சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ‘தமிழன் கால்வாய்‘ என்று அழைத்தவர் ஆதித்தனார்!

Viduthalai
3 Min Read

அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே வரலாற்று நினைவுச் சின்னமாக இருக்கும் ஆதித்தனாருக்கு!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்து

சென்னை, செப்.27 சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ‘தமிழன் கால்வாய்‘ என்று அழைத்தவர் ஆதித்தனார்! அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே ஆதித்தனாருக்கு வரலாற்று நினைவுச் சின்னமாக இருக்கும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சி.பா.ஆதித்தனாரின் 120 ஆவது பிறந்த நாளான இன்று (27.9.2024) சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஆதித்தனாரின் மாமனார் ஓ.இராமசாமி
மதிக்கத்தக்க சாதனையாளர் அய்யா ஆதித்தனார் அவர்கள். தந்தை பெரியார் அவர்களுக்கும், ஆதித்த னார் அவர்களுக்கும் மிகப்பெரிய அளவிற்கு நெருக்கம் உண்டு. அதுமட்டுமல்ல, சுயமரியாதை இயக்கத்தி னுடைய நூற்றாண்டு இந்த ஆண்டு. மலேயாவிலும், சிங்கப்பூரிலும் சுயமரியாதை இயக்க நிகழ்வுகளை தந்தை பெரியார் அவர்களை அழைத்து, சிறப்பாக நடத்தியவர் ஆதித்தனார் அவர்களுடைய மாமனார் திரு.ஓ.இராமசாமி அவர்களாவார்கள்.
அப்படி அந்தக் காலத்திலேயே தந்தை பெரியார் அவர்களால் ஈர்க்கப்பட்டு, தமிழ்நாட்டிற்கு வந்த பிறகும் கூட, தந்தை பெரியார் – ஆதித்தனார் உறவு என்பது, பக்கத்து வீட்டு உறவைவிட தாண்டிய ஒன்றாகும்.
கொள்கையால், தமிழின உணர்வால் அவர்கள் இணைக்கப்பட்டவர்கள் – அப்படிப்பட்டவருடைய உணர்வு – தமிழ்நாட்டினுடைய உரிமைகளுக்காக – ஆதித்தனாருடைய போராட்டங்கள் மறக்கப்பட முடியாதவை.

‘‘தமிழன் கால்வாய்’’ என்று அழைத்தவர்
குறிப்பாக, ரூ.2000 கோடிகளுக்கு மேல் செலவழிக்கப்பட்டு, பிறகு அது இராமர் சேது பாலம் என்று போலித்தனமாகச் சொல்லி, நிறுத்தி வைக்கப்பட்ட நிலை இப்போது! அந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை, ‘‘தமிழன் கால்வாய்’’ என்று அழைத்த பெருமை, ஆதித்தனார் அவர்களுக்கே உண்டு.
அந்தத் ‘‘தமிழன் கால்வாய்’’ மீண்டும் தொடங்கப்பட வேண்டும். அந்தத் திட்டம் நிறைவடைவதற்கு இன்னும் 23 கிலோ மீட்டர்தான் மீதம் உள்ளது.

வரலாற்று நினைவுச் சின்னம்
இராமர் பாலம் என்று சொல்வதற்கு ஆதாரம் இல்லை; அது புராணக் கற்பனை என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், மீண்டும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் – தமிழன் கால்வாய் என்று ஆதித்தனார் அவர்கள் அழைத்த அந்த முறையிலேயே அந்தத் திட்டத்தை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஆதித்தனார் அவர்களுக்கு மிகப்பெரிய வரலாற்று நினைவுச் சின்னமாக இருக்கும் என்பதை எடுத்துச் சொல்லி, ஆதித்தனார் அவர்கள் மறையவில்லை; வாழ்கிறார்.
வாழ்க, வளர்க ஆதித்தனாருடைய நினைவுகள்!
– இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து
தமிழர் தலைவர் மரியாதை
முன்னதாக, தமிழ்நாடு அரசின் மேனாள் சட்டப் பேரவைத் தலைவரும், ‘தினத்தந்தி‘ நாளிதழின் நிறுவனருமான சி.பா.ஆதித்தனார் அவர்களின் 120 ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (27.9.2024) காலை சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் சுரேஷ், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், உடுமலை வடிவேல், வை.கலையரசன், வை.கலைமணி, மகேஷ், அசோக்குமார், ஈ.குமார், நிலவன், விகேஷ், முரளிகிருஷ்ணன், சின்னதுரை மற்றும் திரளான கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *