சென்னை, செப்.27 சென்னை, கிண்டி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில் மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு புத்தகத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களி டம் அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது: ஆராய்ச்சி என்பது மருத்துவ முன்னேற்றத்தின் அடிப்படையாகும். இதன் மூலம் தான் நமது சமுதாயத்தின் நலம் மற்றும் ஆரோக்கியத்தை தொடர்ந்து மேம்படுத்த முடியும். ஆராய்ச்சியின் மூலமாக தான் பல புதுமைகளை நோக்கிய மருத்துவ அறிவியலின் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்தாண்டின் மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பு, இன்றைய வேகமாக மாறிக்கொண்டிருக்கும் மருத்துவத்துறைக்கு மிக முக்கியமானது. செயற்கை நுண்ணறிவு உலகளவில் மருத்துவத்துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மக்களின் உடல் நலனை காப்பதில் நமது பங்கு அதிகரித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக பெரும் சாத்தியக்கூறுகளை செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ளது. நோய்களை கண்டறிதல் முதல் தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள், ரோபோட்டி அறுவைச் சிகிச்சைகள் வரை ஏற்கனவே பல முக்கிய தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய உலகில் இந்த ஆராய்ச்சி போட்டிகள் மிகவும் முக்கியமானவை ஆகும். எதிர்காலத்தை நோக்கி பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவு, மருத்துவர்களுக்கு பதிலாக செயல்படாது. ஆனால் இது திறமைகளை மேம்படுத்த உதவியாக இருக்கும். மேலும் ஏ.அய். விரைவாக துல்லியமாக மற்றும் திறமையான சுகா தாரத்தை வழங்க நமக்கு உதவும். தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகத் தரத்திலான மருத்துவ சேவைகளை பெறுவதை உறுதிப்படுத்த குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள சுகாதார சேவைகள் மேம்படுத்த ஏஅய் பெரிதும் உதவும் என நம்புகிறேன்’ என்றார்.