சென்னை, அக். 3- 3ஆவது பன்னாட்டு புத்தக காட்சிக் கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. நடப்பாண்டில் குழந்தைகளுக்காக தனி அரங்கம் அமைக்கப்படுகிறது. இதில் 50 நாடுகளின் பதிப்பக உரிமையாளர்கள் பங்கேற்கிறார்கள்.
பன்னாட்டு புத்தகக் காட்சி
பன்னாட்டு புத்தகக் கண்காட்சி கடந்த 2022ஆம் ஆண்டு முதல் நடத்தப் பட்டுவருகின்றது. ஆசியாவின் மிகவும் ஆர்வமேற்படுத்தும் பன்னாட்டு புத்தகக் காட்சிகளில் ஒன்றாக வேகமாக மாறி வருகிறது.
இந்த புத்தகக் காட்சியை நடத்துவதன் நோக்கம், இங்குள்ள தமிழ் புத்தகங்களை அந்தந்த நாடுகளில் இருந்து பங்கேற்கும் பதிப்பக உரிமையாளர்கள் மொழி பெயர்த்து அவர்கள் மொழிகளில் வெளியிட வேண்டும். அதேபோல், அவர்கள் நாட்டில் சிறந்து விளங்கக் கூடிய புத்தகங்களை நம்முடைய பதிப்பகங்களுக்கும் விற்பனை செய்யலாம். இதற்கான ஒப்பந்தங்கள் இந்த காட்சியில் கையெழுத்தாகும்.
புத்தகங்களை மொழி பெயர்ப்பதற்காக ஒரு புத்தகத்துக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை மானியமும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் 25 நாடுகளை சேர்ந்த பதிப்பக உரிமையாளர்கள் இந்த காட்சியில் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் நடந்த புத்தகக் காட்சியில் 40 நாடுகளை சேர்ந்த பதிப்பக உரிமையாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். கடந்த 2 ஆண்டுகளில் கருவாச்சி காவியம் மலையாளத்திலும், பாரதிதாசன் கவிதைகள் அரபு மொழியிலும், திருக்குறள் அல்பேனியல் மொழியிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தகம் பிரெஞ்சு மொழியிலும் என சுமார் 110 புத்தகங்கள் மொழி பெயர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டு இருந்தன.
அதில் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்த 15 புத்தகங்கள் அடுத்த மாதம் (நவம்பர்) வெளியிடப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 16,17 மற்றும் 18ஆம் தேதிகளில் 3ஆவது பன்னாட்டு புத்தகக் கண் காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பொது நூலகம் மற்றும் தமிழ் நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மிகத்தீவிரமாக மேற்கொண்டு வருகின் றன .
குழந்தைகளுக்கு தனி அரங்கம்
இந்த 3ஆவது பன்னாட்டு புத்தகக் காட்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகஉரிமையாளர் கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காட்சியில் முதல் முறையாக குழந்தைகளுக்கு என்று தனியாக அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. அதில் குழந்தைகள் நலன் சார்ந்த புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.