சென்னை, செப்.27 ஒன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா் கூட்டமைப்பு சார்பில் தொட ரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்றிய அரசு இந்திய தண்டனைச் சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்றும், குற்ற விசாரணை முறைச்சட்டத்தை பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சிகள் சட்டத்தை பாரதிய சாக்க்ஷய அதிநியம் ( பிஎஸ்ஏ) என்றும் பெயா் மாற்றம் செய்து கடந்த 1.7.2024 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது.
இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி ஏற்கெனவே திமுக சார்பில் ஆா்.எஸ். பாரதி, வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம் உள்ளிட்ட பலா் வழக்கு தொடா்ந்துள்ளனா்.
அதேபோல இந்த சட்டங்களை ஆதரித்து பாஜக வழக்குரைஞா் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் வழக்கு தொடா்ந்துள்ளார். இந்நிலையில், இந்த சட்டங்கள் அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், “இந்த புதிய சட்டங்களுக்கு ஹிந்தியில் பெயா் வைத்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டில் தமிழா்கள் மீது ஹிந்தி வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் உள்ளது. இந்த சட்டங்களை அமல்படுத்தும் முன்பாக எந்தவொரு விவாதமும் நடத்தப்படவில்லை. எனவே, இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி. வில்சன், அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமாக இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சோ்த்து பட்டியலிட உத்தரவிட்டனா்.