப்பொழுது தமிழ்நாட்டின் பெரும்பான்மையராக இருக்கும் உழைக்கும் மக்களில் விழிப்புற்றோர் காட்டிய பாதையென்ன?
புதுமைத் தமிழ்நாட்டில் பொதுமை நெறிபரப்பிய முதல்வராகவும் தமிழின் மறுமலர்ச்சிக்கு வித்தூன்றிய மூலவர் மூவரில் முதல்வராகவும் இராமலிங்க அடிகள் (1823-1874) விளங்குகிறார்.மறுமலர்ச்சி மூலவரில் பிற இருவர் வேதநாயகரும், சுந்தரனாரும் ஆவர்.
மேலைக் கல்வி பயிலாதவராகவும், தமிழ்நாட்டுச் சமயச் சான்றோர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலியோரின் பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவராகவும், சமயவாழ்வை மேற்கொண்டவராகவும் வாழ்ந்த வள்ளலாரின் உள்ளம் பழைமைக் கட்டுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கவில்லை. ஆங்கிலேயர் நுழைத்த கல்வியைப் பள்ளியில் இராமலிங்கம் பயிலவில்லை. எனினும் அய்ரோப்பிய நாகரிகம் இந்நாட்டில் ஏற்படுத்திய முற்போக்கு அரசியல் பொருளாதார பண்பாட்டு மாற்றங்கள் தொடங்கப் பெற்ற வரலாற்று முக்கியம் வாய்ந்த காலக்கட்டத்தில், தென்னாட்டின் முதன்மைத் தலைநகரமான சென்னையில், தனது இரண்டாம் வயதிலிருந்து, 35 வயதுவரை (1825-1858) வாழ்ந்தார்.
அய்ரோப்பியர், ஆர்மீனியர், வடநாட்டார் உள்ளிட்ட பல்வேறு இன, மொழி, மத, வருண ஜாதி மக்கள் வாழ்ந்த அந்நகரில், கிறித்துவமத மாற்றத்தையும் அதற்கு ஊக்கமளித்த தலச் சட்டத்தையும் இந்துக்களும். இசுலாமியரும் ஒன்றாக எதிர்த்தகாலம் அது. புதியமுறைக் கல்விக் கூடங்களைத் தொடங்கிய காலமும் அதுவே. சி. சீனிவாச பிள்ளை போன்ற செல்வாக்கு மிக்கவர்கள். இந்துமதத்தைச் சீர்படுத் தவும், கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்லவும் முயன்றதும் இதே காலத்தில் ஆகும்.
சென்னையிலிருந்த பொழுதே பெயர் பெற்ற இலக்கியச் சொற்பொழிவாளராகவும், சிறந்த புலவராகவும் பாவலராகவும் பற்றற்ற ஞானியாகவும் இருந்ததோடு மூன்று நூல்களைப் பதிப்பித்தவராகவும் வாழ்ந்த வள்ளலார் சமய சமூக மோதல்களை நெருங்கிக்காணும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.
இந்நிலையில் 35ஆம் வயதில் பட்டினத்தைவிட்டு நாட்டுப்புறத்திலும் சிற்றூர்களிலும் வாழத் தலைப்பட்டார். சிதம்பரம், கருங்குழி, கடலூர், புதுவை, வடலூர், மேட்டுக்குப்பம் முதலிய ஊர்களில் வறுமையில் வாடி அறியாமையில் உழன்றோரைக் கண்ட அவருடைய ஈர நெஞ்சம் வாடியது.
இன்னாமைக்கும் இழிவுக்கும் காரணம் எதுவென அறியாமலும், காரணத்தைக் காட்டுவோர் இல்லாமலும் வாழ்ந்த மக்களைப் பலவான தெய்வங்களும் மதங்களும் ஜாதிகளும் அழுத்திப் பிழிவதைக் கண்டு நொந்து, மேற்கொண்டும் அவர்களின் துயரம் தொடரக்கூடாது என்ற உறுதியில், கசப்பான உண்மைகளைத் துணிந்து சொன்னதோடு. புதியபெருநெறி பிடித்து ஒழுகவேண்டும் எனவும் குரல் கொடுத்தார்.
1849இல் இராமலிங்கரின் சீடரானவரும், பிற்காலத்தில் சென்னை மாநிலக் கல்லூரித் தமிழாசிரியராக இருந்த வருமான, தொழுவூர் வேலாயுத முதலியார், அடிகளைப் பற்றித் தியாசபிகல் சங்கத்தாரிடம் 1882இல் கொடுத்த சான்று ஒன்று உண்டு. வள்ளலார் ஜாதியை எதிர்த்ததால், அவர் மக்களிடையே பெரிய அளவில் பெயர் பெறவில்லை யெனவும், இருப்பினும் அவர் அற்புதங்களைச் செய்வதைக் காணப் பெரும் எண்ணிக்கையில் எல்லா ஜாதியினரும் கூடினர் என்றும், ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட எதையும் அவர் மறுத்தார் என்றும், தன்னுடைய சமயம் தூய அறிவியலின்பாற்பட்டது என்றும் தொடர்ந்து அவர் வற்புறுத்தியதாகவும் சான்று அளித்தார்.
இராசாராம் மோகன்ராய், தயானந்த சரசுவதி, விவேகானந்தர் முதலியவர்கள் சரித்திர புராண மாசுகளிலிருந்து விலகி, வேதங்களின் தூய்மைக்குச் செல்ல வேண்டுமென்றனர். ஆனால், வள்ளலாரோ வேதங்கள், ஆகமங்கள், சாத்திரங்கள், புராணங்கள் அனைத்தும் கற்பனை யென்றும், சூதாகச் சொன்னவையென்றும். மதம்- வருணம்- ஜாதி முதலியனவற்றைக் கைவிடுவதே நெறியென்றும் தெளிவாகவும் துணிவாகவும் உரைத்தார்.
இவற்றையும் மூடப்பழக்கங்களையும் சுமார் 60 பாடல்களில் கண்டிக்கும் வள்ளலார், பொதுவாக ஹிந்துக்கள் எனும் அடையாளத்தைத் தாழ்வாகக் கருதினார் என்பதற்குச் சான்றாக, அவர் இறுக்கம் இரத்தின முதலியாருக்கு வரைந்த 20-3-1861ஆம் நாளிட்ட மடல் இருக்கிறது.
பச்சையப்ப முதலியார் இஸ்கூல் கிரமம் அல்லாததாகத் தற்காலத்தில் காணப்படுகிறது. அன்றியும் அவ்வலுவல் இராஜாங்க சம்பந்த அலுவலாகவிருந்தால் நன்றாகவிருக்கும். அவ்வாறின்றி ஒருமையில்லாத சில ஹிந்துக்கள் சம்பந்தமானதாக விருக்கின்றது” என அக்கடிதத்தில் எழுதுகிறார்.
தமிழ்நாட்டின் வரலாற்றின் வேதியவருண தருமனத்திற்கு நந்தனார் பலியானார் என்றால், நவீன வரலாற்றில் அதற்குப் பலியான முதற் பெருமகனார் வள்ளலாரே! அவருடைய அன்பு நெறி . கூரிய பட்டறிவின் பாற்பட்டதாயினும், செத்தவர் பிழைப்பர், மரணமிலாப் பெருவாழ்வு இயலும் போன்ற அவருடைய இயற்கைக்கு பொருந்தாத நம்பிக்கைகளை முன்வைத்து, அவர் சோதியில் கலந்துவிட்டார் எனக்கூறி, அவருடைய மாபெரும் ஈகத்தை மக்கள் உணராமற் செய்துவிட்டனர். எனினும் அவர் உலகிற்களித்த சமரச சுத்த சன்மார்க்கம் எனும் சமயங் கடந்த சமநேய நெறிக்கு வரலாற்றில் உயர்ந்த ஓர் இடம் உண்டு.