சென்னை, செப்.30- வாரிசு அரசியல் பற்றி பேச பா.ஜனதாவுக்கு தகுதி இல்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் இந்திரா தோழமை சக்தி இயக்க மாநில ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று (29.9.2024) நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திரா தோழமை சக்தி இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு, புதுச்சேரி ஒருங்கிணைப்பாளருமான லோகேஷ்குமார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில், இந்திரா தோழமை சக்தி இயக்க நிர்வாகி கார்த்திக், மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் சுபத்திர தேவி, ஜெயந்தி, தமிழ்மணி, ஜமால் ஹருனிசா, சிறீதேவி, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், எஸ்.காண்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதா வது:- தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தேர்தல் பத்திர விவரத்தை வெளியிட வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்த ஒரே கட்சி பா.ஜனதாதான். தற்போது கருநாடகாவில் தேர்தல் பத்திரம் மூலம் மிரட்டிப் பணம் வாங்கப்பட்டதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் வழக்கில் சிறை சென்று வந்த செந்தில்பாலா ஜியை கொண்டாடுவது வெட்கக்கேடானது என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமிமீதான ஊழல் குற்றச்சாட்டிற்கு அவரும் ஒரு நாள் சிறை செல்லலாம்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவது குறித்து வாரிசு அரசியலை முன்வைக்க பா.ஜனதாவிற்கு தகுதியில்லை. ராஜ்நாத் சிங் மகன், அமித்ஷா மகன் என மொத்தம் 60 பா.ஜனதா தலைவர்களின் வாரிசுகள் எந்தெந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்று பட்டியல் வெளியிட முடியும். -இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பத்திரம்:
நிர்மலா சீதாராமன்
மீது வழக்கு!
பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, செப்.30-தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிரட்டிப் பணம் வசூலித்ததாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது பெங்களூரு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து நிர்மலா சீதாராமன் பதவி விலகவேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘அரசியல் ரீதியாக வும், சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் குற்றவாளி என்பதால் நிதி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது. அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என்று தெரிவித்தனர். தேர்தல் பத்திர முறைகேடு விவகாரத்தில் நிதி அமைச்சர் தன்னிச்சையாக செயல் பட முடியாது என தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகிகள், இதில் நம்பர் 1, 2 யார் என்பதும், யார் வழிகாட்டுதலில் இவை நடந்தது என்பதும் நமக்கு தெரியும் என்றும் கூறினர்.