27.4.2024 அன்று தெலங்கானா மாநிலத்திலிருந்து பாரதிய ராஷ்டிரிய சமிதியின் முன்னணித் தலைவர்கள் சென்னை – பெரியார் திடலுக்கு வந்தனர். தமிழ் நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட மாடல் ஆட்சி நடை பெற்றது. இன்றைக்கும் நீடிக்கின்ற நிலை யில் தமிழ்நாட்டின் தனித் தன்மையின் வளர்ச்சி, முன்னேற்ற சீர்திருத்தம், சமூக நீதித் தளங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள் ளது குறித்து அறிந்திட நேரில் வருவது அந்தத் தலைவர்களின் பயண நோக்கமாக இருந்தது.
வருகை தந்த தலைவர்கள்
தெலங்கானா மாநிலம் அமந்த பிறகு தொடங்கப்பட்ட சட்டமன்றத்தின் முதல் சபாநாயகராகவும், இன்றைக்கு சட்டமன்ற மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள எஸ். மதுசூதன சாரி, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் பண்டா பிரகாஷ், மேனாள் தெலங்கானா அமைச்சர் சீனிவாச கெவுடு மாநிலங்களவை உறுப்பினர் வாடிராஜு ரவிச்சந்திரா, இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கமலாகர் மற்றும் அவர்கள் சார்ந்த பாரதிய ராஷ்டிரிய சமிதியின் தோழர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்து அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விளக்கம் கேட்டு அறிந்து கொண் டனர்.
பெரியார் அருங்காட்சியகம்
பெரியார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு அதில் உள்ள ஒளிப்படங்கள் மற்றும் தகவல்கள் பற்றி அறிந்து பெரிதும் வியப்படைந்தனர். திராவிடர் இயக்க வரலாறு, ஜஸ்டிஸ் கட்சி தொடங்கி இன்றைய நிலைவரை உள்ள விவரங்களை திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன், வெளியுறவுச் செயலாளர் கோ. கருணாநிதி மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் எடுத்துக் கூறிவிளக்கினார்கள். ஒரு கட்டத்தில் திரு.கே. சந்திரசேகரராவ் தெலங்கானா மாநில முதலமைச்சராக இருந்த பொழுது, மொத்த இடஒதுக்கீடு அளவு 50 விழுக்காட்டை தாண்டக் கூடிய நிலையில் அதனைப் பாதுகாப்பது குறித்து – அந்த நிலை தமிழ்நாட்டில் எழுந்த பொழுது திராவிடர் கழகம் எவ்வாறு அதனை நேர் கொண்டு 69 விழுக்காடு அளவினை அரசமைப்புச் சட்டப் பிரிவின்படி பாதுகாத்தது என்பது குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கடிதம் எழுதிய செய்தியினை வந்த தெலங்கானா தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
தமிழர் தலைவருடன் சந்திப்பு – உரையாடல்
பெரியார் திடலைச் சுற்றிப் பார்த்தபின் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தனர். தெலங்கானா மாநில அரசியல் தலைவர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்தமைக்கு ஆசிரியர் தமது மகிழ்ச்சியினை தெரிவித்து வரவேற்றார்.
தந்தை பெரியாரின் தலையாய பணி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டிற்கும் சமூக நீதித் தளத்தில் ஒரு வலுவான அடிப்படையை உருவாக்கியது என்பதை சட்ட விளக்கங்களுடன் தமிழர் தலைவர், வந்த தலைவர்களுக்கு எடுத்துரைத்தார். சுயமரியாதை இயக்கம் 100 ஆண்டில் நடைபோடுகிறது. அந்த காலக் கட்டத்தில் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திராவிடர் இயக்கத்திற்கு முற்றிலும் எதிரான சித்தாந்தங்களைக் கொண்டது எனக் குறிப்பிட்டார். அந்த சித்தாந்தங்கள் மற்ற மாநிலங்களில் காலூன்ற முயலும் வேளையில் – ஓரளவு தடம் பதித்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எந்த சிறு மாறுதலையும் ஏற்படுத்திட முடியவில்லை. இதற்கு காரணம் தந்தை பெரியார் இந்த மண்ணில் விதைத்த சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளே; அதன் வழி நடைபெறுகின்ற ‘திராவிட மாடல்’ நல்லாட்சியின் சாதனைகளே என்று தமிழர் தலைவர் கூறினார். ஆசிரியர் அவர்களது பேச்சை முடிக்கும் பொழுது நாம் அனைவரும் இணைந்து சமூகநீதி மற்றும் பிற தளங்களில் பணிபுரிவோம் எனக் கூறியதும், உடனே, ‘‘‘இல்லை இல்லை’; இணைந்து அல்ல, உங்களை நாங்கள் பின்பற்றுகிறோம்’’ என தெலங்கானா மாநில தலைவர்கள் தெரிவித்தனர்.
தமிழர் தலைவரிடம் மகிழ்ச்சியுடனும், புத்தாக்க செய்தி நினைவுகளுடனும் விடை பெற்ற தலைவர்களுக்கு இயக்கப் புத்தகங்கள், சில தெலுங்கு மொழியில் வந்தவை உட்பட வழஙகப்பட்டன. தெலங்கானா மாநிலத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை தர வேண்டும் என்ற வேண்டுதலையும் விடுத்துச் சென்றனர்.