நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடு மட்டுமே
உலகம் மிகப் பெரியது, இதில் உள்ள இடங்கள் அனைத்தையும் ஒருவரால் ஒரே ஆண்டில் சுற்றி பார்ப்பது என்பது கடினமான விடயம். இந்நிலையில் இந்த ஆண்டு உலகில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு மாநிலம் தமிழ்நாடு தான். உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24ஆவது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள மக்களின் பன்முகக் கலாச்சாரம் – பழகுவதில் எளிமை, உதவும் மனப்பான்மை மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க்கும் கட்டட அமைப்புகள் போன்றவைகளை பட்டியலிட்டுள்ளது.
ஹிந்துத்துவ அமைப்புகளின் பன்னாட்டு கிளைகள் தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் பேசும் போது உலக அரங்கில் ஹிந்துத்துவ கலாச்சாரத்தை பெரிதாக காண்பித்துக் கொள்வார்கள். அவர்களால் போலியாக கட்டமைக்கப்படும் ஒன்றுதான் ஹிந்துத்துவ கலாச்சாரம் உன்னதமான கலாச்சாரம் என்பதாகும்.
உண்மையில் தமிழ்நாட்டின் கலாச்சாரம் தான் உலக அரங்கில் சிறந்த ஒன்றாக கவனத்தை ஈர்த்துள்ளது. இங்குள்ள பழங்கால கட்டடங்கள், கோவில்கள் அனைத்தும் திராவிடப் பாணி கலச்சாரத்தில் கட்டப்பட்டவைகள். இவைகள் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை, இந்த ஆண்டு கட்டாயம் பார்க்க வேண்டும் என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனாடாவின் பெரியநகரமான டொராண்டோ, பெரிய ஓட்டல்களுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் வகைவகையாக காட்டும் துருக்கியின் செஸ்மே, பழைமையான நகரமான சீனாவின் ஹாங்சூ போன்ற நகரங்களின் வரிசையில் தமிழ்நாடு 24ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாசிங்டன், பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, க்ரீஸ் போன்ற இடங்கள் தமிழ்நாட்டை விட பின்வரிசையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது தமிழ்நாட்டு மக்களின் பன்முகக் கலாச்சராத்திற்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அதே போல் உலக அளவில் சென்று தங்களின் திறமைகளை பணியிடங்களிலும் வாழும் இடங்களிலும் ஒற்றுமையோடு பாகுபாடின்றி பழகும் விதமும் தமிழ்நாட்டின் அடையாளமாக காணப்பட்டு இந்தியாவிலேயே பார்க்கவேண்டிய ஒரு மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.