உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் குற்ற வழக்குகளில் சிக்கியவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்படுகி்ன்றன. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விசுவநாதன் ஆகியோர் அளித்த தீர்ப்பில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளதாவது:
‘நமது நாடு மதச் சார்பற்ற நாடு. எங்களது உத்தரவுகள் ஜாதி, மத பேதமின்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவானது. பொது சாலை, நடை பாதை, நீர் நிலைகள் அல்லது ரயில்வே பாதை ஆகியவற்றை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தால், அவற்றைக் கட்டாயம் அகற்ற வேண்டும். குருத்வாரா, தர்கா மற்றும் கோயில் போன்ற வழிபாட்டுத்தலங்கள் பொது மக்களுக்கு இடையூறாக இருக்க முடியாது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
2.10.2024 நாளிட்ட ஊடகங்களில் விவரமாக வெளியும் வந்துள்ளது. உச்சநீதிமன்றம் இத்தகைய தீர்ப்பினை வழங்குவது ஒன்றும் புதிதானதல்ல!
இதே உச்சநீதிமன்றம் 2010ஆம் ஆண்டிலேயே (14.7.2010) இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.
77,450 கோயில்கள் தமிழ்நாட்டில் அனுமதியின்றிக் கட்டப்பட்டுள்ளன. இவை அகற்றப்பட வேண்டும் அல்லது வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். செய்யாத மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள் இந்நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும்’’ என்று இதே உச்சநீதிமன்றம் இன்றைக்கு 14 ஆண்டுகளுக்கு முன் ஆணை பிறப்பித்துள்ளது.
ஆனால் ஆண்டுகள்தான் ஓடியிருக்கின்றனவே தவிர காரியங்கள் ஏதும் நடைபெறவில்லையே!
நடைபாதைகளில் கோயில்கள் கட்டப்படுவதால் மக்கள் வாகனங்கள் பயணிக்கும் சாலை, தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. இதன் காரணமாக மக்கள் விபத்துக்கு ஆளாகி உயிர் இழக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்படுகிறதே!
சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்கிற போது வழிபாட்டுத்தலங்களுக்கு மட்டும் விதி விலக்கு என்று எந்தச் சட்டமும் அல்லது ஆணை மற்றும் தீர்ப்புகளும் கூறவில்லை.
அப்படி இருக்கும் போது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் வகைகளில் நடை பாதைகளில் கோயில்களைக் கட்டுவது எந்த வகையில் நியாயமானது – அனுமதிக்கத் தகுந்தது?
வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோதும் ப.உ. சண்முகம் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதும், நடைபாதைக் கோயில்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.
ஆனாலும் பிற்காலத்தில் மீண்டும் கோயில்கள் முளைத்தன – முளைத்துக் கொண்டும் இருக்கின்றன.
அதுவும் நடைபாதைகளில் கோயிலைக் கட்டுவது மட்டுமல்ல; அங்கு உண்டியல் என்பதுதான் மிக மிக முக்கியமானது’.
இரவு நேரங்களில் அந்த இடங்கள் சமூக விரோதிகளின் மய்யங்களாக இருக்கின்றன. இது குறித்து ஒரு முறை ‘ஜூனியர் விகடன்’ ஏடு விரிவாகவே எழுதியதுண்டு.
இதில் என்ன கொடுமை என்றால், முத்தமிழ் அறிஞர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, ஜாதி ஒழிப்பு நோக்கத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்கினார்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி முன்மாதிரியாக உருவாக்கப்பட்டன.
சமத்துவபுரம் என்ற பெயருக்கேற்ப அனைத்து மதம், ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் பெரியார் பெயரில் அமைந்த ஒரு வளாகத்தில் மாச்சரியம் ஏதுமின்றி சகோதரர்களாக வாழ ஓர் உதாரணத் தன்மையுடன் உருவாக்கப்பட்டது.
அந்த வளாகத்துக்குள் எந்த மதவழிபாட்டுச் சின்னங்களுக்கும் இடமில்லை. வேண்டுமானால் அவரவர் வீட்டில் பூஜை அறைகள் வைத்துக் கொள்ளலாம்.
தனித் தனி சுடுகாடும் கிடையாது. பொதுவான மயானங்கள்தான்! எத்தகைய சீரிய சிந்தனையின் செயல்பாடு இது!
நாடே பெரியார் சமத்துவபுரமாக மாற வேண்டும் என்று கலைஞர் தன் வேட்கையை வெளிப்படுத்தியதுண்டு.
பெரும்பாலான பெரியார் நினைவு சமத்துவபுரங்களை, உள்ளாட்சித்துறை அமைச்சராக அப்போது இருந்த மாண்புமிகு மு.க. ஸ்டாலின் தான் திறந்து வைத்து பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்படுவதன் விழுமிய நோக்கத்தை விளக்கமாக எடுத்துரைத்தார்.
அத்தகைய பெரியார் நினைவு சமத்துவபுரங்களில் சில இடங்களில் கோயில்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது வேதனைக்குரியது.
அவற்றை ஆதாரப்பூர்வமாக படத்துடன் ‘விடுதலை’ ஏட்டில் வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவரை இவற்றின்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையானாலும், இனியாவது, எந்த மத வழிபாட்டுச் சின்னமும் பொது வெளியிலிருந்து (அரசுக்குச் சொந்தமான இடங்களில் அனுமதி பெறாத வழிப்பாட்டுத்தலங்கள்) அகற்றப்பட வேண்டும்.
உச்சநீதிமன்ற தீர்ப்பும் இதில் கவனிக்கத்தக்கது.
தலைவர்களின் சிலைகளையே பொது சாலைகளில் நிறுவிட அனுமதி கிடையாது என்று நீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்புக் கூறிய நிலையில், கோயில்களுக்கு மட்டும் விதி விலக்கா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் திட்டவட்டமாக தீர்ப்புக் கூறியிருந்தும் அரசுகள் தனி ஆணைகளே பிறப்பித்திருந்தும் – அனுமதியின்றி பொது வெளியில் நடைபாதைகளில் கட்டப்பட்டுள்ள எந்த மத வழிபாட்டுத் தலங்களும் உடனே அகற்றப்பட வேண்டும்.
கடவுள் இல்லை என்று சொல்கிறவர்கள் இப்படி சொல்லுவதாகக் கருதக் கூடாது, அப்படி சொல்லப் போனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடவுள் மறுப்ாபளர்களா?
சட்டத்துக்கு முன் அனைத்தும் சமம் என்பது ஒரு பக்கம் மக்களின் நடமாட்டத்துக்கு இடையூறு இன்னொரு பக்கம் என்பதையெல்லாம் கவனத்திற்கொண்டு அரசுகள் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.