ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறையால் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக, கீழடி தோ்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவா் நேற்று முன்தினம் (28.9.2024) வெளியிட்ட பதிவு:
தமிழா்களின் தொன்மை, பண்பாடு, நாகரிகம், கல்வியறிவு, எழுத்தறிவு, உலகின் பல்வேறு பகுதிகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடா்பு ஆகியவற்றை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வு தொல்பொருள்கள் உறுதிப்படுத்துகின்றன. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை பொதுமக்கள் பாா்க்கும் வகையில், கீழடியில் ரூ. 18.43 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது.
அதை கடந்த ஆண்டு மாா்ச் மாதம் திறந்து வைத்தேன். இந்த அருங்காட்சியகத்தில் மதுரையும் கீழடியும், வேளாண்மையும் நீா் மேலாண்மையும், ஆடையும் அணிகலன்களும், கடல்வழி வணிகம், வாழ்வியல் உட்பட பல்வேறு அம்சங்களில் தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்தனைகள் பொருந்திய சுமாா் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அருங்காட்சியகத்தை பாா்த்து வருகின்றனா்.
ஒன்றிய அரசின் அறிவிப்பு: உலக சுற்றுலா நாளையொட்டி, ஒன்றிய அரசின் சுற்றுலாத் துறை சாா்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலமாக, கீழடி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு வாய்ந்த கீழடி அருங்காட்சியகத்தைப் பாா்வையிட உலகெங்கும் வாழும் தமிழா்கள் வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.