நாகை, அக். 3- தமிழ்நாட்டு மீனவர்களுக்கு இலங்கை அரசு தொடர்ந்து இழைத்து வரும் கொடுமைகளைக் கண்டித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் பேரணி மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாகையில் நடைபெற இருப்பதை ஒட்டி 1.10.2024 அன்று பிற்பகல் 12 மணி அளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நாகைக்கு வருகை தந்தார்.
மூன்று முக்கிய சாலைகள் சந்திக்கும் நாகை புதூரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் சிலைகள் அமைந்திருக்கும் இடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு வாகனத்தில் காலையிலிருந்து பிரச்சாரம் செய்து வரும் தோழர் இளமாறன் தன்மானத் தலைவரை வரவேற்கும் வண்ணம் ஒலிவாங்கியின் மூலம் அந்தப் பகுதியே எதிரொலிக்கும் ஒலி முழக்கம் எழுப்ப, அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சரவெடிகளை வெடித்து ஆசிரியருக்கு உணர்ச்சியும், எழுச்சியும், உற்சாகமும் கலந்து சிறப்பான வரவேற்பை நல்கினர்.
இந்த வரவேற்பில் திராவிடர் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன் குடந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா. செந்தூரபாண்டியன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றி குமார், திராவிடர் கழகத்தின் தலைமைக் கழக அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாணவர் கழக மாவட்டத் தலைவர் மு.குட்டிமணி, சட்டக்கல்லூரி மாணவர் கழக மாநில அமைப்பாளர் மு.இளமாறன், நாகை நகர அமைப்பாளர் சண். ரவிக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் பாவா. ஜெயக்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.க.ஜீவா, நகரத் தலைவர் தெ.செந்தில்குமார், தி.மு.க. நாகை நகர் மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவல் துறையினர் தகுந்த முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வரவேற்பை ஏற்றுக்கொண்டு ஆசிரியர் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தார். அங்கு தி.மு.க. நாகை மாவட்டச் செயலாளர் என்.கவுதமன் வருகை தந்து ஆசிரியர் அவர்களுக்கு ஆடையணிவித்து மரியாதை செய்தார். பதிலுக்கு ஆசிரியர் அவருக்கும் ஆடையணிவித்து வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தான் வாங்கியிருந்த புதிய மகிழுந்து முன்பு ஆசிரியருடன் நின்று ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு தனது முகாம் அலுவலகம் சென்றார்.