தமிழ்நாட்டு மீனவர்கள் கேட்பாரற்ற பிள்ளைகளா?
ஒன்றிய பி.ஜே.பி. அரசு குறட்டை விடுகிறதா?
சென்னை, செப்.28 தமிழ்நாடு மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதே சமயம் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்தத் துயர நிகழ்வுகளுக்கு இடையே தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சரின் கடிதங்கள்
அதே சமயம் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குத் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். அதோடு கைது செய்யப்படும் தமிழ்நாடு மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் நாகை மாவட்டம் செரூர் மீனவ கிராமத்தில் இருந்து மீனவர்கள் வழக்கம் போல் 9.9.2024 அன்று மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அந்த வகையில் தர்மன் என்பவரின் பைபர் படகில் சக்திவேல், தேவராஜ், கார்த்திகேயன் மற்றும் சதீஸ் ஆகிய 4 மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர். அதன்படி இந்த மீனவர்கள் 4 பேரும் கோடியக்கரையில் இருந்து தென் கிழக்கே 10.09.2024 அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இலங்கைக் கடற்படை அதிகாரிகள் அங்கு வந்து, அவர்களின் கப்பலைக் கொண்டு நாகையைச் சேர்ந்த மீனவர்களின் படகு மீது மோதவிட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் பைபர் படகு நடுக்கடலில் முற்றிலுமாக கவிழ்ந்தது. அந்தப் படகில் இருந்த 4 மீனவர்களும், கடலில் தத்தளித்தபோது மீனவர்களுக்கு எவ்வித முதலுதவியும் செய்யாமல் இலங்கைக் கடற்படையினர் அவர்களின் கப்பலில் மீனவர்களை ஏற்றி அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அங்கிருந்த மீனவர்களின் படகுக்கு அருகிலேயே விட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் 11.09.2024 அன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் நாகை மீனவர்கள் படகு மீது இலங்கைக் கடற்படை கப்பலை மோதி தாக்குதல் நடத்திய நிகழ்வு தொடர்பான காட்சிப் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிகழ்வு மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாடு மீனவர்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாழ்வாதாரத்திற்காக உயிரைப் பணயம் வைத்து கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் நிம்மதியை இலங்கைக் கடற்படையும் அவ்வப்போது சீர்குலைத்து விடுகிறது.
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகப்
பொய்க் குற்றச்சாட்டு!
எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவ்வப்போது தமிழ்நாடு மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதும், அவர்களின் பொருட்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது. இலங்கைக் கடற்படையினரின் அத்து மீறிய செயலுக்கு தமிழ்நாடு அரசும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்வதோடு, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.
ஒருபக்கம் இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் படலம் நடந்து கொண்டு இருக்க, மற்றொரு பக்கம் இலங்கைக் கடற்கொள்ளையர்களும் மீனவர்களைத் தாக்கி அவர்களின் பொருட்களை அள்ளிச் செல்லும் அதிர்ச்சிகர நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இந்த நிலையில், கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
பொருள்களும் கொள்ளை!
தமிழ்நாடு மீனவர்கள் வைத்திருந்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள வலைகள், ஜிபிஎஸ் கருவி ஆகியவற்றை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் தமிழ்நாடு மீனவர்கள் சிவசங்கர், செல்வா, தனசேகரன், ராஜகோபால் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதுமட்டுமன்றி, இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு, ராமேசுவரம் மீனவர்களின் படகு மீது மோதியதில் மீனவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் விழுந்த மேலும் மூவரில் ஒருவர் காணாமல் போனார். 2 பேர் மீட்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது இன்று நேற்றல்ல, தொடர்ந்து நடந்து வருகின்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திலிருந்து 400 விசைப்படகுகளில் 2,000 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களில் சிலர் ஜூலை 31 அன்று இரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கே ரோந்துப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினர் வன்முறையில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம் நோக்கி கரைக்குத் திரும்பிய தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை இலங்கைக் கடற்படையினர் விடாமல் துரத்தினர். அப்போது, இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு தமிழ்நாடு மீனவர் விசைப்படகு மீது மோதியது. இதனால் அந்தப் படகு கடலில் மூழ்கியது. படகில் இருந்த 4 மீனவர்களும் கடலுக்குள் விழுந்தனர்.
மீனவர்கள் போராட்டம்
இதில் மலைச்சாமி என்ற மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். கடலில் தத்தளித்த இரண்டு பேர் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். ஒருவர் காணாமல் போனார். மீட்கப்பட்ட 2 மீனவர்களையும், இறந்த மீனவர் மலைச்சாமியின் உடலையும் இலங்கைக் கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு போனார்கள்.
தகவல் அறிந்த மீனவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்க ஒன்றிய, அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காணாமல் போன மீனவரை விரைந்து மீட்கவேண்டும். கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்டுத் தர வேண்டும். இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களைப் பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்னும் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதினார். அதில் ‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த மீன்பிடி படகின் மீது இலங்கை கடற்படையினரின் ரோந்துப் படகு மோதிய துயர சம்பவம் ஆழ்ந்த வேதனையையும், கவலையையும் அளிக்கிறது.
நமது பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் இலங்கைக் கடற்படையினர் அடிக்கடி மேற்கொள்ளும் இதுபோன்ற அத்துமீறல்கள் மீனவ சமூகத்தினர் இடையே அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முன்னுரிமை அளித்து தூதரக நடவடிக்கையின் மூலம் உரிய தீர்வு காணப்படும் என நம்புகிறேன்’’ என்று கடிதத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், மீனவர்கள் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் வழக்கு ஏதுமின்றி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் யாழ்ப்பாணம் தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காகக் கொண்டு செல்லப்பட்டது.
தமிழ்நாடு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பகுதிகளில் தொடர்ந்து மீன் பிடிப்பதற்கு அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. ஆனால், தமிழ்நாடு மீனவர்கள் எல்லை மீறி வந்ததாகக் கூறி கைது செய்து சிறையில் அடைக்கும் கொடுமையைச் செய்துவந்த இலங்கைக் கடற்படை இப்போது மிருகத்தனமாக படகுமீது மோதி மீனவர்களைப் படுகொலை செய்யும் அளவுக்கு துணிந்திருக்கிறது.
வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு
இதற்குக் காரணமான இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்து தண்டிக்க வேண்டும். ஒன்றிய, அரசு தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இரு தரப்பு அதிகாரிகளும், மீனவர் அமைப்புகளை அழைத்துப் பேசியும் முடிவு ஏற்படாமல் போனதற்குக் காரணம் என்ன? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஒன்றியத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாடு மீனவர் பிரச்சினையில் மாற்றம் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில்தான் இப்படி நடக்கிறது; நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலங்கைக் கடற்படையின் அட்டகாசத்தைத் தடுத்து நிறுத்துவோம் என்று பா.ஜ.க. உறுதிமொழி அளித்தது. அந்தத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியும் அமைத்தது; ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன; எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
நாகையில் மக்கள் கடல் திரளட்டும்!
இலங்கையின் தாக்குதல் ஏதும் குறையவில்லை. இலங்கையின் பொருளாதார நெருக்கடி நேரத்தில் இந்தியாவும், தமிழ்நாடும் கைகொடுத்தன. இந்த நன்றிகூட இல்லாமல் தமிழ்நாடு மீனவர்களைத் தொடர்ந்து இலங்கை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது.
இந்திய மீனவர்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இறையாண்மையைக் காக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு இல்லையா?
தமிழ்நாடு என்றாலும், தமிழர்கள் என்றாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு அலட்சியம் – இலங்கை அரசுக்கோ இளக்காரம்.
நாகையில் அக்டோபர் முதல் தேதி – நாகைக் கடல் கரைக்கு வந்ததோ – என்று கருதும் வண்ணம் வாருங்கள் தோழர்காள்!