வனத்தில் வாழும் பழங்குடிகள் சுள்ளி பொறுக்குவதற்கே ஏகப்பட்ட விதி முறைகள் உண்டு. ஆனால் வனப்பகுதியிலும் மலைக் கிராமத்திலும் ஏறத்தாழ 5 லட்சம் சதுர மீட்டர் (சுமார் 15 லட்சம் சதுர அடி) பரப்பளவில் அமைந்துள்ள மிகப் பெரிய வளாகம் தான் ஈஷா யோகா மய்யம்.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 400 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது ஈஷா யோகா மய்யம். 1990களின் தொடக்கத்தில் இந்த இக்கரை போலுவாம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் குடியேறிய ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ் இங்குள்ள பாமர மக்களிடம் பேசி, விவசாய நிலங்களை வாங்கி மய்யத்தைத் தொடங்கிவிட்டார். அதன்பின்
26-11-1999இல் தியானலிங்கத்தை நிறுவி, இதனை ஆன்மிகத்தலமாக மாற்றினார்.
சத்குரு என்ற பட்டத்துடன் பிரபலமானார்.
யோகா என்ற பெயரில் பல அரசியல் கட்சியினரையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறது ஈஷா. 1994-இல் இருந்து 2005 வரை 11 ஆண்டுகளில் அவர் கட்டிய கட்டடங்களின் மொத்த பரப்பளவு 37,424.32 சதுர மீட்டர். இதில் பல கட்டடங்களும் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது.
இங்கே கட்டப்பட்டிருக்கும் பெரும்பாலான கட்ட டங்களுக்கு முறையான அனுமதி கிடையாது. தட்டிக் கேட்க வேண்டிய மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இந்த மோசடி குறித்து அறிக்கை அளிக்காமல் ஒதுங்கிக்கொண்டனர். அதனால் யானைகள் தமது உணவுக்காக வலம்வரும் வலசை எனப்படும் காட்டுப் பகுதியை அழித்து -மறித்து -ஆக்கிரமித்து கட்டடங்கள் உருவாக்கப்பட்டன.
மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகளிடமிருந்து யானை வழித்தடங்களில் கட்டடம் கட்ட அனுமதி கொடுக்கப் பட்டாலும் மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடம் இருந்து அனுமதி வாங்கியாக வேண்டியது கட்டாயமாகும். அந்தக் குழுவில் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிகள், மாவட்ட வன அதிகாரி, மாவட்ட ஆட்சியர் என உயரதிகாரிகள் வரை இடம் பெற்றிருப்பார்கள். இந்தக் குழுவிடம் அனுமதியே பெறாமல் 2011ஆம் ஆண்டு இறுதிக்குள் ஈஷா யோக மய்யத்தில் பல கட்டடங்களைக் கட்டிக் கொண்டார் ஜக்கி. அத்தனையும் மலை கிராமம் மற்றும் யானை வழித்தடத்தில் உள்ள வனப்பகுதி. இதனால் மக்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகு, 17-08-2012-இல் அப்போது மாவட்ட வன அதிகாரியாய் இருந்த திருநாவுக்கரசு, சென்னையில் உள்ள முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பினார். அதில்… ஈஷா சார்பாக 42.77 எக்டர் பரப்பளவில் ஈஷா யோகா மய்யத்தினரால் ஏற்ெகனவே கட்டப்பட்டுள்ள 63,380 சதுர மீட்டர் பரப்பளவு கட்டடங்களுக்கும், கட்ட உத்தேசிப்பதாக ஈஷா அறக்கட்டளை யினரால் விண்ணப்பம் மட்டும் அளிக்கப் பட்டுள்ள 28,582.52 சதுர மீட்டர் பரப்பளவு கட்டடங் களுக்கும் மலைத்தல பாது காப்பு குழுவின் அனுமதி பெறும் பொருட்டு, வனத் துறையின் தடையில்லா சான்று கோரி ஈஷா அறக்கட்டளையினர் 06-07-2011ஆம் தேதி கடிதம் வாயிலாக விண்ணப்பித்துள்ளதை அந்த அதிகாரி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (பரவலாக இந்தத் தகவல்கள் ஏடுகளில் வெளிவந்துள்ளன)
மேலும் அக்கடிதத்தில், மலைத்தல பாதுகாப்புக் குழு வினரின் அனுமதியின்றி ஊராட்சியின் அனுமதி அளிக் கப்பட்டதற்கான விவரத்தை அறிய இயலவில்லை என்றும், யானைகள் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளதால் ஈஷா யோகா மய்யத்திற்கு அருகிலுள்ள வனத்தில் வாழும் யானைகளின் இயல்பு வாழ்க்கைக்கு அதிக இடையூறு ஏற்பட்டு யானைகள் வனத்தைவிட்டு வெளியேறத் தொடங்கினால் ஏற்படும், சேதத்தை தடுப்பது இயலாத காரியமாகும் என்றும் தெரிவித்து, கட்டடங்களுக்கு அனுமதி தரக்கூடாது எனப் பரிந்துரைத்துள்ளார்.
ஆண்டுதோறும் சிவராத்திரியை அந்த வனப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக கொண்டாடுகிறது ஈஷா யோகா மய்யம். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் திரளுகின்றனராம்.
வன உயிரினங்களின் வாழ்வைப் பறிக்கும் மய்யமாக, யோகா என்ற பெயரால் மனிதர்களுக்கு வாழ்வளிக்கப் போகிறதாம்! தாணிக்காண்டி கிராமத்தின் வழியே பாயும் ஓடையை மறித்து பாலம் கட்டி, பக்கத்தில் கிணறு தோண்டி தினமும் 5000 லிட்டர் தண்ணீரை அனுமதியின்றி எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை ஹோலி வாட்டர் என்ற பெயரில் வி.அய்.பி. பக்தர்களுக்கு ஈசா குடிநீர் பாட்டில்கள் சாதாரண குடிநீர் பாட்டில்களை விட அதிக விலைபோட்டு விற்கிறார்களாம்.
இதே போன்று, வனப்பகுதியில் சட்டவிதிகளை மீறி, நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிவனுக்கு சிலை அமைத்தது பெரிய சர்ச்சையை தமிழ்நாட்டில் உருவாக்கியது. சிவன் திறப்பு விழாவிற்கு 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடியும் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமியும் அழைக்கப்பட்டார்கள். கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் மோடியும், முதலமைச்சர் பழனிச்சாமியும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்றால் ஜக்கியின் செல்வாக்கு எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம். உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியும் உள்ளார்.
தங்கள் பக்கம் தவறு இல்லையென்றால் அது குறித்து ஆதாரப் பூர்வமாக ஈஷா மய்யம் மறுக்கட்டும்!
அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.