கடந்த காலத்தைவிட, எதிர்காலம் சிக்கலானது; இன்றுபோல் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சவால்களை சந்திப்போம்!
கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு என்பதில் உள்ள ‘கட்டுப்பாடே’ மிக முக்கியமானது என்ற தந்தை பெரியாரின் கருத்து மிக முக்கியமானதாகும்!
– திராவிட முன்னேற்றக் கழகப் பவள விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
சென்னை, செப்.29 கடந்த காலத்தைவிட, எதிர்காலம் மிகவும் சிக்கலானது. கட்டுப்பாடு காத்து ஒற்றுமையுடன் அனைவரும் ஒருங்கிணைந்து சவால்களைச் சந்திப்போம்! பவள விழா காணும் தி.மு.க.வுக்குத் தாய்க் கழகத்தின் சார்பில் உளம் நிறைந்த வாழ்த்துகள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகப் பவள விழா!
நேற்று (28.9.2024) மாலை காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டுத் திடலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
உலகத்திலேயே ஓர் ஒப்பற்ற இயக்கம்!
இந்தியாவில் ஏன் உலகத்தில் என்றுகூட சொல்லலாம் அப்படிப்பட்ட ஓர் ஒப்பற்ற இயக்கம் – 75 ஆண்டுகாலம் இந்தத் திராவிட இயக்கம் தன்னுடைய பணியை செய்து, அதில் எவ்வளவோ சாதனைகளையெல்லாம் செய்து, எவ்வளவோ வேதனைகளையெல்லாம் சந்தித்து, பிறகு இவ்வளவு அருமையான கூட்டணித் தோழர்களோடு, மிகப்பெரிய அளவிற்குத் தலைவர்களோடும், மக்களோடும் இணைந்து நடத்தக் கூடிய இந்த மகத்தான வரலாற்றுப் பெருமைக்குரிய விழாவின் தலைவர் – திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய அருமைச் சகோதரர் துரைமுருகன் அவர்களே,
பெரியாரின் துணிவு, அண்ணாவின் கனிவு, கலைஞரின் முனைவு – செயல்திறன்!
இந்த இயக்கத்தைப் பல்வேறு சோதனை களையெல்லாம் கடந்து, பெரியாரின் துணிவு, அண்ணாவின் கனிவு, கலைஞரின் முனைவு – செயல்திறன் இவற்றின் கூட்டு முயற்சிக்கு – இந்தக் கூட்டு விடைதான் நமது முதலமைச்சர் – இன்றைக்கு இந்த இயக்கத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற அருமைத் தலைவர் அவர்களே,
அவருக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய தி.மு.க. பொருளாளர் உள்பட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்துப் பொறுப்பாளர்களே, கூட்டணிக் கட்சித் தலைவர்களே, மேனாள், இந்நாள் அமைச்சர் பெருமக்களே, அருமைத் தாய்மார்களே, பெரியோர்களே, நண்பர்களே, செயல்வீரர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே உங்கள் அத்துணை பேருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்க்கு இல்லாத பூரிப்பு, யாருக்கு இருக்கும்?
தாய்க் கழகத்தின் சார்பில் வாழ்த்த இங்கே வந்திருக்கின்றோம். தாய்க்கு இல்லாத பூரிப்பு, யாருக்கு இருக்கும்? 75 ஆண்டுகாலம் ஓர் இயக்கம் எத்தனையோ சோதனைகளைக் கடந்து இருக்கிறது – நெருப்பாற்றில் நீந்தி இருக்கிறது.
ஒரு சொலவடை உண்டு – ‘‘அரிமா நோக்கு” என்பது தான் அது. அரிமா நோக்கு என்றால், சிங்கம் திரும்பிப் பார்க்கிறது என்று பொருள். தான் வந்த பாதையைப் பார்க்கிறது – அந்தப் பாதை எப்படிப்பட்டது என்று.
ஆகவேதான், இந்த சிங்கம் இங்கே அமர்ந்து கொண்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய ஒரு சிங்கமாக, தன்னுடைய ஆற்றல்மிகு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றது.
இன எதிரிகளின் எண்ணம் நிறைவேறாது!
இதைவிட இந்தத் தாய்க் கழகத்திற்கு என்ன பெருமை வேண்டும்? எனவே, அதிகம் பேசவேண்டிய அவசியமே இல்லை. மற்றவர்கள் எல்லாம் இங்கே பாராட்டினார்கள்; கூட்டணித் தலைவர்கள் எல்லாம் அருமையாகச் சொன்னார்கள். அதேநேரத்தில், இந்தக் கூட்டணியில் ஏதாவது கலகம் வராதா? ஏதாவது தொல்லைகள் வராதா? அவர் போனார்; இவர் வந்தார்; அவர் எழுந்தார் என்றெல்லாம் எழுதலாமா? என்பதற்கு இடமே இல்லை என்பதை இந்தக் கூட்டணி பிரகடனப்படுத்தி இருக்கிறது என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மறுக்க முடியாத உண்மை, வரலாறு!
இந்தக் கூட்டணியினுடைய ஆற்றல், அதனுடைய தலைவர், ஒப்பற்ற தலைவர், எல்லா வகையான வியூகத்தையும், பெரியாரிடம், அண்ணாவிடம், கலைஞரிடம் கற்றுத் துறைபோகியவராக இன்றைக்கு இருக்கின்ற காரணத்தினால்தான், இந்தப் பவள விழா நேரத்தில், அவர் இந்தக் கூட்டணிக்குத் தலைவராக மட்டும் இல்லை. ‘‘இந்தியா கூட்டணி” என்று – அகில இந்தியாவையுமே வரவழைக்கக் கூடிய அளவிற்கு, அந்த ஆற்றல், இவரிடமிருந்துதான் கிளம்பியது என்பது மறுக்க முடியாத உண்மை, வரலாறு. ஆகவேதான், இப்படிப்பட்ட ஒரு சிறப்பான ஓர் இயக்கம் – பல காலகட்டங்களைத் தாண்டியிருக்கிறது.
பன்னூறு ஆண்டுகள் வாழவேண்டிய ஓர் இயக்கம்!
இனிமேல், கடந்த காலத்தைவிட, 75 ஆண்டு காலத்தைவிட, இனிமேல் வருகின்ற காலம்தான் – இந்த இயக்கம் நூற்றாண்டையும் தாண்டி, பன்னூறு ஆண்டுகள் வாழவேண்டிய ஓர் இயக்கமாகும்.
ஏனென்றால், இது சாதாரண அரசியல் கட்சியல்ல. அதைத் தாண்டி, மிக முக்கியமாக இந்த இனத்தின் அடிமை வாழ்வை ஒழித்து, மான வாழ்வை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், கலைஞர் சொன்னார், ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று தன்னை அழைப்பதில்தான் பெருமை என்று சொன்னார்.
ஆகவே, அப்படிப்பட்ட சூழ்நிலையில், செய்த பணிகளைவிட, சந்திக்கவேண்டிய களங்கள் ஏராளமாக இருக்கின்றன.
பிரதமரிடம் மூன்று வேண்டுகோள்!
நேற்றைக்குக்கூட டில்லிக்குச் சென்ற நம்முடைய முதலமைச்சர் அவர்கள், பிரதமரைச் சந்தித்து, ‘‘உறவுக்குக் கைகொடுக்கின்ற நேரத்தில், உரிமைக்கும் குரல் கொடுப்போம்” என்பதற்காகத்தான், நமக்குரிய முக்கிய வேண்டுகோள் என்று, மூன்று வேண்டுகோளை வைத்து விட்டு வந்திருக்கின்றார்.
இரண்டு முனை இந்த இயக்கத்திற்கு உண்டு. ஆட்சி என்பது மக்களுடைய விழைவுகள். அதை செய்வ தற்காக, சட்டப்பூர்வமான முயற்சிகள். இன்னொரு பக்கம் பிரச்சாரக் களம்.
எனவேதான், இந்த இரண்டையும் முன்னிறுத்தி நடத்தக்கூடிய இந்த இயக்கம் ஒருபோதும் எந்தக் கொம்பனாலும் அசைக்கப்பட முடியாத இயக்கமாகும்.
‘திராவிடம் வெல்லும் – அதை வரலாறு என்றைக்கும் சொல்லும்” என்பது மிகமிக முக்கியமான ஒன்றாகும்.
இந்த இயக்கத்தை உருவாக்கிய அண்ணா, மிகச் சிறப்பாகச் சொன்னார் – ‘‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற மூன்றைச் சொன்னார்கள்.
தந்தை பெரியாரின் கருத்து!
அதைத் தந்தை பெரியார் பாராட்டிவிட்டுச் சொன்னார், ‘‘கடமை, கண்ணியம் என்பதற்குக்கூட வெவ்வேறு விளக்கங்களைச் சொல்லலாம். ஆனால், கட்டுப்பாடு என்பதற்கு ஒரே பொருள்தான். அதைத்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எப்பொழுதும் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார், அண்ணா மறைந்த பிறகும்கூட.
அதை அப்படியே விளக்கிச் சொன்னார் கலைஞர் அவர்கள். இன்றைக்கு அதை நடைமுறையில், பக்குவமாக, சிந்தாமல், சிதறாமல் அப்படியே கொண்டு செல்லுகின்ற ஒரு தலைமை இன்றைக்கு நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. அதைக் கண்டு தாய்க்கழகம் பூரிக்கிறது.
அதுமட்டுமல்ல, இன்னும் தாண்டி சொல்ல வேண்டுமானால், கொள்கை நெறியை அண்ணா வகுத்துக் கொடுத்திருக்கிறார், இந்த இயக்கத்திற்கு.
இந்தப் பவள விழாவிலே சிந்திக்கவேண்டியது!
எந்தக் காலத்திலும், யார் தலைமை தாங்கினாலும், இந்த இயக்கம் எப்படித் தனித்தன்மை வாய்ந்த இயக்கம் – இந்தப் பவள விழாவிலே சிந்திக்கவேண்டிய அருமையான கட்டம் அதுதான்.
இது பதவிக்காக வந்த இயக்கம் அல்ல. போராட்டக் களத்திலே பூத்த மலர் இந்த இயக்கம்.
பல தலைமுறைகளுக்கு இந்த இயக்கம் தேவை!
பதவியே இந்த இயக்கத்திற்கு முக்கியமல்ல. ஆனால், இன எதிரிகள் நினைக்கிறார்கள், இவர்களுக்கு ஆட்சிதான் பலம் என்று. ஆட்சி என்பது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறை – கருத்து. அடுத்த தேர்தல் அரசியல்வாதிகளுக்கு முக்கியம். ஆனால், இந்தத் திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில், இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியாக இருக்கின்ற காரணத்தினால், அடுத்த பல தலைமுறைகளுக்கு இந்த இயக்கம் தேவை என்பதற்காக, பல தலைமுறைகளைப்பற்றி சிந்திக்கின்ற இயக்கமாகும்.
அண்ணா சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்!
ஆகவேதான் அண்ணா சொன்னார், அதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது.
‘‘பதவி என்பது மேல் துண்டு போன்றது; ஆனால், கொள்கை என்பது வேட்டி போன்றது” என்று.
இரண்டை வரிகளில் சொன்னாரே, அவையெல்லாம் நமக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்.
கடக்கப்போகின்ற 25 ஆண்டுகாலம் – எதிர்காலம் மேலும் சிக்கலான காலகட்டம்!
அந்த நெறிமுறைகளையெல்லாம் இந்த இயக்கம் தொடர்ந்து கொண்டு செல்லவேண்டிய நேரத்தில்தான், கடந்த 75 ஆண்டுகாலத்தைவிட, இன்னும் கடக்கப்போகின்ற 25 ஆண்டுகாலம் – எதிர்காலம் மேலும் சிக்கலான காலகட்டமாகும்.
முன்பு இருந்த அரசியல் எதிரிகள் ‘‘நாணயமான எதிரிகள்” – இப்பொழுது இருக்கின்ற எதிரிகள் நாணயமானவர்கள் அல்ல என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
அவற்றையெல்லாம் புரிந்த தலைமை இன்றைய தலைமை – பக்குவப்பட்ட தலைமை. அந்தத் தலைமையின் கரங்களைப் பலப்படுத்தவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
தாய்க்கழகத்தின் சார்பில் ஒரே ஒரு வேண்டுகோள்
எனவேதான், கூட்டணியாக இருந்தாலும், இயக்க மாக இருந்தாலும், தாய்க்கழகத்தின் சார்பில் ஒரே ஒரு வேண்டுகோள்.
ஒன்றாக நிற்போம்! ஒன்றாக நிற்போம்!!
தொடர்ந்து பாடுபடுவோம்!!!
லட்சியங்களைக் கொண்டுபோய்ச் சேர்ப்போம்.
நல்ல இசைக் கச்சேரியில் எப்படி சுருதி பேதம் இருக்கக்கூடாதோ, அதுபோன்று, சுருதி பேதம் இல்லாமல் இயங்குவோம்!
பதவிக்காக வந்த கூட்டணியல்ல; கொள்கைக்காக வந்த கூட்டணி!
எங்களைப் பிரிக்க முடியாது; காரணம், இது பதவிக்காக வந்த கூட்டணியல்ல; கொள்கைக்காக வந்த கூட்டணி என்பதை இந்தியாவும், உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அதுதான் பவள விழாவின் வெற்றி!
அந்த வெற்றி தொடரட்டும்!
வாகை சூடுவோம் – ஒருபோதும் தோற்கமாட்டோம்!
வெற்றி நாயகர் இங்கே வந்திருக்கின்றார் – அடுத்து உரையாற்றவிருக்கின்றார் – அதனை நாம் எல்லோரும் கேட்போம்.
வாழ்க, வளர்க!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்..
‘தி.மு.க. பவள விழா 75’ பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் எழுச்சியுரை (காஞ்சிபுரம், 28.9.2024)