நாம் வாழும் சமூகத்தில் உள்ள எல்லா மக்களும் எல்லா உரிமைகளும் சமத்துவமும் சுயமரியாதையும் சுதந்திரமும் பெற்று வாழ ஓங்கி ஒலித்த குரல் வந்த இடம், பெரியார் வாழ்ந்த இடம், இன்றும் தத்துவமாய் வாழும் இடம் சமூகநீதியின் தலைமையிடமான பெரியார் திடல் ஆகும். மூடநம்பிக்கை ஒழிய, ஜாதி வேர் அறுக்க, பெண் உரிமை பெற தன் சிந்தனைகளை எளிய மக்கள் நடையில் ‘விடுதலை’ நாளிதழ் வழி எழுதி புரட்சி செய்தார் பெரியார். தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்த அந்த விடுதலை நாளிதழின் அச்சுக் கூடம் இயங்குவதைக் காணும் பேர் உவகையில் தஞ்சாவூரில் உள்ள நீதிக்கட்சி வழி வந்த தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அங்கமாக விளங்கும் தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை மாணவர்கள் 20 பேரும் 4 பேராசிரியர்களும் புறப்பட்டோம். அதற்காக முறையான அனுமதிக் கடிதம் கல்லூரியின் முதல்வர் வழி அனுப்பி இருந்தோம். அக்கடிதம் கண்ட திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் வெளிநாட்டில் இருந்து எங்கள் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் ந.எழிலரசன் அவர்களைத் தொடர்பு கொண்டு அனுமதி வழங்கியதோடு பயண விவரங்கள், தங்கும் ஏற்பாடுகள் குறித்து விசாரித்தார். நாங்கள் தங்கும் விடுதியின் பெயரைச் சொன்னோம்.
தமிழவேள் நிறுவிய கல்லூரியில் இருந்து வரு கிறீர்கள் – உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பெரியார் திடலில் தங்குவதற்கு இடமும் உணவும் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி எங்களை நெகிழ வைத்தார். அவர் எங்கள் கல்லூரி மாணவர்கள் மீது கொண்ட அன்பும் அரவணைப்பும் வியக்க வைத்தது. திடலுக்குச் செல்லலாம் என நாங்கள் முடிவெடுப்பதற்குள் திடலில் இருந்து அழைப்பு வந்தது. எத்தனை மாணவர்கள்? எத்தனைப் பேராசிரியர்கள்? ஆண்கள் எத்தனை பேர்? பெண்கள் எத்தனை பேர்? என்ற விவரங்களைக் கேட்டறிந்து, நாங்கள் திடலுக்குள் நுழைந்தவுடன் எங்களுக்கான அறைகள் ஒப்படைக்கப்பட்டன.
நெகிழ வைத்த ஆசிரியர்
பத்திரிகை உலகின் 60 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவரும் பெருமையும் சிறப்பும் விடுதலை நாளிதழின் ஆசிரியர் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கே சேரும். தந்தை பெரியாரின் சிந்தனைகளையும் கொள்கைகளை யும் பரப்பும் பணிகளை தமிழினத் தலைவராக ஆசிரியர் அப்பணியைச் செம்மையுற செயலாற்றி வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் பயணம் மேற்கொண்டு அங்கு வாழும் தமிழர்கள் இணைந்து நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு சென்னை திரும்பியிருந்தார். அப்பயணம் குறித்து சென்னை பெரியார் திடலில் நாங்கள் தங்கியிருந்த மாலை வேலையில் ஜப்பானில் ஈரோட்டு பூகம்பம் என்ற தலைப்பில் விழாவாக நடைபெற்றது .
ஆசிரியர் எளிமையான தோற்றம், எங்கள் ஊடகவியலாளர் பயணம் குறித்து அவர் கேட்டறிந்த விதம் – எல்லா ஏற்பாடுகளும் சரியாக இருக்கா? என அவர் வினவியது, மாணவர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டது, எல்லா மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் மயில்சாமி அண்ணாதுரை எழுதிய பெரியாரின் அறிவியல் சிந்தனைகள் என்னும் புத்தகத்தினை வழங்கியது, மாணவர்கள் எப்போதும் அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் – புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியது. அவரின் நடை, பேச்சு, தேனீ போன்ற சுறுசுறுப்பு என அனைத்தும் எங்களுக்கு வியப்பாகவும் படிப்பினையாகவும் இருந்தன. ஆசிரியர் என்றால் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பர் . எங்களுக்கு நீங்கள் தான் முன் மாதிரி ஆசிரியர். ஆசிரியர் என்ற பதம் உங்கள் ஒருவருக்கே உரித்த தாகும். பேரன்பும் பெருநன்றியும் அய்யா!
– முனைவர் ப.ஜெயராஜ்
உதவிப் பேராசிரியர்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி, தஞ்சாவூர்.
எங்கள் கல்லூரியில் இருந்து சென்னைக்குக் கல்விச்சுற்றுலா சென்றிருந்தோம்.
சுற்றுலா கண்ணிற்கு விருந்தளித்தது மட்டும் அல்ல. நல்ல கண்ணோட்டத்தினையும் வளர்த்துள்ளது. பெரியாரின் சிந்தனை தளும்பும் கடலில் மூழ்கி முத்தெடுத்ததின் அனுபவம். என்னை வியக்க வைத்தது விடுதலை நாளிதழின் ஆவணம் –1925 லிருந்து இன்று வரை குடி அரசு, விடுதலை நாளிதழ்கள் ஆவணம் செய்யப்பட்டு வருவது சிறப்புக்குரியது. மாணவர்கள் தங்களின் ஆய்விற்குப் பயன்படுத்தலாம்.
என்னை நிதானப்படுத்திய களம் பெரியாரின் நினைவிடம்.” நாடு, மொழி, கடவுள், மதம், ஜாதி எந்தப்பற்றும் இன்றி மனிதப் பற்றுடன் வாழ்வதே பகுத்தறிவு” என்னும் விழுமியக் கருத்து என் மனதை வருடியது. சுயமரியாதைத் திருமணம் என்பதைக் கேள் விப்பட்டிருக்கிறேன். பார்த்தது இல்லை. “எங்களுக்கு இன்று திருமணம்”. என்று இனிப்பை நீட்டினார் ஒரு பெண் . கழுத்தில் சிறு மாலை மட்டும் இருந்தது. மக்கள் கூட்டம் இல்லை;
மந்திரம் ஓதவில்லை; பந்தியில் வரிசை கட்ட ஆளில்லை; எளிமையான முறையில் நடந்து முடிந்திருந்த திருமணம்.
அப்போது நான் என் திருமணத்திற்கு அப்பா வாங்கிய கடனை நினைத்து வருந்தினேன்.
அடுத்து ஆசிரியர் அவர்களின் அணுகுமுறை வியப்பை அளித்தது. புத்தகத்தின் அட்டைப்படத்திலும் தொலைக்காட்சி பெட்டியிலும் பார்க்கும் மனிதர்களின் உண்மை முகம் மாறுபடுவது இயல்பு.
ஆனால், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேடைக் கொன்று, இயல்புக்கொன்று என்று அல்லாமல் எங்களை யெல்லாம் அன்பு நெறியிலும் விருந்தோம்பல் பண் பிலும் நெகிழ வைத்துவிட்டார். வாழ்க பெரியார்! வளர்க பெரியார் திடல்!
– சா.கிருத்திகா,
உதவிப் பேராசிரியர்,
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி, தஞ்சாவூர்.