மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி!
மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி! ஒன்றிய அரசைக் கண்டித்து ஆகஸ்டு 12 ஆம் தேதி சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில்கூட…
சமூகநீதி என்பது நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே, எடுத்த எடுப்பிலேயே உறுதி செய்யப்பட்டுள்ள குடிமக்களின் பறிக்கப்படக் கூடாத உரிமையாகும்!
‘Justice, Social, Economic and Political’ என்ற சொற் றொடர்கள் மிகவும் கோடிட்டுக் காட்டப்படவேண்டிய முக்கிய அம்சங்களாகும் – அந்த வரிசையில்கூட, முதலில் சமூகநீதி, இரண்டாவது பொருளாதார நீதி, மூன்றாவது அரசியல் நீதி என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
ஆனால், இந்த சமூகநீதியை இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் – தி.மு.க. முதலிய கட்சிகளின் கூட்டணியான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி(U.P.A.- United Progressive Alliance) அரசு படிப்படியாக செய்தது!
சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரைகளில், வேலைவாய்ப்பில் 16(4) என்பதற்கே முன்னுரிமை கொடுத்து ஆணை பிறப்பித்து, அது பல கட்டங்களைக் கடந்து, இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு, அந்த ஆணை செல்லுபடியாகும் என்ற தீர்ப்பைத் தந்து, அதற்குமுன் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (OBC) ஒன்றிய அரசுத் துறைகளில் கிடைக்காத இட ஒதுக்கீடு, 27 சதவிகித இட ஒதுக்கீடு (52 சதவிகிதம்தான் மண்டலின் முக்கிய பரிந்துரை), S.C., S.T. போன்ற சமூகத்தவருக்கு 22.5 சதவிகிதம் கொடுத்துவிடுவதால், 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்ற பாலாஜி வழக்குத் தீர்ப்பையொட்டி எஞ்சிய 27 சதவிகிதத்தை – பிற் படுத்தப்பட்டோருக்கு (OBC) அளிக்கும்படி ஆணை செயல்படுத்தப்பட்டது.
நாம் தொடர்ந்து போராடி வற்புறுத்தி வந்தோம்- ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஒத்துழைப்புடன்…
ஆனால், வேலைவாய்ப்பைவிட கல்விக்கும் இட ஒதுக்கீடு மிக முக்கியம் என்பதால், வேலை வாய்ப்புக் குள்ள அதே இட ஒதுக்கீடு, மத்திய நிறுவனங்களின் கல்விக்கும் செயல்படுத்தப்பட நாம் தொடர்ந்து போராடி வற்புறுத்தி வந்தோம் – ஒத்தக் கருத்துள்ளவர்களின் ஒத்துழைப்புடன்.
அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற அமைப்புகள், மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கல்வியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவருக்கு, அதற்குமுன் கிடைக் காத இட ஒதுக்கீடு கிட்டும் வாய்ப்பு – அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்து நிறைவேற்றிய 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் சட்டம்மூலம் கிடைத்தது!
மத்திய பல்கலைக் கழகங்களில் சமூகஅநீதி!
அதைப் பிரதமர் மோடி தலைமையில் அமைந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு தட்டிப் பறிக்கும் வகை யில், மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமன சதவிகிதங்கள்பற்றி வெளியாகியுள்ள விவ ரங்கள் இதோ:
45 மத்தியப் பல்கலைக் கழகங்களில் 4 சதவிகிதம்தான் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினைச் சார்ந்த பேராசிரியர்கள் உள்ளனர்.
(பட்டியல் கீழே காண்க)
இதற்குப் பொருள்:
மண்டல் பரிந்துரை ஆணை மோடி ஆட்சியில் குப்பைக் கூடையில்தான் என்பது புரிகிறது.
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்தே வழங்கப்பட்டுள்ள சட்ட வாய்ப்பின்படி S.C., S.T. போன்ற ஆதிதிராவிடர், பழங்குடியினருக்காவது – ஒதுக்கீடுபடி கிடைக்கவேண்டிய 23 சதவிகிதம் நிரப்பப்படுகிறதா? என்றால், அதுவும் இல்லை.
முழு விவரங்கள் இதோ:
பார்ப்பனர்களுக்குத்தானே!
முன்னேறிய ஜாதியினருக்குத்தானே!!
(1). S.C., S.T., OBC ஆகிய மூன்று பிரிவினர்களுக் கான இட ஒதுக்கீட்டிற்கு மிகவும் குறைந்த அளவே பதவிகளை நிரப்பிவிட்டு, மீதமாகும் எஞ்சிய பதவிகள் அத்தனையும் முன்னேறிய ஜாதியினருக்காகக் கபளீ கரம் செய்யப்படுகிறது. அவர்களது சதவிகிதத்திற்குமேல் முன்னேறிய ஜாதியினர் பன்மடங்கு அனுபவிக்கிறார்கள் – இந்த ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. மோடி ஆட்சியில்!
சமூகநீதி குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது!
இவ்வாண்டு நிரப்பப்படாத பதவிகளை வரும் சில ஆண்டுகளில் நிரப்பிக்கொள்ளும் சமூகநீதியின் நெம்பு கோலான Carry Forward கிடையாது என்றால், அப் பதவிகள் யாருக்குச் செல்லுகிறது? பார்ப்பனர்களுக்குத் தானே! முன்னேறிய ஜாதியினருக்குத்தானே!!
(2). உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) என்ற பெயரில் தரப்பட்டுள்ள பத்து சதவிகித இட ஒதுக்கீடுமூலம் மற்றொரு வகையிலும் உயர்ஜாதியினருக்குத் தாரை வார்த்தல் நடைபெறுகிறது.
(3). அரசுத் துறைகளில் உள்ள இட ஒதுக்கீடு, தனியார்த் துறையில் இல்லாத நிலையில், பொதுத் துறையை தனியார்த் துறையாக மாற்றி, உயர்ஜாதிப் பார்ப்பனருக்கே எல்லா பதவிகளும் என்ற கொடுமை – பச்சையான அக்கிரமமே!
ஏற்கெனவே பல்கலைக் கழகங்களில், முன்னேறிய ஜாதியினரில் பேராசிரியர்களாக ஏராளமான பேர் இருக்கிறார்கள். கூடுதலாக EWS (உயர்ஜாதி ஏழைகளுக் கான இட ஒதுக்கீடு) என்ற பகற்கொள்ளை யான ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடும் அவசர அவசர மாக அனுமதிக்கப்பட்டுள்ளது!
இதை பாதிக்கப்பட்ட சமூகத்தவர்கள் எத்தனை பேர் உணர்ந்தார்கள் என்பதே வேதனையான கேள்விக்குறி!
ஆகஸ்டு 12: தலைநகர் சென்னையில்
எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
இதை எதிர்த்து ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்து தலைநகர் சென்னையில் ஆகஸ்டு 12 ஆம் தேதியன்று எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பா.ஜ.க. அரசின் சமூகநீதிப் பறிப்பு, நயவஞ்சகம்பற்றி நாடெங்கும் சமூகநீதி உணர்வாளர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களிலும் நன்றாக விளக்கப்படவேண்டும்.
இது அவசரம், அவசியம்!
இளைஞர்களே,
சமூகநீதிப் போராளிகளாக மாறுங்கள்!
‘‘என் மண் – என் மக்கள்” என்ற வேஷம் கட்டி ஆடும் அண்ணாமலைகள் இதற்கென்ன பதில் கூறப் போகிறார்கள்?
படித்த இளைஞர்களே, உங்கள் கதி இப்படியா நிர்க்கதி ஆவது?
சமூகநீதிப் போராளிகளாக நீங்கள் மாறவேண்டாமா?
சிந்தியுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.8.2023