உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் உள்ள பள்ளியின் மாணவர் விடுதியில், 2ஆம் வகுப்பு மாணவர் கடந்த வாரம் மரணமடைந்த நிலையில் அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்துள்ளது.
பள்ளியின் வளர்ச்சி, புகழ்பெற வேண்டி பள்ளியின் இயக்குநர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து, 2ஆம் வகுப்பு மாணவரை, விடுதியில் நரபலி கொடுத்திருப்பதாக, காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ரஸ்காவனில் உள்ள டி.எல். பப்ளிக் பள்ளியின் இயக்குநர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உள்பட அய்ந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், இந்த அய்ந்து பேரும் சேர்ந்து மற்றொரு சிறுவனையும் நரபலி கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் அது நடக்கவில்லை என்று காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பள்ளியில் அதிகம் மாணவர்கள் சேர வேண்டும், அதே போல் அதிகம் பணம் மற்றும் புகழ்பெற வேண்டும் என்று நடத்தப்பட்ட பூஜையின் ஒரு பகுதியாக, மாணவர் நரபலி கொடுக்கப்பட்டுள்ளான்.
இந்த பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இங்குள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான விடுதியில் தங்கிப் படித்து வந்த 2ஆம் வகுப்பு மாணவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட சிறுவன், கிரிஷண் குஷ்வாஹா என்பவரின் மகன் ஆவார். கிரிஷன் டில்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 23.9.2024 அன்று தனது படுக் கையிலேயே, பிணமாக சிறுவன் கிடந்துள்ளான். உடனடியாக இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல், பள்ளி விடுதியின் இயக்குநர் தினேஷ், தனது காரில் சிறுவனின் உடலை எடுத்துக்கொண்டு எங்கோ சென்றிருக்கிறார். இதற்கிடையே, சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சிறுவனின் தந்தையான கிரிஷணுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் விடுதிக்கு விரைந்துள்ளார். ஆனால், அங்கு மகன் இல்லாததும் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
காவலர்கள் வந்து, சோதனை நடத்தியதில், பள்ளி இயக்குநர் தினேஷின் காரில் சிறுவனின் உடல், கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
சிறுவனின் உடல் கூராய்வு முடிவில், அவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும், 22.9.2024 அன்று இரவு இந்த கொலைச் சம்பவம் நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில்தான் மாணவர் நரபலி கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பும் இதே போல் சில மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களும் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
உ.பி. முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் அரசு பள்ளிகளில் ஆன்மீக போதனைகளுக்கும், ஜோதிடர் ஆலோசனைகளுக்கும் நிதி ஒதுக்கி வருகிறது,
அப்படி ஆன்மீக, ஜோதிட ஆலோசனைகளைக் கேட்ட தனியார் பள்ளி நிர்வாகம் இந்தக் கொடூர நரபலியைச் செய்துள்ளது.
இப்படி ஒரு காட்டுவிலங்காண்டித்தனம் பிஜேபி ஆளும் மாநிலத்தைத் தவிர வேறு எங்குதான் நடக்க முடியும்?
மாணவனை நரபலி கொடுத்தால் அந்தக் கல்வி நிலையம் வளர்ச்சியும், புகழும் பெறும் என்பது எத்தகைய விபரீத மூடநம்பிக்கை!
இந்த லட்சணத்தில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உத்தரப்பிரதேசத்தை உத்தம பிரதேசம் என்று, உபி. நொய்டாவில் நடைபெற்ற (26.9.2024) கண்காட்சியைத் துவக்கி வைத்து பெருமைப்படுத்தி தூக்கிப் பேசியிருக்கிறார். முதலமைச்சர் சாமியார் ஆதித்ய நாத்தையும் உச்சிக் குளிர புகழ்ச்சி மழையில் குளிப்பாட்டியிருக்கிறார்.
பி.ஜே.பி. ஆட்சியில் நாடு எந்தத் திசையில் பயணிக்கிறது? பாசிசம் என்பதன் பச்சை நிர்வாண ஆட்டத்தை மக்கள் இன்னும் எவ்வளவுக் காலத்திற்குத்தான் சகித்துக் கொண்டிருக்க முடியும்?
நரபலி கொடுத்தால் புகழும், பணமும் சேரும் என்பதுதான் ஹிந்துத்துவாவின் மூடநம்பிக்கையின் உச்சம்!
மக்கள் சக்தி என்ற பூகம்பம் வெடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை!