சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு
ரூ.7,425 கோடி நிதி அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல்!
புதுடில்லி,அக்.4 சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு ரூ.7,425 கோடி நிதி அளிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு முதல மைச்சரின் முயற்சிக்குக் கிடைத்திட்ட வெற்றி இது!
சென்னையில் கடந்த 2007 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2015 ஆம் ஆண்டில் முதல்கட்ட மெட்ரோரயில் திட்ட சேவைகள் தொடங்கப்பட்டன. தற்போது சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும், விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன்படி மாதவரம்- சிப்காட், கலங்கரை விளக்கம்- பூவிருந்தவல்லி-மாதவரம்- சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்தது. இந்த சூழலில், டில்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் 2 ஆவது கட்ட பணிக்கான ஒன்றிய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்தார்.
இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலை மையில் டில்லியில் நேற்று (3.10.2024) ஒன்றிய அமைச்ச ரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ.7425 கோடி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஒன்றிய அரசு நேற்று (3.10.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார துறையின் பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி சென்னையில் 3 வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்களுடன் 118.9 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. ரூ.63,246 கோடி மதிப்பிலான இந்த திட்டம்2027 ஆம் ஆண்டில் நிறைவடையும்.
இவ்வாறு ஒன்றிய அரசு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
மெட்ரோ திட்டம் தொடர்பான ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (3.10.2024) வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
தங்களை நான் அண்மையில் சந்தித்து விடுத்த கோரிக்கை அடிப்படையில், சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிலுவையில் இருந்த நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், விரைவாக இந்த திட்டத்தை முடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.