தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டு தலின்பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களது படைக்கலன்கள் எல்லாம் ஆயுத பூசைக்காகக் கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன மந்திரிகளையும், பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், “மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்” என்று சொன்னார்கள்.
மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.
வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயாசமாகவும் வாயில் கவ்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன. இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமல தாசன், “வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்க வில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது” என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தா மலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.
இதனால் தானோ “பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கர் துரைத்தனம் கெட்டது!” என்ற பழமொழி ஏற்பட்டது போலும்.
ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா!