‘‘இந்தூரில் நவராத்திரியை ஒட்டி நடைபெறும் ‘கர்பா’ நிகழ்ச்சிக்கு ‘கோமியம்’ குடிப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் இந்துக்கள்தானா என்பதை கண்டறிய முடியும். உண்மையான ஹிந்துக்கள் கோமியத்தை தெய்வப் பிரசாதமாக மதித்து குடிப்பார்கள். வெறுக்கவோ அருவருப்பு அடையவோ மாட்டார்கள்’’ என்று இந்தூர் மாவட்ட பா.ஜ.க. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நவராத்திரி என்னும் துர்க்காபூஜையை ஒட்டி 9 நாள் கோலாட்ட நடனமான கர்பா நடைபெறும். இந்த நிகழ்ச்சியை பார்க்கச் செல்லும் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்துகள் தொடர்ந்து கொல்லப்படும் நிகழ்வுகள் சமீப காலமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஆண்டு குஜராத்தில் இரு சக்கர வாகனத்தில் மீது ஏறி நின்று கர்பா நடனத்தைப் பார்த்த தாழ்த்தப்பட்ட நபரின் கால்களை உடைத்துள்ளனர். அதே போல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் இஸ்லாமியர்களும் தலித்துகளும் கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் பாஜகவினர் பல்வேறு அறிவுப்புகளை அறிவித்து வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் தங்களின் கைப்பேசி யிலேயே கர்பா நடனத்தைப் பார்க்கலாம் என்றும், கர்பா நடனம் நடைபெறும் இடத்திற்கு வந்து தீட்டாக்கி விடவேண்டாம் என்றும் வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்புகின்றனர்.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்திலும் இந்தூர் பாஜக தலைமை ‘‘கர்பா நடனம் பார்க்க வருபவர்கள் நுழைவாயிலில் வைத்திருக்கும் மாட்டு மூத்திரத்தை (கோமியம்) ஒரு டம்ளர் குடித்து விட்டுத்தான் நுழைய வேண்டும்
உண்மையான ஹிந்துக்கள் பசுவைத் தாயாக மதிப்பவர்கள், ஆகவே அவர்கள் மாட்டு மூத்திரம் குடிப்பதைப் புனிதமாக கருதுவார்களாம்.
உண்மையான ஹிந்துக்கள் புனிதமான கோமி யத்தைப் பக்தியோடு குடிப்பார்கள். இதன் மூலம் உண்மையான ஹிந்துக்களை அறிந்து கொள்ளலாம், மாட்டு மூத்திரத்தைக் குடிக்காமல் செல்பவர்கள் ஹிந்து மதத்தில் இருக்கத் தகுதியற்றவர்கள். அவர்களை வெளியே அனுப்பிவிடலாம்’’ என்று மாவட்ட பாஜக தலைவர் ஷிண்டு வர்மா இந்தூரில் உள்ள அனைத்து கர்பா நடனக் குழுக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
பாஜக தலைமையின் அறிக்கை நுழைவாயில்களிலும் ஒட்டப்படவேண்டும் என்று உத்தராவிடப்பட்டுள்ளதால், கர்பா நடன நிகழ்ச்சி நடத்தும் குழுவினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகர்மன்ற பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சில பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்துத் தலைவர்கள் பாஜகவிற்குத் தாவி உள்ளனர். இவர்களை அழைத்து ஜெய்ப்பூரில் புனிதப்படுத்தும் விழா நடைபெற்றது.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் ஹெரிடேஜ் நகர சுயேட்சை வேட்பாளரான மேயர் முனேஷ் குர்ஜார் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதன் காரணமாக அவர் பதவியில் இருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த குசும் யாதவ் என்பவரை பாஜ மேயராக நியமித்தது. இவருக்கு 7 காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர் ஒருவரும் ஆதரவு அளித்தனர். இவர்கள் 8 பேரும் பின்னர் பாஜவில் இணைந்தனர்.
அதே போல் பல பஞ்சாயத்து மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த கவுன்சிலர்களை புனிதப்படுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாஜகவில் இணைந்த கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வேத மந்திரங்கள் முழங்க, கங்கை நீர் மற்றும் கோமியம் தெளிக்கப்பட்டது. இதன் மூலமாக ஊழல் கறைபடிந்த கவுன்சிலர்கள் புனிதமடைவார்கள்; அவர்கள் ஸநாதனிகள் மற்றும் புனித மனிதர்களாக மாறுவார்கள் என்று ராஜஸ்தான் ஹவாமகல் பா.ஜ.க.. சட்டமன்ற உறுப்பினர் சாமியார் பால்முகுந்த் ஆச்சார்யா தெரிவித்தார்.
செவ்வாய்க்கோளில் குடியேற முன் பதிவு செய்வதுபற்றி உரையாடல் நடந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில் மாட்டுமூத்திர மகாத்மியத்தை பா.ஜ.க. கையில் எடுத்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடே!
திருப்பதி லட்டுக் கலப்படம்பற்றிய வழக்கு எல்லாம் உச்சநீதிமன்றம் சென்று விட்டது. மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் பசு மாட்டுக் கழிவான மூத்திரத்தைக் குடிக்கச் செய்வதுபற்றி தானாக முன்வந்து விசாரிப்பது அவசியம் இல்லையா? மதப் பிரச்சினை என்பதால் மூத்திரத்தைக் குடிக்கச் செய்ய அனுமதிக்கலாமா? ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டாமா?