ஆஸ்திரேலியாவில் குடியேறும் ஜாதி வெறி!

Viduthalai
4 Min Read

அமைச்சரிடம் சட்டமன்றத்தில் சரமாரி கேள்வி!

ஆஸ்திரேலியாவில், சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் அமைச்சர் மாண்புமிகு ஸ்டீஃபன் கேம்பர் ( Stephen Kamper) அவர்களிடம், மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டுக் குழுவில், அம்மாநில பல்லினக் கலாச்சார ஆஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் (Greens Party) சட்டமன்ற மேலவை உறுப்பினர் கேய்ட் ஃபேர்மேன் (Cate Fahrmann) அவர்கள் ஆஸ்திரேலியாவில் பெருகி வரும் மத வெறுப்பு மற்றும் ஜாதியக் கொடுமைகள் குறித்து சரமாரியான கேள்வி களைத் தொடுத்தார். அந்த விவாதம் கீழ் வருமாறு.

திருமதி கேய்ட் ஃபேர்மேன்: அமைச்சர் அவர்களே வணக்கம். சிட்னியின் சில பகுதிகளில் இசுலாமியஎதிர்ப்பும், சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சும், மத ரீதியான பாகுபாடுகளும் (discrimination) அதிகரித்து வருவது உங்களுக்குத் தெரியுமா? இந்த சமுதாய மக்களுக்கு தங்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்து வருவதை அமைச்சர் அறிவாரா? மேலும், எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, நியூ சவுத் வேல்ஸ் பள்ளிகளில் குழந்தைகள் அனுபவிக்கும் ஜாதி அடிப்படையிலான இனவெறி மற்றும் துன்புறுத்தலின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து நீங்கள் அறிவீர்களா?

அமைச்சர் ஸ்டீஃபன் கேம்பர்: அந்த சமுதாயங்களுக்குள் ஏற்படும் சில பிரச்சினைகள் குறித்து எனக்குத் தெரியும். சமுதாயத்தில் எங்கெங்கு பதற்றங்கள் உள்ளன என்பதைக் கண்டறிய, நாங்கள் நியூ சவுத் வேல்ஸ் பல்லினக் கலாச்சார அமைப்புடன் இணைந்து கடுமையாக செயல்படுகிறோம், மேலும் அந்த பதற்றத்தைக் களைய நாங்கள் தொடர்புடைய சமூகங்களுடன் தொடர்ந்து செயல்பட முயற்சிக்கிறோம்.

திருமதி கேய்ட் ஃபேர்மேன்: நல்லது. ஆனால் உங்கள் கூற்றின் பொருள் என்ன? உங்களுக்கு அவர்களின் பிரச்சினைகள் தெரிந்திருந்தாலும், பல்லினக் கலாச்சார அமைச்சராக அந்த சமுதாயங்களுடன் இணைந்து, அந்த பதற்றத்தை சமாளிக்க என்ன செய்கிறீர்கள்?

அமைச்சர் ஸ்டீஃபன் கேம்பர்: பல நேரங்களில், உண்மையான பதற்றம் என்ன, அது வெறும் இரண்டு அல்லது மூன்று பேருக்கிடையேயான வாய்த்தகறாரா என்பதையெல்லாம் கண்டறிய வேண்டும். பின்னர் இரு சமூகங்களுடனும் தொடர்பு கொண்டு செயல்பட வேண்டும்…. மத அடிப்படையிலான பதற்றங்களைத் தவிர்க்க நாங்கள் நியமித்துள்ள (மத)நம்பிக்கைக் குழுவின் (Faith Council) உறுப்பினர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட சமூகங்களுடனும் செயல்பட முயல் கின்றோம்.

நியூ சவுத் வேல்ஸ் பள்ளிகளில் ஜாதிக் கொடுமை
திருமதி கேய்ட் ஃபேர்மேன்: பல்லினக் கலாச்சார அமைச்சராக, இந்தப் பிரச்சினை தொடர்பாக அமைச்சரின் அறிவை அறிய ஆர்வமாக உள்ளேன். வெளிப்படையாகக் கூறுவதானால் இந்தப் பிரச்சினை தொடர்பாக உங்களிடம் ஏற்கெனவே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதையும், இந்த சமூகங்கள் உங்களிடம் உதவி கோரித் தொடர்பு கொண்டுள்ளன என்ற தகவலும் எனக்குத் தெரியும்.
ஆஸ்திரேலிய பல்லினக் கூட்டமைப்பு (Federation Of Ethnic Communities of Australia (FECCA)) மே 2024 இல், ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்துடன் இணைந்து சமுதாயக் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அவ்வறிக்கையில், நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசுப் பள்ளிகளில் நடக்கும் சிறப்பு மதக் கல்வி பாடத்திட்டத்தில், ‘‘ஜாதி என்பது ஒரு பயனுள்ள அமைப்பு” எனக் கற்பிப்பதைக் கண்டறிந்தது.

அதன் காரணமாக, ஒடுக்கப்பட்ட ஜாதிக் குழுக்களிலிருந்து வரும் குழந்தைகள் ஜாதி அடிப்படையிலான இனவெறிக்கு உட்படுத்தப் படுவதாகவும், நியூ சவுத் வேல்ஸ் பொதுப் -பள்ளிகளில் ஜாதி அடிப்படையிலான துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இது மிகவும் பீதி அளிக்கக்கூடியது. FECCA அறிக்கையின் படி, இக்குற்றங்கள் அமைப்பு ரீதியாக நடத்தப்படும் பிரச்சினையாகத் தெரிகிறது. இத்தகைய ஜாதி ரீதியாக நடத்தப்படும் குற்றங்களைச் சரி செய்ய நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

அமைச்சர் ஸ்டீஃபன் கேம்பர்: இது பள்ளிகளில் கற்பிக்கப்படுவது தொடர்பான விடயமாக இருந்தால், அதைப் பற்றி துணை முதலமைச்சரான கல்வி அமைச்சரின் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல வேண்டும்.
திருமதி கேய்ட் ஃபேர்மேன்: FECCA அறிக்கையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆஸ்திரேலிய பல்லினக் கூட்டமைப்பு (FECCA) உங்களைத் தொடர்புகொண்டதா?

அமைச்சர் ஸ்டீஃபன் கேம்பர்: இல்லை, நான் தனிப்பட்ட முறையில் அந்த குறிப்பிட்ட அறிக்கையைப் பார்த்ததில்லை-என்னுடைய அமைச்சகத்தின் பல்லின நிறுவனத்திற்கும் (Multicultural NSW) அதைப்பற்றித் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
திருமதி கேய்ட் ஃபேர்மேன்: நீங்கள் இதை அறிந்திருந்தால், அதற்காக நடவடிக்கை எடுத்திருப் பீர்கள்…. எனது புரிதலின் படி, கடந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டுக் கூட் டத்திலேயே, என் நண்பர் அபெய்கெய்ல் பாய்ட் உங்களிடம், இசுலாமிய மற்றும் சீக்கிய சமூகங்களின் மீது ஹிந்து தேசியவாதிகள் மேற்கொள்ளும் பரவலான இனவெறித் தாக்குதல்கள் குறித்து, அந்த சமுதாயத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவீர்களா என்று கேட்டிருந்தார். அந்த சந்திப்பு நடந்ததா?
அமைச்சர் ஸ்டீஃபன் கேம்பர்: ஹிந்து தேசியவாதிகளுடனா?
திருமதி கேய்ட் ஃபேர்மேன்: இல்லை, அந்த இனவெறித் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்த சமூகங்களுடன் சீக்கிய மற்றும் இசுலாமிய சமூகத் தலைவர்களுடன்.
அமைச்சர் ஸ்டீஃபன் கேம்பர்: நான் சீக்கிய மற்றும் இசுலாமிய சமூகங்களுடன் தொடர்பில் இருந்துள்ளேன். குறிப்பாக இந்த பதற்றங்கள் தொடர்பாக…..
திருமதி கேய்ட் ஃபேர்மேன்: மிகுந்த மரியாதையுடன் கூறுகிறேன்அமைச்சர் அவர்களே, நீங்கள் இந்த விவகாரத்தில் பெரிதாக செயல்படவில்லை என்று தெரிகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்த விதத்திலிருந்து, இந்த சமூகங்களுக்கு இடையே நிலவும் உரசல்களைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை அல்லது நீங்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தரவில்லை என்று தெரிகிறது.
இவ்வாறு 28.8.2024 அன்று, நியூ சவுத் வேல்ஸ் சட்டமன்றத்தில் ஆஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் சட்டமன்ற மேலவை உறுப்பினர், நியூ சவுத் வேல்ஸ் பல்லினக் கலாச்சார அமைச்சர் ஸ்டீஃபன் கேம்பரை வறுத்தெடுத்தார்.

– மகிழ்நன் அண்ணாமலை

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *