முனைவர் கோ. ஒளிவண்ணன்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த சில மாதங்களாகப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ‘‘வாருங்கள் படைப்போம்’’ குழுவுடன் இணைந்து தமிழ்நாடெங்கும் பல்வேறு பகுதிகளில் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், திறன்களைச் செம்மைப்படுத்தவும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் தலைசிறந்த படைப்பாளிகளின் துணையோடு இந்தப் பட்டறைகள் நடத்தப்படுகிறது. இதன் மூலமாக நூற்றுக்கணக்கானவர்கள் குறிப்பாக மாணவ,மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு எழுதும் கலையோடு சமூக நோக்கும்,பகுத்தறிவு சிந்தனையும் ஊட்டப்படு கிறது.
சென்னை, மதுரை மாநகரங்களில் வெற்றிகர மாக நடத்திவிட்டு கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 21 ஆம் நாள் திருச்சி மாநகரில் மூன்றாவது பயிற்சிப்பட்டறை பெரியார் மருந்தியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
காலை ஒன்பது மணிக்கே பதிவு செய்தோர் அரங்கத்தில் குவியத் தொடங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை அவர்கள் தலைமையில் சரியாக 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை உரையில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர், திராவிடர் கழகம் குறித்துப் பேசினார்.
மாணவர்கள் எப்படித் தங்களைத் திறம்பட உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிப்பிட்டார்.
‘‘வாருங்கள் படைப்போம்’’ குழுவின் தலைவர் கரூர் வினிதா மோகன் வரவேற்புரை வழங்க, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு நோக்க உரை வழங்கினார். தன் உரையிலே தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் படைப்புகளைக் குறிப்பிட்டு இதுபோன்ற பட்டறைகளின் வழியாக எழுத்தாளர்களை மட்டுமல்ல பகுத்தறிவுள்ள எழுத்தாளர்களை உருவாக்குவதைக் கடமை யாகக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.கோ கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழுவின் மாநில ஒருங்கி ணைப்பாளர் வி.சி.வில்வம், ப.க.பொறுப்பாளர்கள் பா.லெ.மதிவாணன், பி.மலர்மன்னன்,பென்னட் எனப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதல் அமர்வில் இன்றைக்கு உலகமெங்கும் பிரபலமான தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பயிற்சி அளித்தார். ‘கருவில் திரு’ என்ற மாறுபட்ட தலைப்பை எடுத்துக்கொண்டு ஒரு மனிதன் கருவிலேயே கற்றவனாக, அறிஞனாக உருவாக முடியாது, முறையான பயிற்சிகள் மூலமே தன்னைப் படைப்பாளியாக்கிக் கொள்ள முடியும் என்பதை விளக்கினார். தனது உரையில் பல செய்திகளைக் கேட்பவர்களுக்கு எளிதாக விளங்கக் கூடிய வகையில் தந்தை பெரியாரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் வழியாக எடுத்துரைத்தார். நாள்தோறும் படிக்க வேண்டும். நாள்தோறும் எழுத வேண்டும் இதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
அடுத்த அமர்வில் எழுத்தாளர் சாம்ராஜ் ‘கதை எழுதத் தான் வேண்டுமா இந்த வாழ்வில்’ என்ற கேள்வியை எழுப்பி அதற்கு விடை கண்டார். கதை சொல்வது மரபு.
மரபணுக்களில் உள்ளது. ஒரு மனிதன் இறந்தா லும் அவனது படைப்புகள் காலத்தினை தாண்டி நிற்கும் வல்லமை கொண்டுள்ளது. தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய எழுத்தின் மூலமாக இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். படைப்புகளின் வழியே மட்டுமே சமூக மாற்றத்திற்கான கேள்விகளை எழுப்ப முடியும். அதனைப் பெரியார் திறம்படச் செய்தார். நாம் எழுதுவது நமக்காக மட்டுமல்ல அதில் ஒரு சமூகப் பொறுப்பும் இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். வளரும் எழுத்தாளர்களுக்கு பல்வேறு நுணுக்கமான செய்திகளை உதாரணங்கள் மூலமாக உணர்த்த அமர்வு இனிதாகக் கடந்தது.
அனைவருக்கும் சுவையான அதே நேரத்தில் பிற்பகல் அமர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான உணவு வழங்கப்பட்டது.
உணவு இடைவேளைக்குப் பிறகு மூன்றாவது அமர்வாகக் கவிஞர் சல்மா தான் எவ்வாறு பல்வேறு எதிர்ப்புகளுக்கும், இன்னல்களுக்கும் இடையே புத்தகங்கள் படித்து, எழுத்தாளராக உருவாகிக் கொள்ள முடிந்தது என்பதை உருக்க மாகச் சொன்னார். எழுதுவதற்குக் கருத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்களை விளக்கினார்.
அடுத்த அமர்வாகப் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் முனைவர் கோ.ஒளிவண்ணன் கட்டுரைகள் வரையும் கலையை விளக்கினார். கூடுதலாகச் செயற்கை நுண்ணறிவு குறித்தும் பேசினார்.
அய்ந்தாவது அமர்வில் கவிச்சுடர் கவி தைப்பித்தன் ‘எங்கெங்கு காணினும் கவிதையடா’ என்ற தலைப்பில் கவிதைகள் எழுதுவதற்குக் கவனத்தில் கொள்ள வேண்டியவை, அது தொடர்பாகத் தனது வாழ்வில் ஏற்பட்ட பல அனுபவங்களைச் சுவையாகப் பகிர்ந்து கொண்டார்.
இறுதி அமர்வில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், காலையிலிருந்து நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்து ‘கேப்சூல்’ வடிவத்தில் வழங்கினார்.
பங்கு கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.
இதற்கு முன் நடந்த பயிற்சிப்பட்டறை களுக்கும் நடந்து முடிந்ததற்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு அமர்வின் இறுதியிலும் பயிற்றுநர்களிடம் கேள்விகள் கேட்ட வண்ணம் இருந்தனர். கேள்விகள் மிக ஆழமானவை, அடர்த்தியானவை. இதனால் அமர்வுகளைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பது ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சவாலாக இருந்தது. சிறந்த கேள்விகள் கேட்டவர்களுக்கு ‘பெண் ஏன் அடிமையானாள்? என்கிற புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்தப் பயிற்சிப் பட்டறை சிறப்பாக அமைந்த தற்குக் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுடைய பங்கு அளப்பரியது. நல்ல வழிகாட்டுதல்களை அளித்து நிகழ்வு சிறக்க வழிகாட்டினார்.
பயிற்சிப் பட்டறைகளில் மாணவர்களுக்குக் கட்டணம் வாங்காமல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கான செலவுகளைப் பல்வேறு தரப்பினர் ஏற்று வருகின்றனர்.
‘வாருங்கள் படிப்போம்’, ‘வாருங்கள் படைப்போம்’ போன்ற குழுக்களிலிருந்து ஏராளமான நண்பர்கள் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறார்கள். வினிதா மோகன்,லோ. குமரன், பத்மா அமர்நாத், சர்மிளா பாலகுரு, திருச்சி எஸ்.சங்கரன் ஆகியோர் இம்முறை உதவி செய்தனர். இன்னொரு முக்கிய ஒருங்கி ணைப்பாளர் அர்ஷா அவர்களின் பல்வேறு பங்களிப்புகள் அளப்பரியது. இக்குழுவைச் சேர்ந்த பட்டுக்கோட்டை வாசியான பள்ளி ஆசிரியர் சுமித்ரா அவர்கள் முழு நாளும் நிகழ்ச்சிகளை மிக நேர்த்தியாகவும் நயமாகவும் தொகுத்தளித்தார்.
திருச்சியைச் சார்ந்த மாதவன் அவர்களின் நிதியுதவி குறிப்பிடத்தக்கது.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் திருப்பத்தூர் ம. கவிதா, அமெரிக்காவின் மோகன் வைரக்கண்ணு, திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஆரோக்கியராஜ் எனப் பலர் உதவி செய்தனர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வா.நேரு அவர்களின் மகன் வாருங்கள் படிப்போம் குழுவின் முக்கிய திறனாய்வாளர் சொ.நே. அன்புமணி எல்லாப் பயிற்சிப்பட்டறைகளிலும் தன் முழு அர்ப்பணிப்பைத் தொடர்ந்து அளித்து வருகிறார். மதுரை, திருச்சி எனத் தொடர்ந்து ஒத்துழைப்பு நல்கும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் அண்ணன் பாவலர் சுப.முருகானந்தம் அவர்களின் பங்கும் இந்த நிகழ்வில் சிறப்பானது. அனைவரையும் ஒன்றிணைத்துத் திறம்பட இப்பயிற்சிப் பட்டறை களை நடத்தி வரும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் வா.நேரு அவர்களின் ஆளுமைத் திறன் போற்றத்தக்கது. சென்னை மதுரை திருச்சியைத் தொடர்ந்து பல்வேறு மாநகரங்களிலும் நகரங்களிலும் ஆண்டு முழுவதும் பயிற்சிப் பட்டறை நடைபெறும் என்று வா.நேரு அறிவித்தார்.
பயிற்சிப் பட்டறையின் இன்னொரு சிறப்பு, நேரக் கட்டுப்பாடு. சரியான நேரத்தில் தொடங்கிச் சரியான நேரத்தில் முடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இதன் அமைப்பாளர்கள் .