*முதியோர்களானாலும், மூப்புக்கு இரையாகாமல், மனதால் ‘துருதுரு வென்று’ உள்ளவர்கள். அது பொது வாழ்வில் – எப்போதும் மக்களோடு மக்களாகி தொண்டறத்தைக் தன் தூய வாழ்வியலாகக் கொண்டவர்கள் எவரும் இளையோர்களே!
மனிதர்களின் வயதுக்கு முதுமை உண்டு. ஆனால், ஆசைகளுக்கு முதுமை இல்லை.
*மனிதனின் வளர்ச்சி என்பது உச்சிக்குச் சென்று பின் தளர்ச்சி என்பது வளர்ச்சிக்கு வழியனுப்பச் செய்யத் துவங்குகிறது.
நாம் புதுப்புது அனுபவங்களைக் கற்றுக் கொள்ளுதலுக்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாதே! அது மகிழ்ச்சியைத் தரும். நீண்ட ஆயுளைப் பெறுபவர்களாகவும் ஆவோம்.
*தங்களைப் பெற்று,வளர்த்து ஆளாக்கி, கல்வி கொடுத்து. உத்தியோகம் பார்த்து கைநிறையச் சம்பாதிக்கும் நிலைக்குத் தன்னை உருவாக்கிய பெற்றோர்களை அவர்களது முதுமைக்காலத்தில் மிகவும் மோசமாக, அலட்சியத்துடன் ஏதோ பிச்சைக்காரர்களைப் போல கேவலமாக நடத்தும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். பயன்படுத்திவிட்டு, பிறகு குப்பையில் எறியும் பொருட்களைப் போன்று தம் பெற்றோரை மனிதர்களாகவே நடத்தாத அவரது பிள்ளைகள், பெண்கள் -இரு பாலரும் மிகப்பெரிய சமூக விரோதிகள். நன்றி இன்றி கொல்லும் நயவஞ்சக நரிகள்.
*6. முதியோர் இல்லங்களைத் தேடாதீர்கள் உங்கள் பெற்றோர்களுக்காக மூடிய உங்கள் உள்ளங்களைச் சற்றே அகலமாகத் திறந்து அவர்களை மீள் குடியேற்றுங்கள்.
*நீங்கள் கட்டிய புதிய வீட்டிற்குத் ‘தாய் இல்லம்’ என்று பெயர் வைத்து, நாட்டுக்கு ஒரு வேடம் காட்டி உங்கள் தாய்மாரை முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடாதீர்கள்.
*உங்கள் பிள்ளைகளுக்கு ‘நாளைக்கு நீங்களும் பெற்றோர்களாக நரைத்த முடியுடன் வருவீர்கள் – அப்போது எங்களுக்கு உதவுவதுபோல உங்கள் மகன் உங்களுக்கு உதவுவான்’ என்று கூறி உணர்த்துங்கள்.
*முதுமையை வெல்ல முடியாவிட்டாலும் நல்லபடியாக ஆக்கிக் கொள்ள முயற்சியுங்கள்.
*உங்கள் பெற்றோர்களிடம், முதியவர்களிடம் அன்பும் மரியாதையையும் காட்டுங்கள். உங்களுக்கும் முதுமை வருமே! அப்போது உங்கள் பிள்ளைகள் – பேரப் பிள்ளைகள் உங்களை மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க அப்போதுதான் உங்களுக்கு உரிமை உண்டு.
*வீட்டில் உள்ள முதியவர்களுக்கென சில மணித்துளிகளையாவது ஒதுக்கி, கனிவு, பொங்க விசாரியுங்கள். அப்பொழுதுதான் பிறக்கும்போது அழுது கொண்டே இந்த மண்ணுக்கு வந்தவர்கள். இறக்கும் போது மகிழ்ச்சியோடு, மனநிறைவோடு சிரித்துக் கொண்டே தம் மக்கள், தம் சுற்றம், தம் நட்பு வட்டம். சமூகம் இவைகளிடமிருந்து விடை பெறுவதற்கு வாய்ப்பாக அது அமையும்.
*உடல் அழகு என்பது வயது ஏற ஏற மாறவே செய்யும். முதுமை தனது பணியை யாருக்காகவும் எதற்காகவும் நிறுத்திக் கொள்ளுவதில்லை.
அய்யோ முதுமை வந்துவிட்டது என்று அலறி, உங்களை மேலும் ஒரு போதும் ஆக்கிக் கொள்ளாதீர்கள். உள்ளத்தால் இளமை கொண்டால் உடல் வலிமை கொள்ளும் மறவாதீர்கள்.
*இளைய நண்பர்களே, நினைவில் நிறுத்துங்கள் முதுமை நமக்கும் வரும். நோய்கள் யாருக்கும் தனி உடைமையல்ல: எனவே, ஏளனப் பார்வையோடு சலிப்போ, சலசலப்போ கொள்ளாமல், ஒத்தறிவுடன் முதியவர்களிடம் பரிவு காட்டி உங்களை மனிதத்தால் அளக்கும் போது அதில் கூடுதல் மதிப்பெண்களைப் பெறும் தோழர்களே நம் கண்மணிகளே.