ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்!
அ.தி.மு.க.வுக்கு அமைச்சா் துரைமுருகன் பதில்
சென்னை, அக்.3- முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்தி, நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடா்பாக அதிமுக சாா்பில் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிக் கப்பட்டுள்ள நிலையில், அந்த விவகாரம் தொடா்பாக அமைச்சா் துரைமுருகன் 1.10.2024 அன்று வெளியிட்ட அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை மற்றும் பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு, அணையின் நீா்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயா்த்தலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறாா்.
பிரதமருக்கு கோரிக்கை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து கேரள அரசு ஒத்துழைக்க அறிவுரை வழங்கும்படி பிரதமருக்கு அளித்த கோரிக்கை மனுவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். மேலும், ஒன்றிய நீா்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்தபோது எனது சாா்பிலும் மனு அளிக்கப்பட்டது.
இதனிடையே, நீதிமன்றத்திலும் தமிழ்நாடு அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளுடன் கேரள அரசை வலியுறுத்தும் பணியையும் செய்து வருகிறோம். கேரள நீா்வளத் துறை அமைச்சருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் எழுதிய கடிதத்தில், பேபி அணை அருகே யுள்ள மரங்களை அகற்ற விரைவில் அனுமதி அளிக்கு மாறு கேட்டுக் கொண்டேன்.
முல்லைப் பெரியாறு அணையின் மேற்பாா்வைக் குழுவின் அறிவுரைப்படி இரு மாநில தலைமைச் செயலா்கள் கூட்டத்திலும் இந்தப் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.
குழப்ப வேண்டாம்: கேரள அரசுக்கு கடிதங்களின் வாயிலாகவும், மேற்பாா் வைக் குழுக் கூட்டங்களின் மூலமாகவும், பேபி அணையின் மீதமுள்ள பகுதிகளை முடிக்கத் தேவையான அனுமதியை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது.
அணையைப் பலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு, அதன் நீா்மட்டத்தை 152 அடி வரை உயா்த்துவதன் மூலம், தமிழ்நாட்டின் உரிமை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பாசன விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
திமுக தலைமையிலான அரசு, தமிழ் மொழி மற்றும் மாநில உரிமைகளுக்காக எப்போதும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது.
அண்டை மாநில நதிநீா் பிரச்சினையில் அரசியல் லாபம் கருதி வெற்று அறிக்கைகளையும், போராட்டங்களையும் அறிவிக்கும் அதிமுக, மக்களைக் குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கப்பூா்வமாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாா்.