வரவேற்கத்தக்க அரிய தீர்ப்பு! சாலைகள், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் எல்லா மதக் கோயில்களையும் இடிக்க வேண்டும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, அக்.2- மதத் தளங்களை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அசாம்,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் உடனுக்குடன் புல்டோசர்களால் இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக இந்த புல்டோசர் நடவடிக்கை அதிகம் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்களின் வீடுகள் மீதே குறிவைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

இதுதொடர்பான வழக்குகள் குறித்த விசாரணையில் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி வீடுகளை இடித்த அசாம் பாஜக அரசுக்கு நேற்று (1.10.2024) நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை வழங்கப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை இன்றுடன் நிறைவடையும் நிலையில் புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்குகள் மீண்டும் இன்று நீதிபதிபர் பி ஆர். காவாய், கே.வி. விஸ்வநாதன் அமர்வில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அரசுகள் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா, இடிக்கப்படும் வீடுகள் மட்டும் கட்டடங்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே தாக்கீது வழங்கப்பட்டது என்று வாதிட்டார். மேலும் குறிப்பிட்ட சமூகத்தினர் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுவதை வைத்து நீதிபதிகள் பேசுவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “நமது நாடு ஒரு மதச்சார்பற்ற நாடு, எங்களது [நீதிபதிகளது] பேச்சு மதம் மற்றும் சமுதாயங்களுக்கு அப்பாற்பட்டது. மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதினால் சாலைகளிலும், நடைபாதைகளிலும், நீர்நிலைப் பகுதிகளிலும், ரயில்வே லைன் பகுதிகளிலும் உள்ளவற்றை இடித்து அகற்றலாம் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம்.

நடு சாலையில் ஒரு மதத் தளம் இருக்கு மாயின், அது குருதுவாரா [சீக்கியர்களின் புனித கோவில்] ஆக இருந்தாலும், மசூதியாக இருந்தாலும், இந்து கோவிலாக இருந்தாலும் அது மக்களுக்கு இடைஞ்சலாக இருப்பது கூடாது. சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான், அது மதம் சார்ந்தோ தனிநபர் நம்பிக்கை சார்ந்தோ இருக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *