அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, அக்.1- சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவையில் உள்ள விவசாய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி எஸ்.காமராஜ் என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், ‘‘எனது மகள்கள் கீதா (வயது 42), லதா (39) ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர். யோகா கற்றுக்கொள்வதற்காக ஈஷா யோகா மய்யத்துக்கு சென்ற இருவரும் பின்னர் மூளைச்சலவை செய்யப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு துறவி களாகி விட்டனர். அவர்களை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி, சிவஞானம் ஆகியோர் முன்பு நேற்று (30.9.2024) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, துறவறக் கோலத்துடன் மனுதா ரர்களின் மகள்கள் நேரில் ஆஜரா கினர். ஈஷா யோகா மய்யம் தரப்பில், இந்த ஆட்கொணர்வு வழக்குக்கும், அந்த நிகழ்விற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, என வாதிடப்பட் டது.
இதையடுத்து நீதிபதிகள்,‘‘இந்த வழக்கில் பல சந்தேகங்கள் உள்ளதால் பின்னணியை அறிய வேண்டியுள்ளது. எனவே ஈஷா யோகா மய்யம் மீது எத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற விவரங்களை காவல்துறையினர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 4 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளனர்.