திருமணங்களை நடத்த பெரிய பெரிய ஆடம்பர மண்டபங்களைத் தேடி நாடி ஓடுவது ஒருபுறம்.
திருமண அழைப்பிதழ்கள் எல்லாம் பல்வேறு டிசைன்களில் பக்கம் பக்கமாக பல் வகைப்படங்களுடன்!
திறந்தால் ராகங்கள், நாயன இசை மற்றும் பல்வேறு பின்னணி இசை – புதுப்புது டெக்னிக்குகள்!
ஒரு சில திருமணங்களில் ஒரு அழைப்பிதழுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் கூட ஆகிறது!
நன்றாக யோசியுங்கள் – இந்த அழைப்பிதழ்களால் பயன் என்ன? நடைபெறும் நாள், இடம், இவற்றை நினைவில் வைத்துக் கொண்டு அத்திருமணத்திற்குச் செல்லவோ காலம், நேரம் பார்த்து வாழ்த்து அனுப்பவோ என்பதற்குத் தான் – அதற்குமேல் அதற்கென்ன பயன்.
இதற்கு ஏன் இவ்வளவு ஆடம்பரம்? அந்தச் செலவை ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கக்கூட பயன்படுத்தலாமே? திருமணம் முடிந்த பிறகு அந்த அழைப்பிதழிற்கு எந்த மதிப்பும், பயனும் கிடையாது!
இதை பணக் கொழுப்புள்ளவன் எண்ணிப் பார்ப்பதே இல்லை!
ஒப்பீடு சமூகம் நம் சமூகம். ஆம், அவன் வீட்டுத் திருமணம்போல் நம் வீட்டுத் திருமண அழைப்பிதழ் வெகு தடபுடலாக அமைய வேண்டும் என்பதற்காக இப்படியா?
தகவல் தெரிவிக்கும் முறை வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மின்னஞ்சல் அழைப்பேகூட போதுமானது.
இதை யாரும் சிந்திப்பதே இல்லை.
அண்மையில் நடந்த அம்பானி இல்லத் திருமணத்தையோ அல்லது அதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு வெகு ஆடம்பர திருமணங்கள் பற்றியோ கூற வேண்டிய நிலை!
இத்தகைய ஆடம்பர திருமணங்களில், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்திற்கு செலவழிக்கும் தொகையோ மிக அதிகம்.
பிரபலமானவரின் கச்சேரி என்பது நம் இல்லத் திருமணங்களில் – வருகிறவர்களின் எத்தனை பேர் அவரது கச்சேரியை நிதானமாக அமர்ந்து கேட்கிறார்கள். வெகு சிலரே , வருவதும், போவதும் தான் இன்றைய நிலை. பாடுபவர் அல்லது கச்சேரி ஏதோ ஒரு பக்கம் நடக்கும் – மற்றொரு பக்கம் – உணவு விருந்து. ருசித்துப் புசிக்கிறவர் எவரும் அந்த விரு்நதுகளில் பங்கேற்பவர்கள் அல்ல! மாறாக ‘ஸ்டேட்டஸ்சிம்பல்’ (Status Symbol) என்பதுதானே!
பசியால் துடிக்கும் பல இலட்சம், பல கோடி மக்கள் உள்ள நாடுதான் நம் நாடு – அது ஒருபுறம். இலையில் வைத்து வீணாக்கப்படும் உணவுப் பண்டங்களைத் தூக்கி எறிதல் மற்றோர்புறம்.
என்னே விசித்திரமான வெட்கக்கேடு! திருமணங்களை பெரும் வசதி படைத்த அம்பானி, அதானி வகையறாக்கள் செய்வதற்குக்கூட – ஆடம்பரத் திருமணங்கள் – அதை யார் நடத்தினாலும் அதற்கு அரசு வரி போட வேண்டும். அரசின் நலத் திட்டங்களுக்கு அந்த நிதி பயன் பெற வசதியாக இருக்கும்.
ஆடம்பரப் பொருள்களுக்கு வரி போடும் அரசுகள் ஏன் ஆடம்பரத் திருமணங்களுக்கும் வரி போடுவதில்லை என்பதே நமது கேள்வி!
ஆடம்பரம் ஒரு தொற்று நோயாகவும் இன்று சமூகத்தில் உள்ளது!
நெருக்கடி காலத்தில் – திருமணங்களுக்கு 50 பேருக்கு மேல் விருந்துக்கு அழைக்கக் கூடாது. வீண் விரயமாகக் கூடாது என்று அறிவித்து ஆணையாக்கினர் 1976இல்.
அதிகாரிகள் திருமண வீடுகளில் சாப்பிட்ட இலைகளைக்கூட கணக்கிட்டு அபராதம் போட்டனர் என்பது கொடுமைபோல பலருக்குத் தோன்றலாம். இப்படி சமூகத்திற்குச் சபலங்களை பலருக்கு உருவாக்கும் இந்த சமூகத் தொற்றுக்கு அதனால் கடன் வாங்கி சீரழியும் நிலைகளைத் தடுக்க வேண்டும்!
யோசிக்க வேண்டும்! போலிப் பெருமைகளுக்குக் கொடுக்கும் கடும் விலை தான் எவ்வளவு?
(நாளையும் பார்ப்போம்)