15.9.2024 அன்று சென்னை நந்தனத்தில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற பவள விழாவிற்குத் தலைமை வகித்த தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன் அவர்கள் மிகவும் முக்கியமான கருத்தை – சொல்லவேண்டிய கருத்தை – சொல்ல வேண்டிய இடத்தில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது – பாராட்டத்தக்கது.
என்ன கூறினார் தி.மு.க. பொதுச் செயலாளர்?
‘தினமலர்’ (20.9.2024) இதோ எழுதுகிறது.
என்ன தலைப்பு தெரியுமா? “ஆடிட், யோகாவுக்கு பிராமணர் வேண்டுமா?” என்பதாகும். இதோ!
“சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க., பவள விழாவில் பேசிய அக்கட்சியின் அமைச்சர் துரைமுருகன், அநாவசியமாக ஆவேசப்பட்டு, வார்த்தைகளைக் கொட்டி, பிராமண சமுதாயத்தை தாக்கி உள்ளார்.
‘தற்போதுள்ள சரித்திரத்தில் என்ன கேடு?ஹரப்பா, மொஹஞ்சதாரோ திராவிட நாகரிகம் என்றோம். அது ஆரியர்கள் நாகரிகம் என, சமீபத்தில் டில்லி அரசு, இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதற்காக அமைத்துள்ள கமிட்டி கூறுகிறது. அதாவது, அந்த ஆரிய நாகரிகம் சரஸ்வதி நாகரிகம் என்கிறது. கமிட்டியில்,17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் அரசு அதிகாரிகள்; மீதி, 14 பேரும் பிராமணர்கள். எனவே, மறுபடியும் பழைய பல்லவியை பாட வேண்டிய நிலை. இதே நிலை தொடர்ந்தால், தி.மு.க., தன் வீரியத்தைக் காட்டும் நிலை வரும்’ என உரையாற்றியுள்ளார் துரைமுருகன்.
ஒரு காரியம் செய்வோமா துரைமுருகன்? ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர், யூதர் ஒருவர் கூட தன் நாட்டில் இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை சித்ரவதை செய்து கொன்று குவித்ததைப் போல, இந்தியாவில் உள்ள பிராமணர்கள் அனைவரையும் கொன்று குவித்து விடுவோமா?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள்உட்பட, கடந்த மூன்றாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் திராவிட மாடல் கழக அரசு செய்யும் மற்றும் செய்து கொண்டிருக்கும் அக்கிரமங்களையும், அநியாயங் களையும் கண்டு கொள்ளாமல்,மத்திய அரசு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் பேசுவதா?
அதே கூட்டத்தில், ‘மாநில சுயாட்சி கொள்கை, நம் உயிர் நாடி கொள்கையில்ஒன்று. இப்போதுள்ள சூழலில் மாநில சுயாட்சியை வென்றெடுக்க வேண்டும்’என சூளுரைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அதிகப்பிரசங்கித்தனமாக மத்திய அரசையும், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் வரம்பு மீறி தாக்கிய மேற்கு வங்க தீதி மம்தா பானர்ஜியை, உச்ச நீதிமன்றம் அடக்கி வைத்திருப்பதை மறந்து விடாதீர்கள்.
உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க, பிராமணப் பெண் வேண்டும்; உங்கள் வருமான வரி கணக்குகளை சமர்ப்பிக்க பிராமண ஆடிட்டர் வேண்டும்; உடலில் உபாதைகள் உண்டானால், அதை சீராக்க பிராமண டாக்டர்கள் வேண்டும்; நீங்கள் யோகாசனம் பயில வேண்டும் என்றால், அதில் விற்பன்னர்களான பிராமணர்கள் வேண்டும்.
உங்களுடையை சேனலில் ஒளிபரப்ப ராமானுஜ ஐயங்கார் காவியம் வேண்டும்; உங்கள் குடும்பத்தினர் கோவில்களில் வழிபட்டு, அபிஷேக ஆராதனைகளும், யாகங்களும் நடத்த பிராமணர்கள் வேண்டும்; ஆனால், பிராமணர்கள் ஒருவரும் தமிழகத்தில் வாழக்கூடாது.
நன்றாக இருக்கிறதய்யா உங்கள் கொள்கை!
மத்திய அரசு நியமித்துள்ள அந்த சரஸ்வதிநாகரிகம் கமிட்டியில் சேர்க்க, அண்ணன் துரைமுருகனாருக்கு தெரிந்த தகுதியும், திறமையும் வாய்ந்த, பிராமணர்கள் அல்லாத, 14 பேரை பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்து, நியமனம் செய்ய கோருங்களேன் பார்க்கலாம்!
– தினமலர் (இது உங்கள் இடம்), 20.9.2024
இந்தப் பிரச்சினைக்குள் போவதற்கு முன், தினமலர் கடிதத்தில் கூறப்படும் சில விவரங்கள் கவனிக்கத்தக்கது.
“உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க பிராமணப் பெண் வேண்டும். உங்கள் வருமான வரி கணக்குகளை சமர்ப்பிக்க பிராமண ஆடிட்டர் வேண்டும். உடலில் உபாதைகள் உண்டானால், அதைச் சீராக்க பிராமண டாக்டர்கள் வேண்டும். நீங்கள் யோகா பயில வேண்டுமென்றால் அதில் விற்பன்னர்களான பிராமணர்கள் வேண்டும்.
உங்களுடைய சேனலில் ஒளிபரப்ப ராமானுஜ அய்யங்கார் காவியம் வேண்டும். உங்கள் குடும்பத்தினர் கோயில்களில் வழிபாட்டு அபிஷேக ஆராதனைகளும், யாகங்களும் நடத்த பிராமணர்கள் வேண்டும். ஆனால் பிராமணர்கள் ஒருவரும் தமிழகத்தில் வாழக் கூடாது… என்று ஆரவாரிக்கிறது ‘தினமலர்’.
ஒன்றை ஒப்புக் கொள்ள வேண்டும். டாக்டர்களும் ஆடிட்டர்களும் பார்ப்பனர் ஆதிக்கத்தின் கீழ் கோலோச்சுகிறது என்பதுதான் அது (இதனைத் திராவிட மாடல் அரசு கவனத்தில் கொள்ளுமாக!)
‘உங்களுக்குத் திருமணம் செய்து வைக்க பிராமணப் பெண் வேண்டும்’ என்கிறதே தினமலர் திருமணத்தைச் செய்விக்க எந்தப் பிராமணப் பெண் தேவைப்படுகிறார் – வருகிறார் – மண்டைக் காய்ந்து விட்டதா?
கோவில்களில் வழிபட்டு, அபிஷேக ஆராதனை களும், யாகங்களும் நடத்த பிராமணர்கள் வேண்டும் – என்கிறதே தினமலர்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டதால், திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் முதல் அடியை எடுத்து வைத்து விட்டாரே! – ஓதுவாராக ஒரு பெண்மணியும் அமர்த்தப்பட்டு விட்டாரே – உங்கள் ஆதிக்கம் வெகு சீக்கிரம் வீழ்ந்து, வீதியில் மிதிபடும் என்பதைக் காணப் போகிறீர்கள்.
நீங்கள் – நாங்கள் என்று பிரித்து எழுதுகிறதே ‘தினமலர்’ நீங்கள் என்றால், அது யார்? திராவிடர்கள் தானே! நாங்கள் என்றால் அது யார் ஆரியர்கள்தானே! ஆரியர் – திராவிடர் வேறுபாடு எல்லாம் ஒன்றும் கிடையாது. வெள்ளைக்காரன் பிரித்தாளும் சூழ்ச்சி என்று தானே சொல்லி வந்தீர்கள்.
இப்போது வசமாக நீங்களே வந்து சிக்கிக் கொண்டு விட்டீர்களே – நீங்கள் விரித்த வலையில் நீங்களே மாட்டிக் கொண்டீர்களே! ஒரு நாள் ஏமாற்றலாம், இரு நாள் ஏமாற்றலாம் – வரலாற்றை உங்கள் வசதிக்கேற்ப திரிக்கலாம் என்று நினைத்தால் அது நீண்ட காலம் தொடராது. ஒரு நாள் உண்மை வெளிப்பட்டே தீரும் என்பதற்கு நீங்களே சாட்சியமாகி விட்டீர்களே!
நீங்கள் புத்திமானா? பலமானா? புத்தியிருந்தால் சிந்தித்துப் பாருங்கள்.
“சில ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தபோது எஸ்.சீனிவாசன் அய்யங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்து இருந்தேன். இப்போது அவர் வீட்டை என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன் – என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறாள்” (“தமிழ்நாட்டில் காந்தியடிகள்”, பக். 520-521)
இதற்கு சில ஆண்டுகளுக்கு முன் என்று காந்தியார் சொல்லுகிறபோது தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்கு முன்பு (1925), இப்பொழுது என்று காந்தியார் குறிப்பிடுவது – சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதற்குப் பிறகு (1927).
தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் காந்தியாரிடத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பது அடிகோடிட்டுக் குறிப்பிடத்தக்கதாகும்.
இன்னொரு முக்கிய தகவலும் உண்டு. வைக்கம் போராட்டத்தை யொட்டி காந்தியார் வைக்கம் சென்றார் (12.3.1925) தீண்டாமைக்கு ஆதரவாக இருந்த வைதீகர்களையும் சந்தித்தார். இந்தன் துருந்தில் நீலகண்டன் நம்பி யாத்ரியின் இல்லத்தில் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை உரையாடல் நடந்தது. அப்போது நடந்தது என்ன?
காந்தியாரை நம்பியாத்ரியின் வீட்டுக்குள் அமர வைத்துப் பேசவில்லை. வீட்டுக்கு வெளியில் தான் என்பது கவனிக்கத்தக்கது.
‘தினமலரில்’ இது உங்கள் இடம் பகுதியில் (20.9.2024) வெளிவந்த கட்டுரையில் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒரு காரியம் செய்வோமா துரைமுருகன்? ஜெர்மனியை ஆண்ட ஹிட்லர் யூதர் ஒருவர் கூட தன் நாட்டில் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்களை சித்ரவதை செய்து கொன்று குவித்ததைப்போல, இந்தியாவில் உள்ள பிராமணர்கள் அனைவரையும் கொன்று குவித்து விடுவோமா?” என்று ஆயாசத்தோடு பதிவிடப்பட்டுள்ளது.
ஏதோ ஹிட்லரை எதிர்ப்பது போல வரிகள் காணப்பட்டாலும் உண்மையிலே ஹிட்லருக்கும் ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து மகாசபைக்கும் நகமும் சதையுமான தொடர்புண்டு என்பதுதான் கவனிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்.சின் ஸ்வஸ்திக் கொடி ஹிட்லரிடமிருந்து ‘வரபிரசாதமாக’ப் பெற்றுக் கொள்ளப்பட்டதுதானே!
ஹிட்லருக்கும், முசோலினிக்கும் இந்த சங்பரிவார் சேனைகளுக்கும் இடையிலான கொள்கைத் தகுதி என்ன? இதோ…
ஆர்.எஸ்.எஸ். மூஞ்சே – ஹிட்லர்
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கின் இரண்டாவது சர்சங்சாலக் (தலைவர்) ஆக 1940 முதல் 1973 வரை பதவி வகித்த கோல்வால்கர், சங்கிகளின் வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருக்கிறார்.
1939இல் அவர் எழுதிய We or Our Nationhood Defined (“நமக்கான திட்டமிடப்பட்ட ஹிந்து தேசியம்”) என்ற நூல் ஆர்எஸ்எஸ்ஸுக்குள் அவரை முக்கியமான நபராக மாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தது,
மேலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின் முதல் முறையான விளக்கமாகக் கருதப்பட்டது. அவர் ஹிட்லரின் செயல்களால் உற்சாகம் பெற்று, இந்தியா இந்துக்களுக்குச் சொந்தமானது என்றும், நாட்டின் சிறுபான்மையினரை நாஜிக்கள் யூதர்களை நடத்திய விதத்தில் நடத்த வேண்டும் என்றும் அந்த நூலில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் அந்த நூல் முழுவதிலும் ஆர்எஸ்எஸ்ஸை நாஜி ஜெர்மனியின் பாசிச சித்தாந்தத்துடன் பிரிக்க முடியாத வகையில் இணைத்தது என்ற கண்ணோட் டத்திலேயே எழுதி இருந்தார்.
கோல்வால்கரின் நாசிசத்தோடான ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் என்ற கூற்று – எந்த தீவிரமான ஆய்வுக்கும் உட்படுத்தப்படவில்லை. இதற்கான முதன்மைக் காரணம், அவர் எழுதிய மராத்தி நூல் வெளியிடப்பட்ட சிறிது காலத்திற்குப் பிறகு ரகசியமாக வைக்கப்பட்டது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிக முக்கிய உறுப்பினர்கள் அதை உள்வாங்கி இன்றுவரை தங்களின் சகாக்களிடம் அதனை மறைமுகமாக பேசி வருகின்றனர். மேலும் அந்த நூல் முதல் பதிப்போடு நின்று, பொதுவெளியில் இல்லாமல் போனது இதனால் ஆராய்ச்சியாளரோ அல்லது விமர்சகரோ அந்த நூலை விரிவாக ஆய்வு செய்ய முடியவில்லை
முசோலினியால் ஈர்க்கப்பட்ட ஹிட்லர், 1933இல் ஜெர்மனியில் ஆட்சியைக் கைப்பற்றினார், ஆனால் தனது பாசிச அரசுக்கு ஆரிய ‘தலைசிறந்த இனம்’ என்ற கருத்தை சேர்த்தார். ஆரிய ‘தலைசிறந்த இனம்’ என்ற ஒன்று இருப்பதாகவும், மற்றவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், எனவே அவர்கள் கீழ்த்தரமானவர்கள் என்றும் ஜெர்மானிய மக்களை நம்பவைத்தால், ஹிட்லரின் கீழ் யூதர்களை அழிப்பது மிகவும் எளிதாக இருக்கும் என்று அவர் கருதினார்.
ஆரியர்கள் தூய்மைவாதம் பற்றி ஹிட்லர் பேசியதும் இந்தியாவில் அதே கருத்தைக் கொண்டு இருந்து ஹிந்த்துவ அமைப்பினரின் தலைமைப் பிதாமகனாகிய, அப்போதைய இந்து மகாசபையின் தலைவர், பி.எஸ். மூஞ்சே அய்ரோப்பிய வலதுசாரிக் கட்சிகள், குறிப்பாக முசோலினி மற்றும் பாசிசத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த கண்டத்திற்கும், குறிப்பாக ரோமுக்கும் பயணம் செய்து, சர்வாதிகாரியை நேரில் சந்தித்து, பாசிசம் மற்றும் அதன் முக்கிய கட்சியான தேசிய பாசிஸ்ட் கட்சி பற்றி அறிந்து கொண்டார் என்பது பலருக்குத் தெரியாது. அவர் அந்த கருத்துக்களையும் பாசிச அமைப்பையும் இந்திய மண்ணில் கொண்டு வந்து நட்டு வைத்தார்,.
மூஞ்சே காந்தியாரின் இரண்டு முக்கிய கொள்கைகளான அகிம்சை மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். இந்து மகாசபையுடனான அவரது தொடர்பு அதிகரித்தது, மேலும் அவர் 1925இல் ஆர்எஸ்எஸ்ஸை நிறுவிய கே.பி. ஹெட்கேவரின் ஆலோசகராகவும் இருந்தார்.
மூஞ்சே 1927 முதல் 1937இல் விநாயக் தாமோதர் சாவர்க்கரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் வரை இந்து மகாசபையின் தலைவராக இருந்தார்.
1931இல், இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, மூஞ்சே இத்தாலிக்குப் பயணம் செய்தார், அங்கு அவர் பிரதமர் பெனிட்டோ முசோலினியைச் சந்தித்தார், மேலும் பலிலா, அகாடமியா டெல்லா ஃபார்னெசினா என்ற அமைப்புகள் மற்றும் பிற அமைப்புகள் மூலம் சமூகத்தை இராணுவமயமாக்குவது குறித்து வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அவரது நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி, மூஞ்சே பாசிச அமைப்புகளால் ஆழமாக பாதிக்கப்பட்டார், அதில் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராட இந்து சமூகத்தை இராணுவமயமாக்க ஒரு வாய்ப்பைக் கண்டார். இத்தாலியிலிருந்து திரும்பிய பிறகு, அவர் 1935இல் மத்திய இந்து இராணுவக் கல்விச் சங்கத்தையும், 1937இல் போன்சலா இராணுவப் பள்ளியையும் நாசிக்கில் நிறுவினார்.
ராஷ்டிரிய சுயம்சேவக் சங் (RSS) பின்னர் இந்த மாதிரியை பெரிய அளவில் உரிமை கோரி, ஆட்சேர்ப்பு மற்றும் பாசிச இளைஞர் அமைப்பான இத்தாலியின் ஓபெரா நாசியோனல் பலிலாவின் கொள்கைகளை தன்னுள் உள்வாங்கி உருவாக்கிக் கொண்டது.
இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ் நிறுவப் பட்ட காலத்தில் நாம் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோதிலும், இந்த அமைப்புகளால் இந்து இளைஞர்களின் தேசியவாதம் மற்றும் இராணுவமயமாக்கல் ஆங்கிலேயர்களை நோக்கி இருக்கவில்லை. இராணுவமயமாக்கல் திட்டத்தின் வெற்றிக்கு உள்நாட்டு ‘எதிரி’ தேவைப்பட்டது.
1923இல் வெளியிடப்பட்ட சாவர்கரின் ‘எசென்ஷி யல்ஸ் ஆஃப் ஹிந்துத்வா’ என்ற புத்தகத்தில் அந்த எதிரி அடையாளம் காணப்பட்டது. ‘பாரதவர்ஷா’வை தங்களது ‘பித்ர-பூமி’ மற்றும் ‘புண்ய-பூமி’யாக கருதாதவர்கள் நமது நாட்டில் அந்நியர்கள் என்றும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. வெளிப்படையாக, அவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆவர், ஏனெனில் அவர்களின் ‘புண்ய-பூமி’ மெக்கா மற்றும் பெத்லகேமில் இருந்தது, மேலும் இந்தியாவில் இருந்தாலும் கூட தூய இனமான ஆரிய இனத்திற்கு அந்த இனத்தை சேராதவர்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று மறைமுகமாகக் கூறியிருந்தார்.
மூஞ்சே மற்றும் அவரது அமைப்பிலிருந்தும், பின்னர் ஆர்.எஸ்.எஸ். சாகாக்களிலிருந்தும் வெளிவந்தவர்களின் வாரிசுகள், முசோலினி மற்றும் ஹிட்லர் கொள்கைகள உயர்த்திப் பிடித்துள்ளனர் அவர்கள் அதிகார அமைப்புகளை கட்டுப்படுத்துகின்றனர். அவர்கள் தங்களை பாசிஸ்டுகள் என்று நேரடியாக அழைத்துக் கொள்வதில்லை; மாறாக, தங்களை ‘தேசியவாதிகள்’ மற்றும் ‘ஹிந்துத்வவாதிகள்’ என்று அழைக்கிறார்கள்.
முசேலினியும் துவக்கத்தில் தன்னை இத்தாலியின் தலைசிறந்த தேசியவாதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டவர்தான்!
அதே போல் ஹிட்லர் தனக்கு எதிராக பேசிய அனைவரையுமே தேசத்திற்கும் தேச நலனிற்கும் எதிராக பேசும் தேசத்துரோகிகள் என்று கூறினார்.
இதற்கு மேலும் ஒரு முக்கியமான தகவல் உண்டு. அதை எழுதாவிட்டால் எப்படி? இதோ அது….
“ஜெர்மன்” படித்த தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள்
இரத்த வெறியன் இட்லர் தொடங்கிய இரண்டாம் உலகப்போரில் (1939-1945) உயிர் இழந்தோர் எண்ணிக்கை ஒன்றரை கோடியாகும். அதுபோக அவன் சித்திரவதை செய்து அறியாயமாகக் கொன்ற அப்பாவி யூத மக்கள் எண்ணிக்கை 60 லட்சமாகும். “இரக்கமென்று ஒரு பொருள் இலாத” அத்தகைய கொடியவன் அப்போரின் முற்பகுதியில் பெற்ற வெற்றிகளை வரவேற்று, நம் இந்திய நாட்டிற்குள் எப்பொழுது ஜெர்மன் படைகள் நுழையும் என்று நடைபாவாடை விரிக்கத் துடித்துக்கொண்டு நம் நாட்டில் ஒரு தேச துரோகக் கூட்டம் இருந்திருக்குமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம் இருந்தது! அக் கூட்டத்தினர்தான் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள், இரண்டாவது உலகப்போரின் தொடக்க ஆண்டுகளில் அவர்கள் விழுந்து விழுந்து ஜெர்மன்மொழி படித்ததை தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறக் கேட்டுள்ளோம். இச் செய்தியை அப்பொழுது இந்திய அரசில் அதிகாரியாகப் பணியாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர் 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள நமது “இந்திய நினைவுகள்” என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார்:-
“When France fell ….. some clever Brahmins in the south ware said to be learning German to be ready for the forthcoming takeover.” PP. 74-75 of India Remembered” by Percival and Margaret Spear, Orient Longman
The “German Brahmins” of Madras were indeed said now to be learning Japanese [after Pearl Harbour and fall of Singapore and Burma] P. 78 of above book.
“[1940 ஜூன் மாதம்] பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்காரப் பார்ப்பனர்கள் ஜெர்மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிடவிருப்பதால் அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு? ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணிகளாக இருக்கத்தான்!] ஜெர்மன் மொழியைக் கற்றுவருவதாகச் சொல்லப்பட்டது
பின்னர் 1942 முற்பகுதியில் இட்லரின் கூட்டாளி களான ஜப்பானியப் போர்வெறியர்கள் சிங்கப்பூர், பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்கள் என்றவுடன் அந்த ”ஜெர்மன்”(!) படித்த பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கிவிட்டனராம்* பாவம் பார்ப்பனர்கள்! அவர் களுடைய கூட்டாளிகளான ஜெர்மானிய ஜப்பானியப் போர்வெறியர்கள் இரண்டாம் உலகப்போரில் தோற்றுப்போய்விட்டனர் கடைசியாக! அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!
இப்படிப்பட்ட பார்ப்பனர்கள் தாம் – பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை முன்னெடுப்போரைப் பார்த்து முறைக்கிறார்கள் – மோசமானவர்கள் என்று முரசு கொட்டுகிறார்கள்.
– வளரும்