கடந்த சில நாள்களாக, ஊடகங்களுக்கு ஒரு நல்ல தீனி கிடைத்திருக்கிறது; அது வேறு ஒன்றும் இல்லை; திருப்பதி கோயில் லட்டுதான் ஊடகங்களுக்குக் கிடைத்த ‘லட்டான’ தீனி.
திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதுதான் அந்தச் செய்தி!
இதை வெளிப்படுத்தியவர்கள் நாத்திகர்களோ, பகுத்தறிவாளர்களோ அல்ல; முழு ஆத்திக மெய் யன்பரான – அதுவும் ஆந்திர மாநில முதலமைச்சர் என்ற நிலையில் உள்ள சந்திரபாபு நாயுடுதான் இதனை வெளிப்படுத்தியவர்.
தொடக்கத்தில் இதற்கு அரசியல் சாயம் பூசப் பட்டாலும், இறுதியில் அது உண்மையான தகவல்தான் என்று உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.
இதன் மூலம் இரண்டு தகவல்களும், கருத்துகளும் முக்கியமானவை. இது திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் பார்ப்பனர்களுக்குத் தெரிந்துதான் நடந்திருக்க வேண்டும்.
இதன்மீது சட்டரீதியான விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டு, குறிப்பிட்ட கால வரையறைக்குள் அறிக்கை பெறப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதில் இன்னொன்று சிந்திக்கத்தக்கது என்னவென் றால், ‘தீராத வினைகளையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தம்!’ என்று பஜனைப் பாடுகிறார்களே பக்தர்கள் – தல புராணங்களை எழுதி வைத்துள்ளார்களே, அந்தக் கோவிந்தனாகிய ஏழுமலையான் என்ன செய்து கொண்டிருந்தான்? என்பது முக்கியமான கேள்வியாகும்.
மற்றவர்கள்மீதான வினைகளைத் தீர்த்து வைப்பது ஒருபுறம் இருக்கட்டும்; ஏழுமலையான் பெயரில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் லட்டிலேயே கலப்படம் நடந்திருக்கிறதே – அதைத் தடுக்க முடியவில்லையா ஏழுமலையான் கடவுளால்?
தடுக்க முடியவில்லை என்றால், அதன் பொருள், கடவுள் அல்ல – அது வெறும் கல்லு அல்லது உலோகத்தால் ஆன வெறும் பொம்மை என்பதை அறிவு நாணயத்தோடு ஒப்புக் கொள்ள வேண்டும்.
இதைப்பற்றி எந்த ஊடகமாவது எழுதுகிறதா – விவாதம் நடத்துகிறதா என்பது முக்கியமான கேள்வியாகும்.
இதனைத் திசை திருப்புவதற்காக – தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விட்டதே என்ற அச்சத்தில் மூன்று நாள் யாகம் நடத்துகிறார்களாம்!
யாகம் நடத்துவது என்றால், அது பச்சையாகப் பார்ப்பனச் சுரண்டல் என்று பொருள்!
எது நடந்தாலும் அது கடைசியில் எங்குப் போய் முடியும் என்றால், பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டுவதில்தான் முடியும். யாகத்தின் பெயரால் அதுதான் இப்பொழுது நடந்து கொண்டுள்ளது.
யாகக் கலாச்சாரம் என்பது பார்ப்பனக் கலாச்சாரமே – இதனை எதிர்த்துதான் 2500 ஆண்டுகளுக்குமுன்பே கவுதமப் புத்தர் குரல் எழுப்பினார்.
அரசர்களைக் கையில் போட்டுக் கொண்டு பவுத்தத்தை வன்முறையில் ஒழித்துக் கட்டினார்கள்.
இன்னும் சொல்லப் போனால் திருப்பதி ஏழு மலையான் கோயில் என்பது ஒரு காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தது என்று, மகாராட்டிரத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனாதாஸ் F.R.C.S. என்பவர் “Thirupathi Balaji was a Buddhist Shrine” எனும் ஆங்கில நூலை எழுதியுள்ளாரே!
திருப்பதி லட்டுப் பிரச்சினையைத் தோண்டத் தோண்ட, மோசடி வெளியாவதுபோல, ஏழுமலையானைத் தோண்டத் தோண்ட புத்தர் கோயில் உண்மை வரலாறுகள் வெடித்துக் கிளம்பும்.
கரோனா நோய் கடுமையாகத் தொற்றிய கால கட்டத்தில், கை தட்டுங்கள் – ‘கரோனா நோய்ப் பறந்து ஓடி விடும்’ என்று பிரதமர் மோடிஜி சொன்னதுபோல, இப்பொழுது திருப்பதி கோயிலில் சுரண்டல் தொழிலை நடத்துபவர்கள் – மூன்று நாள்களுக்கு மாலை வேளையில் விளக்கு ஏற்றச் சொல்லி இருக்கிறார்கள். திருப்பதி கோயிலில் ஏற்பட்டுள்ள தோஷத்தைக் கழிக்க கோமியம் (மாட்டு மூத்திரம்) தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோயில், கடவுள் என்பது எல்லாம் எந்த யோக்கியதையில் இருக்கின்றன பார்த்தீர்களா? பகுத்தறிவோடு சிந்திப்பீர்!
பரிகாரம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் – திசை திருப்பும் வகையில் சில ‘மேஜிக்’குகளைச் செய்வார்கள்.
அதில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் விதி விலக்கல்ல!
‘காந்திஜி மரணத்திற்கு ஒரு ஹிந்துவே காரணமாயிருப்பது – ஹிந்து சமூகத்துக்கே பேரவமானம்; அத்தகைய மகானைச் சுட்டுக் கொன்ற பாவம் நம் ஹிந்து சமூகத்தையே சூழ்ந்துள்ளது. தோஷங்களுக்கெல்லாம் பரிகாரம் ஸ்நானம் தான்’.
காந்தியார் ஒரு பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது காஞ்சி சங்கராச்சாரியார் திருவாய் மலர்ந்ததுதான் இது.
எப்படி இருக்கிறது பார்ப்பனத் தந்திரம்! சொல்வார்கள் அல்லவா வழக்கத்தில் ‘‘அவனுக்கு முழுக்குப் போட்டு விட்டேன்’’ என்று, அதை நினைவு கூர்க!