நம் நாட்டில் உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி என்ற வருணபேதம், வர்க்கபேதம் (ஏழை – பணக்காரன் என்ற பேதம்), இவற்றை பிஞ்சு உள்ளங்களில்கூட புகுத்தி விட்டு, அவர்களது மனதில் பேத நஞ்சைப் பாய்ச்ச நாம் தவறுவதே இல்லை.
மாணவப் பருவத்தில், வகுப்பறையில்கூட உடன் படிக்கும் சக மாணவ – மாணவிகளுக்கு இடையே பேதம் – பெரும் பிளவு அவர்களிடையே ஏற்பட்டு மனதிற்குள் ஒரு பெருந் தடையையே் ஏற்படுத்தி விடக் கூடும்!
அவற்றை அறவே நீக்க, அதனை ஒழிக்கவே பள்ளிக ளில் ஒரே வகை சீருடை , ஒரே வகை உணவு மதிய உணவு, (திராவிட மாடல் அரசின் புரட்சிகர திட்டங்களில் காலைச் சிற்றுண்டி தந்து) படிக்க வைக்கின்றனர்.
உலகமே பாராட்டி வரவேற்கும் திட்டம் இது. வெறும் வயிற்றுப் பசியை மட்டும் தீர்ப்பதில்லை – பிள்ளைகள் மனதில் உருவாகும் பேதம் – அந்தஸ்து, முதலிய மாயைகளுக்கும் விடை கொடுத்து சமத்துவத்தை – சமமாக ஒரு குடும்பம் போல் வாழும் பாசத்தை விதைக்கும் திட்டம்!
‘‘கூடி உண்ணல் கோடி பலன் தரும்’’ அவர்களது பிற்கால வாழ்வில்!
சமூகப் பார்வை வளரும்; சகோதரப் பாசம் பெருகும், எளிமை ஆட்சி செய்யும்.
குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள்கூட, தங்களுக்கு எவ்வளவு பெரும் செல்வம் என்பதை குழந்தைகள்மூலம் விளம்பரப்படுத்திக் கொள்ளுதல் என்பதும் அப்படி அவர்களை வளர்ப்பதும் சரியில்லாத ஒன்று. அதனால் வாழ்க்கைப் பயணத்தில் மேடு, பள்ளங்களைக் கண்டறிந்து கொள்ள முடியாமல், பிற்கால வாழ்வில் ஏற்படும் சோதனைகளை வென்றெடுத்து நின்று வாழும் வல்லமையை இழந்து விடக் கூடும்.
‘பெற்ற மனம்’ என்ற டாக்டர் மு.வ.வின் புதினத்தை நான் சில நாட்களுக்கு முன் மறுவாசிப்பு செய்தேன்.
1980இல் அந்நூல் வெளிவந்து, பல பதிப்புகளை இன்று வரை கண்டுள்ளது!
அதில் ஆடம்பரம் பற்றிய ஒரு பகுதி நல்ல அறிவுரையாக உள்ளது.
ஆடம்பர வெளிச்சம் நிறைந்த இன்றைய கால கட்டத்தில் மிகவும் தேவை என்பதால் அப்படியே தருகிறேன். படியுங்கள்.
‘‘ஆனால், ஒன்று சொல்வேன். குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பு காட்டி, ஆடம்பரமாக, வளர்க்க வேண்டாம். நம்மைச் சுற்றியுள்ள மக்களை மறந்து விட்டு நாம் மட்டும் ஆடம்பரமாக வாழ்வது பெரிய குற்றம். மேலை நாட்டில் ஆடம்பரம் என்பது இயல்பான வாழ்வு, சின்ன குடியானவர் வீட்டிலும் இரண்டு மூன்று வானொலிப் பெட்டிகள் உண்டு; மோட்டார் உண்டு; குழந்தை, சிறுபெண், பையன் உள்பட ஆளுக்கு ஒரு கட்டிலும் அலமாரியும் மேசையும் நாற்காலியும் தனித்தனியே உண்டு. இந்த வாழ்க்கையை நம் நாட்டில் எதிர் பார்க்கக் கூடாது. அங்கே தொன்று தொட்டு எளிமையில் பழகி விட்டோம். இப்போது வறுமையின் நெருக்கடியால் எளிமையே கட்டாய நிலைமை ஆகிவிட்டது. சுற்றுப்புறம் இப்படி இருக்கும்போது, நம் குழந்தையை மட்டும் ஆடம்பரமாக வளர்க்கலாமா? மேசையில் சாப் பிடுவது, பூட்ஸ் காலுடன் வீட்டில் திரிவது, கட்டிலைவிட்டுக் கீழே இறங்காமலிருப்பது இப்படிப் பட்ட பழக்கம் எல்லாம் வேண்டாம். இன்னும் ஒன்று சொல்வேன். யார் என்ன சொன்னாலும் சொல்லிப் போகட்டும். பட்டிலும் பொன்னிலும் பழகும் படியாகக் குழந்தையை வளர்க்காதே. நம் நாட்டில் பட்டும் பொன்னும் பழக்கமாய்ப் போன ஆடம் பரங்கள் என்பது எனக்குத் தெரியும். நாம் பழகிவிட்ட ஆடம்பரத்தையும் விட்டுத் தொலைப்போம். நாட்டுப் புறங்களில் வெள்ளி மோதிரம் இல்லாமல் ஏங்கும் இளம் பெண்கள் எத்தனை பேர் என்று எண்ணிப் பார். கடுங்குளிரில் பருத்திச் சொக்காய் இல்லாமல் நலியும் குழந்தைகளுக்குக் கணக்கு உண்டா? என்று எண்ணிப்பார். ஆகவே நம் குழந்தையை ஆடம் பரமாக வளர்க்க நமக்கு உரிமை இல்லை என்று உணரவேண்டும்.
இதனால் நாட்டுக்கு நன்மை செய்கிறோம் என்ற எண்ணம் வேண்டாம். நமக்கு நாமே நன்மை செய்து கொள்கிறோம். சிறப்பாகக் குழந்தைக்கு நன்மை செய்கிறோம். அவன் வளர்ந்து அறிவு பெறும்போது செருக்கு இல்லாதவனாக நல்லவனாக வளர்வதற்கு இது வழி, அப்படி அல்லாமல் ஆடம்பரத்தில் பழக்கி விட்டால், அவன் பெற்றோருக்கும் கெட்ட பிள்ளை ஆவான்; வாழத் தெரியாமல் தனக்குத் தானே தீமை செய்து கொள்வான்.
நீ குழந்தையாக இருந்தபோது நானும் அம்மாவும் பெற்ற அனுபவம் இன்னும் மறக்க வில்லை. திருவொற்றியூர்க் கடற்கரைக்கு உன்னை எடுத்துக் கொண்டு போயிருந்தோம். கையில் இரண்டு ஆரஞ்சுப் பழங்கள் இருந்தன. வழியில் இருந்த ஏழைக் குழந்தை ஒன்று பழத்தைப் பார்த்துக் கேட்டது. ஒரு பழம் கொடுக்கலாம் என்று பார்த்தால், அப்போது நீ கேட்கவில்லை. கொடுக்காமல் வந்ததால் அந்தக் குழந்தையின் ஏக்கத்தைப் பார்க்க முடியவில்லை. ஒரு பழத்தை உரித்துப் பாதியாவது கொடுக்கலாம் என்றால், உரிக்காமலே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீ பிடிவாதம் செய்தாய்.ஒரு குழந்தை சுவை பார்க்க வேண்டும் என்று ஏங்கும் ஏக்கம்.
மற்றொரு குழந்தை அதை வைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்று செய்யும் பிடிவாதம் – இவற்றிற்கு இடையில் நானும் அம்மாவும் அப்போது திண்டாடினோம். உண்மையாக எண்ணிப்பார். நம் குழந்தை ஊரார் குழந்தை என்று பிரித்து எண்ணும் எண்ணமே குற்றம் அல்லவா? பெரிய பெரிய வேதாந்தம் படித்துவிட்டு, இந்தச் சின்ன மாயைத் ‘திரையை நீக்க முடியாமல் திணறுகிறோம். பொதுவுடைமையால் சில தீமைகள் உண்டு என்று அமெரிக்கர்கள் அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு நம் நாட்டின் நிலைமையைச் சொன்னால் விழிக்கிறார்கள். இந்தப் பாழும் திரைகளை நீக்கி மக்களுக்கு நல்லுணர்ச்சி ஊட்டுவதற்காவது செல்வ – வறுமை வேறுபாட்டை ஒழிக்க வேண்டாமா என்று சொன்னால் ஒத்துக் கொள்கிறார்கள். இந்த நாடு வளம் கொழிக்கும் நாடு. இங்கே எல்லோருக்கும் தொழில், எல்லோருக்கும் வருவாய், எல்லோருக்கும் வாழ்வு உண்டு. அதனால் இங்கே உள்ளவர்களுக்கு நாம் படும் தொல்லைகளும் நம்முடைய வேட்கை களும் உள்ளபடி விளங்குவதில்லை.
நான் விரைவில் திரும்பி வரவேண்டும் என்று எழுதியிருந்தாய். உன்னையும் உன் மகனையும் நான் மறந்த நாளே இல்லை. ஆனால், இங்கே இருந்து என்னென்னவோ தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆசையால், குடும்பப்பற்று ஒரு சிறிது குறைந்து வருவது உண்மை. ஆனாலும், கடமையை மறக்க மாட்டேன், வருவேன்.
இதுவரையில் குறுகிய வட்டத்தில் இருந்தேன். குடும்பத்திற்காகவே வாழ்ந்தேன். இப்போது மரத்தை விட்டு மலைமேல் ஏறி நின்று பார்க்கிறேன். என் மரம் உன் மரம் என்ற வேறுபாட்டுணர்ச்சி குறை கிறது; வட்டம் பெரிதாகிவிட்டது. இந்த வளர்ச்சி நல்லதுதானே. நீயும் இப்படி ஆகவேண்டும். மணி மேகலை இப்படி ஆகவில்லையா? உலகத் தொண்டு செய்யவில்லையா? அசோகன் மகள் செய்ய வில்லையா? சீராளரும் இப்படி ஆக வேண்டும் என்று மனமார எண்ணு, வாழ்த்து. மணிவண்ணனும் இப்படி ஆக வேண்டும். குடும்ப கடமையைச் செய்வோம்: உலக முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம். இதுதான் நெறி. ஆகவே என் வாழ்க்கையின் மாறுதல் நல்லதுதானே? தாத்தா இருந்தால் என்னைப் பற்றி எவ்வளவோ மகிழ்ச்சி அடைவார் அல்லவா?
ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வந்திருக் கிறேன். ஆனால், அடிக்கடி நான் நினைப்பது நம் நாட்டு வாழ்க்கையைத்தான். இன்று காலையில் ராமகிருஷ்ண மடத்து அம்மையார் ஒருவர் என்னைப் பார்த்து, “இந்தியா கலைக்குப் பேர்போன நாடு அல்லவா?” என்றார். “ஆமாம்,” என்று தலையசைத்து, ஒரு சிறிது விளக்கிவிட்டு வந்தேன். ஆனால், என் மனம் உண்மையை ஒளித்து வைத்தது. கோடிக்கணக்கான மக்கள் வயிற்றுக்குச் சோறு இல்லாமல், உடுக்க உடை இல்லாமல், படுக்கப் பாய் இல்லாமல், எழுதப் படிக்க அறிவு இல்லாமல், விலங்குகளைப் போல் வாழ்க்கை நடத்தும் ஒரு நாட்டில், ஒரு சிலர் தங்கள் ஆடம்பர வாழ்க்கைத் துணையாக நடனம் என்றும், இசை என்றும், சொல்லிப் பாராட்டிக் கொள்வதெல்லாம் கலையா? இந்தக் கலைக்கும் சுடுகாட்டில் பிணங்களின் மேல் மலரும் மலருக்கும் வேறுபாடு என்னவோ? இது வரையில் இருந்த உலகம், ஏமாந்த உலகம். இனி வாழ்க்கை, கலையை விடப் பெரியது என்ற கொள்கை வேர்கொள்ளும். வாழ்க்கையின் முன்னேற் றத்திற்கு உதவாமல் குறுக்கே நிற்பது எதுவானாலும், கலை முதலான எந்தப் பெயரால் வந்து நின்றாலும் அழிந்து போகும் என்று உணரவேண்டும்.
உள்ளபடி நம் நாட்டுக்கு உரிய பெருமை எளிய தூய வாழ்க்கைதான், நாட்டின் தட்பவெப்ப நிலையால் அது நமக்கு இயல்பாயிற்று. அதுவும் இப்போது வறுமையால் கட்டாய நிலையாக உள்ளது. தள்ளாத கிழவனுடைய அடக்கமான வாழ்வை யாராவது பாராட்டுவார்களா? ‘அய்யோ பாவம்’ என்று இரக்கம் காட்டுவார்களே தவிர யாரும் பாராட்ட மாட்டார்கள். நம்முடைய நாட்டின் தூய எளிய வாழ்க்கையும் இப்படி இரங்கத் தக்க நிலையைத்தான் அடைந்துவிட்டது. அந்த அம்மையாரை மறுமுறை பார்க்க நேரும்போது இதைச் சொல்லிவிடப் போகிறேன்’’.
வெளிநாட்டிற்குச் சென்ற ஒரு தந்தை தனது குடும்பத் தாருக்கு எழுதிய கடிதம் போன்று இக்கருத்து வெளி வந்துள்ளது. எளிமைக்கு இலக்கணமாகவும் ஆடம்பரத்தின் வைரியாகவும் வாழ்ந்து காட்டியவரை தொடர்ந்து கற்போம்.