தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
ராமராஜ்ஜியம் பேசிய காந்தியாரை மகாத்மா என்று சொன்னவர்கள், ‘‘நான் சொல்லும் ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு’’ என்று சொன்ன நிலையில் காந்தியாரைத் தீர்த்துக் கட்டினர். காந்தியார் பிறந்த இந்நாளில், காந்தியார் பிற்காலத்தில் வற்புறுத்திய சமூகநீதி, மதச் சார்பின்மை காப்பாற்றிட உறுதியேற்போம் – இதுவே காந்தியார் பிறந்த நாளில் நாம் எடுக்கும் உறுதிமொழியாகட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று நமது ‘நாட்டுத் தந்தை’ என்று அனைவரும் பெருமையோடு அழைத்திடும் அண்ணல் காந்தியடிகளின் 156ஆவது பிறந்த நாள்!
அவர் மதவெறிக்குப் பலியானவர். அடிப்படையில் அவர் ஒரு நாத்திகர் அல்ல; ஆனால், ‘‘மற்றவர்கள் கூறும் இராமன் வேறு; எனது இராமன் வேறு’’ என்று கூறியவர்!
இந்துத்துவா என்ற இன்றைய ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே மொழி என்ற கொள்கையினை ஏற்காதவர்.
அவரது இறுதிக் காலத்தில் (அவர் மதவெறியரால் சுட்டுக் கொல்லப்படும்வரை) வர்ணாசிரமத்தில் நம்பிக்கை உள்ளவராகத் திகழ்ந்தாலும்கூட மதச்சார்பற்ற அரசு என்பதை வலியுறுத்தியதோடு, அரசியலில் மதம் தனது மூக்கை நுழைக்கக் கூடாது என்று வலியுறுத்தியவர்.
காந்தியாரின் தொடக்க நிலையும் பிற்கால நிலையும்
தொடக்கத்தில் தமிழ்நாட்டின் வகுப்பு வாரி உரிமையைப் பற்றி புரிதலின்றி இருந்தாலும், பிறகு பார்ப்பன ஏகபோகம் படிப்பிலும், உத்தியோகங்களிலும் ஏற்பட்டிருப்பதை உணர்ந்த காரணத்தினால் பார்ப்பனர்களைப் பார்த்து ‘வேதம் ஓதுதல் தானே வேதியருக்கு அழகு என்று நிர்ணயிக்கப்பட்ட பின் உங்களுக்கு எதற்கு டாக்டர், இன்ஜினியர் படிப்புகள்?’ என்று ஓங்கிக் கூறிய காரணத்தால் ஆரியம் அவரை விட்டு வைக்கக் கூடாது என்று நினைத்து, ‘125 வயது வரை வாழ்வேன்’ என்று கூறியவரை அதற்கு வழிவிடாமல் கோட்சே மூலம் சுட்டுக் கொன்று தனது மதவெறியைத் தீர்த்துக் கொண்டது! ‘ராமராஜ்ஜியம் அமைப்போம்’ என்று சொன்னபோது காந்தியார் மகாத்மா காந்தியார் – ‘நான் சொல்லும் ராமன் வேறு, அயோத்தி ராமன் வேறு’ என்றும், ‘மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும்’ என்றும் சொல்ல ஆம்பித்தவுடன் தீர்த்துக் கட்டி விட்டனர்.
மதவெறி எவ்வளவு ஆபத்தானது மனித குலத்திற்கு என்பதை இந்தக் கறைபடிந்த வரலாறு மூலம் பாடம் கற்று, அதிலிருந்து மீளுவதற்குப் பதிலாக, அந்த மதவெறியே மகுடம் சூட்டிக் கொண்டு, மனுதர்ம ராஜ்ய பரிபாலனம் செய்வது மகா மகாக் கொடுமை அல்லவா!
அரசமைப்புச் சட்டத்தின்படி பிரமாணம் எடுத்துக் கொண்டவர்களே அதன் பீடிகையில் உள்ள கொள்கைக்கு எதிராகப் பேசுகிறார்கள்; நடந்து கொள்கிறார்கள். காந்தி சிலைக்கும், காந்தி படத்திற்கும் மாலை போடும் விந்தை, இரட்டை நிலைப்பாடு கண்கூடாகத் தெரிகிறது! என்னே விசித்திரர்!!
காந்தியார் பிறந்த மண் – காவி மண்ணாகலாமா?
காந்தி பிறந்த மண் இன்று ‘காவி மண்ணாகி’, அங்கே நடந்த மதவெறியின் கொடுமைபற்றி பல தீர்ப்புகளில் உச்சநீதிமன்றமே கண்டனம் செய்யும் அளவுக்கு நாட்டில் ஜனநாயகம் சீரழிக்கப்பட்டு, சின்னா பின்னமாக்கப்படுகிற அவலம்!
தந்தை பெரியார் 1927இல் பெங்களூருவில் காந்தியாரைச் சந்தித்து உரையாடியபோது, உங்களை மதவெறியர்கள் விட்டு வைக்க மாட்டார்கள்’’ என்று முன்னோக்குடன் எச்சரித்தார்! அது நடந்ததா இல்லை
பெரியார் மண்ணை காவியாக்கிட எவ்வளவு ‘கஜகர்ணம்’ போட்டாலும் அந்த மதவெறி சக்திகளை குஜராத்தைப் போல் இங்கே கால் ஊன்ற முடியாமல் தடுத்து நிறுத்தி, விரட்டி அடித்து ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ தரும் சமூகநீதி அரசினையல்லவா மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவாக்கி வரலாறு படைத்து வருகிறார்.
‘மதவெறி மாய்ப்போம்; மனிதநேயம் காப்போம்’ என்று முழங்கி வீறு நடைபோடுகிறார்.
காந்தியார் சிலைக்கு மாலை போட
ஆளுநருக்கு உண்மையான தகுதி உண்டா?
காந்தி சிலைக்கு மாலை போட ஆளுநர் எடுத்துக் கொள்ள, யாருக்கு உண்மையான தகுதியும், உரிமையும் உண்டு?
காந்தியாரை சமூகநீதிப் பக்கம் திரும்ப வைத்தது பெரியாரின் மண்தான்!
அவர் தனது பத்திரிகையில் இதை ‘திராவிட தேசம்’ என்று எழுதி அழைத்துள்ளார்!
‘முந்தைய காந்தி வர்ணாசிரம காந்தி
பிந்தைய காந்தி சமூகநீதி, மதச் சார்பின்மைக்கு
வாதாடிய மகத்தான தலைவர்’
என்று கூறிய தந்தை பெரியார், காந்தியார் உயிர் தியாகத்தின் பின் வரலாற்றில் அவருக்குத் தனிப் பெருமை உண்டாக்கிட, இந்த நாட்டை ‘காந்தி நாடு, மதத்தை காந்தி மதம்’ என்று மாற்றி அழையுங்கள் என்று கூறி, காந்தியார் படுகொலையின்போது மற்ற மாநிலங்களில் கலவரம் வெடித்துப் பார்ப்பனர்கள் தாக்குதலுக்கு உள்ளானதுபோல் இங்கு ஆகாமல் தடுத்து அறிவுரை கூறி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக்கியவர் தந்தை பெரியார் அல்லவா?
எனவே நாம் காந்தியாரைப் போற்றுவது சடங்கோ, சம்பிரதாயமோ அல்ல; மதவெறி, ஜாதிவெறி, பதவிவெறி, வன்முறை இல்லா ஒரு புதியதோர் சமூகத்தைக் கட்டமைக்கவே!
காந்தியடிகளார் மறைவில்லை; மதவெறி நீங்கிய அத்துணை பேர்களின் நெஞ்சில் நிறைந்தவராகிறார்!
சென்னை
2.10.2024
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்