தி.மு.க. பவள விழா, அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கடந்த 28ஆம் தேதி வெகு எழுச்சியுடன் நடைபெற்றது.
தாய்க் கழகமான திராவிடர் கழகம் மற்றும் அரசியல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற காட்சி
கண்கொள்ளாக் காட்சி!
விழாவில் பங்கேற்ற தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்ட ஒரு கருத்து மிகவும் முக்கியமானது.
தி.மு.க. தலைமையில் தமிழ் நாட்டில் அமைந்த கூட்டணி வெறும் தேர்தலுக்காக மட்டுமே அமைந்த ஒன்றல்ல; தேர்தல் வரை கூட்டணி; தேர்தல் முடிந்தவுடன் கலைந்து போகும் கூட்டணியல்ல என்ற கருத்து அடிகோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.
விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியது போல் இது ஒரு கொள்கைக் கூட்டணியாகும்.
இந்த வலுவான கொள்கை ரீதியான கூட்டணி அமைந்தது முதல், நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் (உள்ளாட்சித் தேர்தல் உட்பட) வெற்றி வாகை சூடியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அமைந்த இந்தக் கொள்கை ரீதியான வெற்றிக் கூட்டணி தான் இந்திய அளவில் பாசிச பா.ஜ.க.வுக்கு எதிராக உருவான இந்தியா கூட்டணியின் அஸ்திவாரமாகும்.
எங்களை அசைக்க முடியாது என்று 56 அங்குல மார்பளவு கொண்ட நரேந்திர மோடியை கடந்த மக்களவைத் தேர்தலில் கலங்க அடித்துள்ளது.
2019 மக்களவையில் பெரும்பான்மைப் பலத்தோடு ஆட்டம் போட்ட பா.ஜ.க. 2024 மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மையை இழந்து சிறிய சிறிய கட்சிகளோடு எல்லாம் கூட்டுச் சேர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது.
இதில்கூட பல முக்கிய பிரச்சினைகளில் ஆளும் கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு தலை தூக்கி வருவதை நாடு பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.
மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிகளை பல்வேறு உத்திகளைக் கையாண்டு உடைத்து, தன் கட்சி ஆட்சி என்ற ஜனநாயகப் படுகொலையை நடத்தி வந்திருப்பதை யாரே மறுக்க முடியும்?
யூனியன் பிரதேசங்கள் தனி மாநிலத் தகுதியைக் கோரும் ஒரு கால கட்டத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை உடைத்துச் சிதறடித்து யூனியன் பிரதேசங்களாக்கிய அராஜகத்தை என்ன சொல்லி அழைப்பது?
இதற்கான விலையை நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பா.ஜ.க. கொடுக்க வேண்டியிருக்கும்.
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்று தமிழ் மண்ணில் திராவிட இயக்கம் தொடங்கி வைத்த குரல் – இப்பொழுது இந்தியத் துணைக் கண்டம் எங்கும் அதன் எதிரொலியைக் கேட்க முடிகிறது!
இப்படியொரு தருணத்தில் மாநிலங்களை ஒழித்து விட்டு ஒரே ஆட்சி என்ற முழக்கத்தை ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொடுத்திருக்கிறது. பிரிவினையைக் கைவிட்டு ஒட்டு மொத்த இந்தியத் துணைக் கண்டத்தில் ஓர் அங்கமாக, அதே நேரத்தில், அந்தந்த மாநில இன மக்களின் மொழி, பண்பாடு உரிமைகளை எந்தக் காரணத்தை முன்னிட்டும் விட்டுக் கொடுக்காத நிலையில் கெட்டியாகவே இருக்கிறது. இதனை பிஜேபியோ, சங்பரிவார்களோ புறந்தள்ளுமானால், அது இந்திய ஒற்றுமைக்கே கேடானதாகும். அதற்கான பொறுப்பை இவர்கள் ஏற்றுத்தான் தீர வேண்டும்.
பிஜே.பி.யின் இந்தக் குரலுக்குப் பின்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் தத்துவமாகும்.
மொழிப் பிரச்சினையில் ஒரே தீர்வு – சமஸ்கிருதமே! சமஸ்கிருதம் ஆட்சி மொழியாகும் கால கட்டம் வரை ஹிந்திக்கே முன்னுரிமை தந்து, ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸின் குருஜி என்று போற்றப்படும் எம்.எஸ். கோல்வாக்கர் (Bunch of Thoughts) (அத்தியாயம் 8 – பக்கம் 113)
1957 தேர்தலில் ஜனசங்கம் (அதாவது இன்றைய பா.ஜ.க.) அறிக்கையில் முன்மொழிந்ததைத்தான் இன்றைய பா.ஜ.க. வழிமொழிகிறது.
‘‘ஜனசங்கம் ஆட்சிக்கு வந்தால், அரசியல் சட்டத்தைத் திருத்தி, கூட்டாட்சி முறையை ஒழித்து, இந்தியா என்பதை ஒரே நாடு என்று பிரகடனப்படுத்துவோம்!’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதே!
அடுத்த தேர்தலில் பா.ஜ.க. துடைத்து எறியப்படும் என்பதால், ஒரே நாடு; ஒரே மொழி என்ற அவர்களின் கோட்பாட்டை நரேந்திரமோடி தலைமையிலான இந்தப் பா.ஜ.க. ஆட்சிக் காலத்திற்குள் சட்ட ரீதியாக செயல்படுத்தியே தீர வேண்டும் என்று பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் காதைப் பிடித்துத் திருகிக் கொண்டுள்ளது என்பதே யதார்த்தம்!
அவற்றையெல்லாம் கணக்கில் கொண்டுதான் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள், காஞ்சி விழாவில் ‘‘இதுவரை நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைவிட எதிர்காலத்தில் நாம் சந்திக்க இருக்கும் சவால் முக்கியமானது – அதனை முறியடிக்க கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமை – கட்சியின் கட்டுப்பாடு ஆகியவை மிக மிக முக்கியமானது’’ என்பதை வலியுறுத்திப் பேசியது – மிகவும் தொலைநோக்கானதாகும்.
கூடினோம் – கலைந்தோம் என்பதில்லாமல், இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் இப்பொழுதுள்ள கூட்டணி மேலும் உறுதிப்பட்டு கொள்கை ரீதியாக செயல்பட்டாக வேண்டும்!
‘மக்களிடம் செல்’ என்றார் காஞ்சி தந்த அண்ணா! தேர்தல் நேரத்தில் மக்களைச் சந்திப்பதைவிட, இப்பொழுதே மக்களைச் செம்மைப்படுத்த வேண்டும் – அவர்களின் சிந்தனையைச் செழுமைப்படுத்த வேண்டும்.
காஞ்சி தி.மு.க. பவள விழா என்பது இதற்கான முன்கை நீட்டுதலேயாகும்!