விருதுநகர், அக்.2- 3 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில் 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இருக்கிறோம் என்று விருதுநகரில் நேற்று (1.10.2024) நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
விருதுநகரில் அரசு விழா
விருதுநகரில், 450 ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் விழா நேற்று (1.10.2024) நடைபெற்றது. மேலும், முதலமைச்சர் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நலத்திட்ட உதவி
சிறப்பு விருந்தினராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பஞ்சாயத்துகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:-
கலைஞர் விளையாட்டு உபகர ணங்கள் வழங்கும் திட் டத்தின் மூலம் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கியதை நினைத்து பெருமை அடைகிறேன். இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், நான் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் சென்னைக்கு வெளியே கலந்து கொள்ளும் முதல் அரசு நிகழ்ச்சி இதுவாகும்.
100 வீரர்களுக்கு அரசு வேலை
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டுத் துறையினருக்கு 3 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்க இருக்கிறோம். விளையாட்டுதுறை மட்டும் அல்லாமல் திராவிட மாடல் அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது .
வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது என்று ஒன்றிய அரசின் நிட்டிஆயோக் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இந்தியாவிலேயே அதிக தொழிற் சாலைகள் கொண்ட மாநிலம் தமிழ் நாடுதான். அதேபோல் இந்தியாவிலேயே அதிக வேலைவாய்ப்பு தரும் மாநிலமும் தமிழ்நாடுதான்.இப்படி எல்லா துறைகளிலும் இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது.
கலைஞர் ஆல்-ரவுண்டர்
ஒரு விளையாட்டு வீர னுக்கு இருக்கிற அத்தனை திறமைகளும் கலைஞரிடம் இருந்தது. அவர் ஒரு ஆல்- ரவுண்டர். அதனால்தான் இந்த திட்டத்துக்கு ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம்’ என பெயர் வைக்கப்பட்டது.எப்போதும் யாராலும் வீழ்த்த முடியாத ஒரு அரசியல் வீரனாக கலைஞர் திகழ்ந்தார். விளையாட்டு வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் திராவிட மாடல் அரசு என்றைக்கும் துணை நிற்கும்.
– இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மொத்தம் 2,386 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 85லட்சத்து 49 ஆயி ரத்து 101 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.