சிந்துவெளி முதல் கீழடி வரை தொல்லியல் ஆய்வுகளில் பானை ஓடுகளின் பங்கு!

2 Min Read

மனிதர்கள் நாகரிகம் அடைவதற்கு முன் உணவு உற்பத்தி செய்யத் தொடங்கிய புதிய கற்காலத்தில் அன்றாடத் தேவைகளுக்கு கையால் செய்யப்பட்ட பானைகளை வடிவமைத்து வெயிலில் காயவைத்து பயன்படுத்தினர். இத்தகைய பானைகள், பானை ஓடுகள் புதிய கற்கால அகழ்வராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.

இதையடுத்து, இரும்புக் காலத்தில் மனிதர்கள் முன்னேற்றம் அடைந்து, சக்கரத்தில் வைத்து வனையப்பட்ட பானைகளைச் செய்து சூளையில் வைத்து சுட்டுப் பயன்படுத்தினர். இந்தக் காலத்தைச் சேர்ந்த பானைகள் தமிழ்நாடு முழுமையிலும் தொன்மைச் சிறப்புமிக்க இடங்களில் கிடைக்கின்றன.

சூளையில் வைத்து சுடும் பொழுது பானையின் உட்பகுதி கறுப்பு நிறமாகவும், வெளிப்பகுதி சிவப்பு நிறமாகவும் காணப்படும். இத்தகைய பானைகளையும், பானை ஓடுகளையும் “கறுப்பு – சிவப்பு பானை’ என அழைப்பர். இந்தக் காலகட்டத்தில் மனிதர்கள் பெரிதும் நாகரிகம் அடைந்த நிலையில் எழுத்துகளையும் தங்களது பெயர்களையும் பானைகள் மீது பொறிக்கும் நிலைக்கு உயர்ந்தனர். பானை மீது பொறிக்கப்பட்ட எழுத்துகளானது பண்டைய தமிழ் எழுத்துகளாக 2,500 ஆண்டுகள் பழைமை உடையதாக விளங்குகின்றன.
பொதுவாக, தொல்லியல் ஆய்வில் பானை ஓடுகள் அரிய அடிப்படை வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. அதுமட்டுமல்லாமல், தமிழ் எழுத்துகளின் வளர்ச்சியை அறிவதற்கும் தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பை அறியவும் இவை பெரிதும் உதவுகின்றன.
கீழடி, கொடுமணல், கொற்கை, மாங்குடி, அழகன் குளம், வல்லம், உறையூர், கருவூர், அரிக்கமேடு, தேரிருவேலி போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பண்டைய தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஒடுகள் கிடைத்துள்ளன.
யவனம், சீனம் போன்ற அயல்நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பை அறிந்துகொள்ள அரிட்டைன், ரவுலடட், ஆம்பொரா, சீன நாட்டு பானை ஓடுகள் போன்றவை தனிச் சிறப்பு வாய்ந்த பானை ஓடுகளாக அமைகின்றன.

வேட்கோவர்

இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்பானைகளை உருவாக்கும் குயவர்கள் இன்றும் அனைத்து ஊர்களிலும் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றனர். நிகழ்ச்சிகளிலும், சடங்குகளிலும் மண்பானைகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோயில்களில் மண்பானையிலேயே அமுது செய்யப்பட்டு படைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்பானைகளை உருவாக்கும் குயவர்கள் வேட்கோவர், வேள்கோ, மண்ணுடையான் என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்றனர். சங்க இலக்கியங்களில் வேட்கோவர்களைப் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.

குடவோலை பண்டைய நாளில் கிராம சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஓட்டுப் பெட்டிகளாக மண்பானைகள் பயன்பட்டதாக அகநானூறு கூறுகிறது. இதனை உத்திரமேரூர் கல்வெட்டு “குடவோலை முறை எனச் சிறப்பித்துக் கூறுகிறது.
கோயில்களுக்கு வேண்டிய பானைகள், குடங்கள், சட்டிகள், கலசங்கள், அகல் விளக்குகள் போன்றவற்றையும் செய்து அளித்திருக்கின்றனர். குயவர்களின் நலனுக்காக நிலங்கள் அளிக்கப்பட்டன. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலங்கள் குசக்காணி, குசபட்டி, குசவன் நிலம், குலாலவிருத்தி என்றெல்லாம் அழைக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் பண்டைய நாளில் இறந்தவர்களை தாழிகளின் உள்ளே வைத்து புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. முதுமக்கள் தாழிகளையும் அவற்றையும், பெரிய மண்பானைகளையும் செய்து அளித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *