திருச்சி, அக். 4- பெரியார் மருந் தியல் கல்லூரியில் சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந் தொண்டர்களுக்கான உலக முதியோர் நாள் விழா 01.10.2024 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்கள் முதுமை என்பது இளந்தலைமுறைகளை வழிநடத்தும் ஆழ்ந்த அனுபவ அறிவு. அத்தகைய ஆழ்ந்த அனுபவமிக்கவர்களை இக்கால தலைமுறைகள் புறக்கணித்து முதியோர் இல்லங்களில் சேர்ப்பது அதிகமாகிக் கொண்டிருக்கின்றது என்றும் புறக்கணிப்புகளை பெரிதும் எதிர்த்த தந்தை பெரியார் பெயர் தாங்கிய கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெற்றோர்களையும் முதியோர்களையும் பேணிப்பாது காக்க வேண்டும் என்றும் உரையாற்றி சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர்கள் அனைவரையும் வரவேற்றார்.
சாமி வைகல்யம் முதியோர் இல்ல பெரியார் பெருந்தொண்டர் நடராசன், ஆறுமுகம் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் தோட்டப்பணியாளர் அருளானந்தம் ஆகியோர் உரையாற்றுகையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட தங்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சி களை நடத்தும் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கும் அறிவு ஆசான் தந்தை பெரியார் மற்றும் தங்களைப் பேணி பாதுகாக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவர்கள் நன்றாக படித்து பெற்றோர்களுக்கு நற்பெயரை பெற்றுத்தர வேண்டும் என்றும் அத்தகைய பெற்றோர்களை இறுதி காலம் வரை கைவிடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது என்றும் உணர்வு பொங்க உரையாற்றினர்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில் மற்றும் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் பெரியோர்களுக்கு பயனாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பாதுகாவலர்கள் மற்றும் சாமி கைவல்யம் முதியோர் இல்ல பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த உலக முதியோர் நாள் விழா மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவு பெற்றது.