ஜப்பானிய மொழியில் சு என்றால் துறைமுகம், நாமி என்றால் அலை. எனவே துறைமுகத்தைத் தாக்கும் பேரலைகளுக்கு சுனாமி என்று பெயர் வைத்தனர்.
இந்தியாவில் டிசம்பர் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பாதிப்புகளை நாம் மறந்திருக்க மாட்டோம். இந்தோனேசியாவில் நடந்த கடலடி பூகம்பத்தால் உருவான இந்த சுனாமி சுற்றி இருந்த 14 நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது.
எதிர்காலத்தில் இதை விட மிகப்பெரிய பேரழிவை உருவாக்கும் மெகா சுனாமி ஏற்படலாம் என்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள்.
புவி வெப்பமயமாதலால் உலகம் முழுதும் தொடர்ந்து பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. இதனால் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கடல் மட்டம் 3.8 செ.மீ. உயரம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 500 அடி உயரமான அலைகள் தோன்றலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
கடலோரம் உள்ள துருவப் பகுதிகளில் பனிக்கட்டிகள் உருகும்போது பெரிய அளவிலான பனிப்பாறைகள் கடலில் விழலாம். அதேபோல் பனி உருகியதால் மண் அல்லது பெரும் பாறைகள் சமநிலை இழந்து சரியலாம். இதனால் மிக உயரமான அலைகள் தோன்றி பேரழிவு ஏற்படுத்தும்.
இப்படியான பேரலைகள் ஏற்கெனவே கிரின்லாந்தில் ஏற்பட்டுள்ளன. ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள பனிப்பாறை கடலில் விழுந்தபோது 200 அடி உயரமான அலைகளை உருவாக்கியுள்ளன.
இதேபோல் எதிர்காலத்தில் மற்ற கண்டங்களிலும் நிகழலாம். இன்றைக்கு சுனாமியைக் கணிக்கப் புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன என்றாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நமது கடமை.