வரலாற்று முக்கியமான சிந்து வெளி அகழாய்வு நூற்றாண்டு நிறைவு நாளான செப்டம்பர் 20 வரலாற்றில் இடம் பெற உள்ள, கருத்து செறிவு மிக்க உரை ஒன்றை, தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள் சூழ ஆவலோடு கேட்டுப் புதிய தெளிவைப் பெற்றேன் !
புகழ் பெற்ற சிந்து வெளி ஆய்வாளர், தனி மனிதனாக சிந்து வெளி – கீழடி – சங்க இலக்கியம் மூன்றையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திக் காட்டும் ஆர். பாலகிருஷ்ணன். அய்.ஏ.எஸ். ( பணி ஓய்வு ) அவர்களின் புதிய ஆய்வை முதன் முறையாக உலகுக்கு ஆதாரத்தோடு எடுத்து
வைத்த நிகழ்வைப் பற்றி தான் இந்தப் பதிவு !
‘ஆர்.அய்.ஜி. காம்ப்ளக்ஸ் ‘ என்பது அவரது ஆய்வுக்கு அவர் சூட்டியுள்ள பொருத்தமான பெயர் ( R.I.G. Complex ). அதாவது ஆர்.அய்.ஜி என்பதை, ரிக் – இந்திரா – காந்தாரா என்ற பெயர் கொண்ட இடங்களை ஒருங்கிணைத்து தரும் ஆதாரங்கள் (Toponymic Evidence ) என்கிறார். இதன் மூலம் ஆரியர் இடப்பெயர்ச்சி கோட்பாட்டை ( Aryan Migration Thory – AMT ) அவர்கள் குடியேறிய இடங்களின் பெயர்களைக் கொண்டு எங்கிருந்து – எங்கு நகர்ந்தார் கள் என்பதை தீர்மானம் செய்கிறார் !
ரிக் – இந்திரா – காந்தாரா பெயர் குழுக்களின் கீழே வேத, ராமாயண, மகாபாரத பாத்திரங்களின் பெயர்கள், மலை, நதி போன்றவற்றின் பெயர்களைக் கொண்ட இடங்களின் பெயர்களைப் பற்றியும் அவைகள் இந்தியாவுக்கு வெளியே எங்கெல்லாம் சூட்டப்பட்டிருக்கின்றன என்ற பெரிய பட்டியலையும் வரை படங்களோடு எடுத்து வைக்கிறார் !
அந்த வெளி நாடுகள்
பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான்; துர்க்மெனிஸ்தான்; தஜிகிஸ்தான்; ஈரான்; துருக்கி; அஜர்பைஜான். இந்த நாடுகளின் வரை படத்தில் வேத – ராமாயண – மகாபாரத பெயர்கள் அங்கிருக்கும் இடங்களின் பெயர்களாக சூட்டப்பட்டிருக்கின்றன என ஆச்சர்யத்துடன் அறிய முடிகிறது !
அந்த நூற்றுக்கணக்கான இடங்களின் பெயர்களிலி ருந்து ஒரு சில : காந்தாரா; சூர்யா; லங்கா; சீதா; ரிக்; கிஷ்கிந்தா; ராவண்; பாஞ்சாலி; அசுர்; வருண்; யமன்; அர்ஜீன்; ஜானகி; வாலி; ஆர்யன்; குகன்; ராமன்; கர்ணன்; குரு . இவைகளெல்லாம் இந்தியாவுக்கு மேற்கே
குறிப்பிட்டிருந்த நாடுகளில் இருக்கின்ற இடங்களின் பெயர்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லை ?
இதே பெயர்களைக் கொண்ட இடங்கள் இந்தியாவில் எந்தப் பகுதிகளில் இருக்கிறது என்பதையும் அதன் மூலம் இந்தப் பெயர்கள் கொண்ட ஊர்கள் இந்தியாவின் வட நிலப்பகுதியில் அதிகமாகவும் தெற்கில் குறைவாக இருப்பதையும் இந்திய வரைபடத்தின் உதவியோடு அந்த கோட்பாட்டை ( AMT ) ஆதாரத்தோடு நிறுவுகிறார்!
அவ்வாறு நிறுவிய பின்னர் தனது ஆய்வின் முடிவாக – ஆரியர்களின் இடப்பெயர்ச்சி ( Aryan Migration ) இந்தியாவுக்கு மேற்கிலிருந்து கிளம்பி கிழக்கு நோக்கி நகர்ந்தது என்றும் பின்பு மேற்கிலிருந்து தெற்கு நோக்கி வந்ததென்றும் தெரிவிக்கின்றார் !
“மனிதர்கள் மரங்கள் அல்ல, வேரூன்றி நிற்பதற்கு ! கால்கள் அவர்களை நடக்கச் செய்கிறது ! இடம் பெயறச் செய்கிறது ! ” …என்ற சிந்தனையை தான் பெரிதும் மதிப்பதாக கூறி, தனது ஆய்வை எந்த சோதனைக்கும் உட்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறி பலத்த கைத்தட்டல்களின் ஆரவாரத்தில் தனது ஆய்வுரையை நிறைவு செய்தார் !
தனது 22 ஆண்டு கால ஆய்வைப் பாதுகாத்து, இப்படியொரு வரலாற்று சிறப்பு மிக்க நாளுக்காக ( 20.09.2024) பொறுமையாக காத்திருந்து, ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சீரியதொரு ஆய்வுரையை பொது வெளியில் மிகுந்த திடமான நம்பிக்கையோடு எடுத்து வைத்தார் ! இந்த ஆய்வும் கடந்த கே.வி.டி. காம்ப்ளெக்ஸ் ( K.V.T. Complex ) ஆய்வைப் போல மாபெரும் வரவேற்பை பெறும் என்பதில் எவ்வித அய்யமுமில்லை !
ஆர்.அய்.ஜி. காம்ப்ளெக்ஸ் ஆய்வை ஆர். பாலகிருஷ்ணன் மேற்கொண்டதற்கான அடிப்படை தத்துவமாக நான் உணருவது :
இடம் பெயரும் ( Migration ) மக்களின் புதிய குடி யேறும் இடங்களுக்கு, அவர்களின் பழைய இடத்தின் பெயர் இடப்படுகிறது !
சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். தமிழர்கள் அவரது தன்னலமற்ற சேவைக்கு என்றென் றும் கடன் பட்டவர்கள் !
– பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்