ஈரோடு, செப்.26- ஈரோட்டில் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மதுவிலக்கு என்பதில் திமுகவுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் ஒரே நாளில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவது என்பது சாத்தியமில்லை. படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். ஏற்கெனவே 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது.
பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படு கிறது. எனவே முன்னேற்பாடுகளை செய்துவிட்டு மதுக்கடைகள் மூடப்படும். தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை ஒன்றிய அரசு கொண்டுவந்தால் தமிழ்நாட்டில் அமல்படுத்த தயாராக இருக்கிறோம்.
பிரச்சினைக்குரிய டாஸ்மாக் மதுக்கடைகளை தேர்வு செய்து வருகிறோம். எனவே மதுக்கடைகளை மூடுவதற்கான பட்டியல் தயார் செய்து இருக்கிறோம். ஆனால் மூடப்படும் கடைகள் குறித்து முடிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
உலகளாவிய விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியலில்
பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர்கள் 5 பேர்
திருச்சி, செப்.26- அமெரிக்காவின் ஸ்டான்போா்ட் பல்கலைக்கழக எல்சிவியா் தரவரிசைப் பட்டியலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சோ்ந்த 5 பேராசிரியா்கள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சோ்ந்த 3 போ் இடம் பிடித்துள்ளனா்.
அமெரிக்காவின் ஸ்டான்போா்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெவ்வேறு துறைகளில் சிறந்த விஞ்ஞானிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில், 2024, ஆகஸ்டில் வெளியான 7-ஆவது தரவரிசை பட்டியலில் 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளின் கீழ் 2.17 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இதில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் எம். லட்சுமணன் (இயற்பியல்), ஆா். ரமேஷ் (வேதியியல்), எம். பழனியாண்டவா் (வேதியியல்), எம். சத்தியபாமா (தாவரவியல்), தை.சி. சபரிகிரிசன் (இயற்பியல்) ஆகிய 5 போ் இடம் பெற்றுள்ளனா். குறிப்பாக உலகளவிலான முதல் 2 சதவிகித எண்ணிக்கைக்குள்ளானோா் பட்டியலில் உள்ளவர்களில் இவா்கள் இடம்பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சோ்ந்த முனைவா் கே. ரவிச்சந்திரன் (இயற்பியல்), முனைவா் எம்.அய்யனாா் (தாவரவியல்), முனைவா் எம்.ஜோதிபாஸ் (இயற்பியல்) ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்றுள்ள போராசிரியா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் ம.செல்வம் பாராட்டினாா். அப்போது அவா் கூறுகையில், 2024ஆம் ஆண்டுக்கான என்அய்ஆா்எஃப் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் பாரதிதாசன் பல்கலைக் கழகம் 36 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இது ஆராய்ச்சி மற்றும் பிற கல்வி பங்களிப்புகளில் சிறந்து விளங்கும் வகையில் பல்கலைக்கழகம் செய்து வரும் சிறப்புப் பணிகளைப் பிரதிபலிக்கிறது என்றாா்.