சென்னை, செப்.26 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: காலாவதியாகியும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் பரனூர், கிருஷ்ணகிரி, சிறீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை போன்ற சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி, ஒன்றிய அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அண்மையில், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்டபகுதிகளில் 3 புதிய சுங்கச்சாவடிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடி கட்டணங்கள் எதற்காக வசூலிக்கப்படுகின்றன, அடிப்படை காரணம் என்ன, இன்னும் எத்தனை நாளைக்கு கட்டண வசூல் நீடிக்கும் என்பது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பல சுங்கச் சாவடிகளில் வசூலிக்க வேண்டிய தொகையின் இலக்கு முடிந்தும், தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு, பெரியஅளவில் ஊழல் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்க வேண்டும். ஒன்றிய அரசின் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் குறித்து வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையின்பேரில் ஒன்றிய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டு நர்களை, சுங்கச்சாவடிக் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையடிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழகத்தில் உள்ள 70 சுங்கச்சாவடிகளிலும் அந்தந்தப் பகுதி மாவட்ட காங்கிரஸ் சார்பில் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறந்த பெண் குழந்தைகளுக்கு விருது
செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை, செப்.26 சிறந்த பெண் குழந் தைகளுக்கான விருது பெற தகுதியுடையவா்கள் செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரதீர செயல் புரிந்த 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தை களுக்கு தேசிய பெண்குழந்தைகள் நாளான ஜன.24-இல் சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது மற்றும் பாராட்டுப் பத்திரமும், ரூ.1லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.
இவ்விருதுக்கு விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை திருமணத்தைத் தடுத்தல் மற்றும் தவிர்த்தல் மற்றும் வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனையை செய்திருக்க வேண்டும். இந்த தகுதிகள் கொண்ட பெண்குழந்தைகளை முதன்மைகல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா், காவல்துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனத்தினா் கண்டறிந்து, விருதுக்கான முன்மொழிவு மற்றும் பரிந்துரை செய்து அலுவலகத்துக்கு அனுப்பலாம். விருதுக்கு இணைய தள முகவரியில் செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.