சென்னை, அக் 2- இந்த ஆண்டுக்கான காற்றாலை பருவகாலம் நேற்றுடன் முடிந்ததால், அனல்மின் உற்பத்தியை அதிகரிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி 9,150 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. இவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் சொந்த மின் பயன்பாட்டுக்கும், எஞ்சியதை மின்வாரியத்துக்கும் விற்பனை செய்கின்றன.
ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை பருவகாலம் ஆகும். நடப்பு பருவகாலத்தில் காற்றாலை மின் நிலையங்களில் இருந்து நாள்தோறும் சராசரியாக 3 ஆயிரம் முதல் 4,500 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதத்திலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், மின்தேவை அதிகரித்தபடி இருந்தது.
மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
இந்நிலையில், காற்றாலை பருவகாலம் 30.9.2024 அன்றுடன் முடிந்தது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘இந்த ஆண்டுக்கான காற்றாலை பருவகாலம் 30.9.2024 அன்று முடிவடைந்தது. எனினும், அடுத்த ஒரு சிலநாட்களுக்கு காற்றின் வேகம்இருக்கும் என்பதால் காற்றாலை மின் உற்பத்தி நடைபெறும். பின்னர் காற்றாலை மின் உற்பத்தி படிப்படியாக குறையும். இந்தஆண்டு செப்.10ஆம் தேதி காற்றாலை மூலம் மிக அதிகபட்சமாக5,838 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. காற்றாலை மின்சாரம் அதிகம் கிடைத்ததால் அனல் மின் உற்பத்தி குறைக்கப்பட்டது. வரும் நாட்களில் அனல் மின் உற்பத்தி மீண்டும் அதிகரிக்கப்படும். அத்துடன், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தினசரி மின்தேவை குறையும். எனவே, தினசரி மின்தேவை எளிதாக பூர்த்தி செய்யப்படும்’’ என்றனர்.
ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ்
அலைபேசி உற்பத்தி ஆலை விரிவாக்கம்
ஒசூர், அக்.2- ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் அலைபேசி உற்பத்தி ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ஏற்கெனவே ரூ.3,051 கோடி முதலீட்டில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை செயல்பட்டு வரும் நிலையில் மேலும் ரூ.3,699 கோடி முதலீட்டில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள ஆலை, மேலும் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இதில் “அய்-போன்கள்” உற்பத்தி செய்யப் படவுள்ளது. இதன்மூலம் 80,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். தற்போது தினசரி 92,000 அலைபேசிகள் உற்பத்தியாகும் நிலையில் 2 லட்சம் அலைபேசிகளை உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அலைபேசி உதிரிப் பாகங்கள் தயார் செய்யும் இந்த தொழிற்சாலையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் அலைபேசி உற்பத்தி ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே 1.49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள ஆலை, மேலும் 5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. கடந்த 29ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.