இவரைப் போன்றவர்கள் என்னுடைய அங்கங்கள்- கொள்கைத் தங்கங்கள்- இயக்கத்திற்கு ரத்தவோட்டம் போன்றவர்கள்!
படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் உருக்க உரை
சென்னை, செப்.24 அய்யா டி.கே.நடராசன் அவர்களை இழக்கும்பொழுது, என்னுடைய உடலில் ஒரு பாகம் செயலற்றுப் போனால், எப்படி இருக்குமோ, அந்த உணர்வை நான் பெறுகிறேன். ஏனென்றால், இவரைப் போன்றவர்கள் எல்லாம் என்னுடைய அங்கங்கள். கொள்கைத் தங்கங்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நேர்மையாக இருந்தாலும், இந்த அமைப்பிற்கு ரத்தவோட்டம் போன்றவர்கள் அவர்கள். தோற்றத்திற்கு ஒருவரைக் காட்டலாம்; ஒரு தலைமையைக் காட்டலாம். ஆனால், முழுக்க முழுக்க இவர்கள் எல்லாம் இருக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெரியார் புத்தக நிலைய மேனாள் மேலாளர்
த.க. நடராசன் படத்திறப்பு – நினைவேந்தல்
கடந்த 2.9.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற பெரியார் புத்தக நிலைய மேனாள் மேலாளரும், பெரியார் பெருந்தொண்டருமான த.க. நடராசன் அவர்களின் படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
அய்யா நடராசன் அவர்களுடைய
சிறப்பியல்புகள்!
மிகுந்த சோகத்தோடு, துன்பத்தோடு ஒரு நிகழ்வை நடத்தவேண்டிய ஒரு கட்டாயம் இன்றைக்கு எனக்கு ஏற்பட்டது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று. காரணம், மறைந்தும் மறையாமல் படமாகவும், பாடமாகவும் இருக்கக்கூடிய அய்யா நடராசன் அவர்களுடைய சிறப்பி யல்புகள், தொண்டறம், நேர்மை, நாணயம், ஆற்றல், ஆளுமை இவற்றையெல்லாம் மிக அழகாக பலரும் பல கோணங்களில் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களும் அழகாக எடுத்துச் சொன்னார்.
அப்படிப்பட்ட சிறப்பான ஒரு நினைவேந்தல் நிகழ்வு என்பதைவிட, நம்முடைய ஆறுதலை, ஆறாத் துயரத்தை ஆற்றுப்படுத்திக் கொள்ளுதல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்நிகழ்வு அமைந்தி ருக்கின்றது.
அப்படிப்பட்ட இந்தப் படத்திறப்பிற்குத் தலைமை ஏற்று, பல கருத்துகளை எடுத்து வைத்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களே,
இந்நிகழ்வில் சிறப்பாக உரையாற்றியுள்ள நம்முடைய அத்துணை தோழர்களுக்கும், புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் அய்யா செல்வமீனாட்சி சுந்தரம் தொடங்கி, அதேபோல, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்கள், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள், அது போலவே இந்நிகழ்ச்சியில் சிறப்பான வகையில் உரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் செயல்வீரர் தமிழ்ச்செல்வன் அவர்களே, சமூகநீதி அமைப்பிலும், அரசு உறுப்பினராகப் பொறுப்பேற்று நடத்திக் கொண்டிருக்கக் கூடியவரும், நம்முடைய இயக்கத்திற்குத் தோன்றாத் துணையாக இருக்கக்கூடிய உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களே,
துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கக் கூடிய அவருடைய அன்புச்செல்வங்கள்!
திராவிட நிதி நிறுவனத்தின் செயல் அலுவலர் அருள்செல்வன் அவர்களே, கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்களே, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் அவர்களே மற்றும் இந்நிகழ்வில் சிறப்பாக உரை யாற்றிய கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களே, அனைத்துப் பெருமக்களே, த.க.நடராசன் அவர்களுடைய குருதி உறவுப் பெருமக்களே, நாமெல்லாம் இழப்பிற்கு ஆளாகியிருக்கின்றோம் என்று சொன்னாலும், நேரிடையாக அந்த இழப்பை அன்றைக்கு ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந்தம், கட்டாயத்தில் இருந்த, எளிதில் மாற்ற முடியாத அந்தத் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியிருக்கக் கூடிய அவருடைய அன்புச்செல்வங்கள் மணவாளன் அவர்களே, கண்ணுதுரை அவர்களே, மணவாளன் அவர்களுடைய துணைவியார் ரேணுகாதேவி அவர்களே, கண்ணுதுரை அவர்களுடைய வாழ்விணையர் சுசீலா அவர்களே, பேரப் பிள்ளைகளே, நண்பர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகக் கடினமான, ஒரு சோதனையான காலகட்டம் இந்தக் குடும்பத்திற்கு ஏற்பட்டதைவிட, இந்தக் கொள்கைக் குடும்பத்திற்கு, குறிப்பாக என்னை பொறுத்தவரையில் ஒரு பெரிய இழப்பு.
இமயத்தோடு, குன்றை ஒப்பிட முடியாது!
நான் பல நேரங்களில் உற்சாகமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வேன். மனதில் எனக்கு எவ்வளவு சங்க டங்கள் இருந்தாலும் அதனை மறைத்துக் கொள்வேன். அந்தக் கட்டத்தில் இருக்கின்ற அளவிற்கு. இந்தத் திடலைப் பொறுத்தவரையில், அய்யா அவர்களைப் போன்று ஓர் இமாலயத் தலைவர் இருந்த இடத்தில், அவருக்குப் பிறகு இந்த இயக்கம் நடக்கவேண்டும் என்று அந்தப் பொறுப்பை ஏற்ற நேரத்தில், நாங்கள் எல்லாம் மிகச் சாதாரண ஆட்கள். அவரோடு ஒப்பிடவே முடியாது. ஒரு குன்று என்றுகூட சொல்ல முடியாது. இமயத்தோடு, ஒரு குன்றை ஒப்பிட முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அய்யா அவர்கள் மறைந்து அரை நூற்றாண்டு ஆன பிறகு, அய்யாவின் மறைவு என்ற சரிவில் நாமெல்லாம் நிலை குலைந்து விடுவோமோ, இயக்கத்தின் எதிர்காலம் என்னாகுமோ என்ற நேரத்தில், அன்னை மணியம்மையார் அவர்கள் ஈடுகொடுத்தார்கள். வரலாற்றை அவர்கள் நிறைவேற்றினார்கள்.
பொறுப்பை நாம் பதவியாக கருதவில்லை!
அதற்குப் பிறகு இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள் ளக்கூடிய சூழ்நிலையில், உள்ளபடியே மிகவும் அஞ்சவேண்டிய விஷயம்தான். ஏனென்றால், பொறுப்பு என்பது சாதாரண விஷயமல்ல. இதை ஒரு பதவியாக நாம் கருதவில்லை.
அதுமட்டுமல்ல, நண்பர்களுக்குத் தெரியும், இயக்கப் பொறுப்பாளர்களுக்குத் தெரியும் – நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலகட்டம் என்பது மிக வும் சிக்கலான ஒரு சூழலாகும்.
தந்தை பெரியார் உலகமயமாகி இருக்கிறார்!
அந்தக் காலகட்டத்திலிருந்து மீண்டு, இன்றைக்கு ஓரளவிற்கு வந்திருக்கின்றோம். உலகளாவிய அள விற்குத் தந்தை பெரியார் அவர்கள் உலகமயமாகி இருக்கிறார்; உலகம் பெரியார் மயமாக ஆகி இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் தனி நபர்கள் அல்ல.
இங்கே படமாக இருக்கின்ற அய்யா நடராசன் போன்றவர்களுடைய ஒத்துழைப்பு. இது ஒரு கூட்டு முயற்சி. தனிப்பட்ட முறையில், அடையாளத்திற்கு ஒருவரைச் சொல்கிறார்கள். அதற்காக தலைவரான என்னை சொல்லலாம்; பொதுச்செயலாளர்களைச் சொல்லலாம்; ஆனால், இந்த இயக்கத்திற்குத் தோன்றாத் துணையாக, கண்ணுக்குத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அதுபோன்று வருகையில், முதல் வரிசையில் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய பேராதரவு, பெரும் பலம் யார் என்றால், அய்யா நடராசன் போன்றவர்கள்தான்.
அதனால்தான், அவருடைய மறைவு என்ற துன்பம், துயரம் என்பது இருக்கிறதே, அது மிகக் கடினமான ஒன்றாகும், அது போக்கிக் கொள்ள இயலாத ஒன்று.
குடும்பத்தில் உறவு முறையில் உள்ளவர்களுக்கு, அவர் பணி ஓய்வு பெற்றார்; பெரியார் திடலில் பணி யாற்றுகிறார் என்ற அளவில்தான் இருக்கும்.
மிகப்பெரிய பொறுப்புகளையெல்லாம்
அய்யா நடராசன் அவர்களிடம் விட்டுவிட்டோம்!
ஆனால், எங்களுக்கு அப்படியல்ல. மிகப்பெரிய பொறுப்புகளையெல்லாம் அவரிடம் விட்டுவிட்டோம். ஒவ்வொன்றும் அவருடைய பொறுப்பில்தான் இருந்தது.
இங்கே சொன்னார்களே, ஆளவந்தர் அவர்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார் என்று.
எனக்கு என்ன ஒரு பெரிய சங்கடம் என்றால், அவருக்குப் பிறகு யார்? என்று கேள்வி கேட்பார்கள்.
ஆனால், இந்தக் கூட்டு முயற்சி- நல்ல வெற்றிகரமாக அமைவதற்கு, நம்முடைய இன உணர்வும், ஆற்றலும், கொள்கை உணர்வும் படைத்தவர்கள் வந்தார்கள். ஒரு கூட்டுக் குடும்பம் மாதிரி இருக்கக் கூடிய அளவிற்கு வந்தார்கள்.
எவராலும் தவிர்க்கப்பட முடியாத ஓர் இயக்கம்!
அப்படி வந்தவர்களுடைய உதவியினால்தான் இன்றைக்கு இந்த இயக்கம், குறிப்பிடத்தகுந்த ஓர் இயக்கமாக, எவராலும் தவிர்க்கப்பட முடியாத ஓர் இயக்கமாக, எதிரிகளால் வெல்ல முடியாத என்று சொல்லுவதைவிட, சந்திக்க முடியாத அளவிற்கு இருக்கக்கூடிய இயக்கமாக இருக்கிறது.
எனக்குப் பெரிய வேதனை என்னவென்றால், இங்கே எல்லோரும் சொன்னார்கள். மீண்டும் மீண்டும் அதை, அவரைப்பற்றி சொல்லவேண்டிய அவசியமில்லை. என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டு, அதிலிருந்து நான் ஆறுதல் உங்களிடமிருந்து பெறவேண்டும் என்பதற்காகத்தான் இந்த உரையாற்றுகிறேன்.
வயது இடைவெளி என்பது
நமக்குக் கிடையாது!
அப்படி இருக்கையில், யாரை எல்லாம் நாம் தயார் செய்து, நமக்குப் பயன்படுவார்கள் என்று நினைத்தோமோ – என்னுடைய வயதிற்கு மூத்தவர்கள், இளையவர்கள் எல்லோருமே அதில் கலந்திருப்பார்கள்.
ஆனால், வயது இடைவெளி என்பது நமக்குக் கிடையாது. அவர்களையெல்லாம் பயன்படுத்தி, ஒரு கூட்டு முயற்சியில், சந்திக்கவேண்டிய எதிர்ப்புகள் சாதாரணமானதல்ல – மிகப்பெரிய அறைகூவல்கள். அவற்றையெல்லாம் நாம் சந்திப்பதற்கு என்ன காரணம்?
நல்ல அணைப்பு – நல்ல அளவிற்கு உதவிக்கரம். நேர்மை, நாணயம், ஒழுக்கம், கட்டுப்பாடு கொண்ட வர்கள் நமக்குக் கிடைத்தார்கள்.
அப்படிப் பார்க்கையில், மிக நீண்ட ஒரு பட்டியலே உண்டு. இங்கே கவிஞர் அவர்களும் அதைச் சொன்னார்கள்.
இயக்கத்தினுடைய அடித்தளம்
மிகவும் பலமாக இருக்கவேண்டும்;
பாதுகாப்பாக இருக்கவேண்டும்!
இவர்கள் எல்லாம் நமக்குப் பிறகு இயக்கத்தை நடத்துவார்கள் – நமக்கு ஏதாவது ஆனாலும் – காரணம் உங்களுக்குத் தெரியும் – மிகப்பெரிய அளவிற்கு அறுவை சிகிச்சைகள், எதிர்ப்புகள் இருக்கின்றன. அதனால் எந்த நேரத்தில், எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆகவே, இயக்கத்தினுடைய அடித்தளம் மிகவும் பலமாக இருக்கவேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும். காவலர்களாக இருப்பார்கள். வழிகாட்டக் கூடியவர்களாக இருப்பார்கள். நெறியாளர்க ளாக இருப்பார்கள் – இருந்தார்கள் என்று சொல்லக்கூடிய நிலையில், பழைய காலத்தைப் பார்த்தீர்களேயானால், ஆளவந்தார் அவர்கள், அதேபோல, நம்முடைய இறை யனார், திருமகள் இறையன் ஆகியோர், அதுபோலவே, புலவர் இராமநாதன் அய்யா கொள்கை ரீதியாக, கு.வெ.கி.ஆசான் அய்யா அவர்கள், கழகப் பொருளாளராக இருந்த சாமிதுரை அவர்கள். நானும், அவரும் மிக நெருக்கமானவர்கள். ஒன்றாகப் படித்தோம், ஒரே அறையில் தங்கியிருந்தோம். அவர், தாம் செய்து கொண்டிருந்த தொழிலை விட்டுவிட்டு வாருங்கள் என்று சொன்னவுடன், விட்டுவிட்டு இங்கே வந்தவர். எல்லா வகையிலும் அவர்களை நம்பித்தான் பொறுப்புகளைக் கொடுத்தோம். அதேபோன்று, சு.அறிவுக்கரசு அவர்கள். அதேபோல, கழகப் பொருளாளராக இருந்த டாக்டர் பிறைநுதல் செல்வி அவர்கள். துரை.சக்கரவர்த்தி அவர்கள்.
இயற்கையின் கோணல்புத்தி…
இவர்களையெல்லாம் மிகப்பெரிய அளவிற்கு தயாரித்து இயக்கத்திற்கு, ஆற்றலைப் பார்த்துப் பார்த்துக் கொடுக்கவேண்டும் என்று நினைத்தால், இயற்கையின் கோணல்புத்தி என்று அய்யா அவர்கள் சொன்னதுபோன்று, அவர்களை நாம் இழந்திருக்கின்றோம் என்று சொல்லும்பொழுது, அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு
பெரியார் திடலுக்கு வந்தார்!
ஆனால், அய்யா நடராசனைப் பொறுத்தவரையில் எப்படி என்றால், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் என்றால், பார்ப்பனர்கள், சங்கராச்சாரி மடத்திற்குச் சென்று பணியாற்றுவார்கள். அதுபோன்று, நம்மவர்கள் வரவேண்டும் என்றால், பெரியார் திடலுக்கு வரவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இங்கே வந்தார்.
அவரை நாங்கள் இழக்கும்பொழுது, என்னுடைய உடலில் ஒரு பாகம் செயலற்று போனால், எப்படி இருக்குமோ, அந்த உணர்வை நான் பெறுகிறேன்.
அமைப்பிற்கு ரத்தவோட்டம் போன்றவர்கள்
ஏனென்றால், இவர்கள் எல்லாம் என்னுடைய அங்கங்கள். கொள்கைத் தங்கங்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நேர்மையாக இருந்தாலும், இந்த அமைப்பிற்கு ரத்தவோட்டம் போன்றவர்கள் அவர்கள்.
தோற்றத்திற்கு ஒருவரைக் காட்டலாம்; ஒரு தலைமையைக் காட்டலாம். ஆனால், முழுக்க முழுக்க இவர்கள் எல்லாம் இருக்கவேண்டும்.
இங்கே அன்புராஜ், பொருளாளர் குமரேசன், துணைத் தலைவர் கவிஞரும் சொன்னார்கள்.
காசோலையில் கையெழுத்துப் போடுவார். எல்லா பில்லையும் பார்ப்பார். நாங்கள் கடைசியாக, செயலாளர் என்ற முறையில் அக்காசோலையில் கையெழுத்துப் போடுவோம்.
உங்களுக்கெல்லாம் தெரியும், மாதத்தில் பாதி நாள்கள் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பேன்.
கணக்காளர் என்னிடம், காசோலையில் கையெ ழுத்து வாங்குவதற்கு முன்பு, ‘‘டி.கே.நடராசன் பார்த்துவிட்டாரா?” என்று கேட்பேன்.
அவரிடம் கையெழுத்து வாங்கிய பிறகுதான், உங்களிடம் கையெழுத்து வாங்க வந்திருக்கின்றோம் என்பார் கணக்கார்.
‘‘அவர் பார்த்துவிட்டார் என்றால், நான் கையெழுத்துப் போடுகிறேன்” என்று சொல்வேன்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் இழந்திருக்கின்றோம் என்று சொன்னால், என்னுடைய நிலை எப்படி என்று நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
திருச்சி ஆளவந்தார்
திருச்சி ஆளவந்தார் அவர்களைப்பற்றி இங்கே சொன்னார்கள். ஆளவந்தார் அவர்கள் கட்டுப்பாடு மிக்கவர். அவருடைய சொந்த மருமகன் ‘விடுதலை’ ராதா. ஒரே குடும்பத்தில், ஒரே வீட்டில் இருப்பவர்கள்தான் அவர்கள்.
ராதா, மேலாளர் ஆளவந்தார் அவர்களிடம், நான் சொன்னேன் என்று கேளுங்கள் என்று சொன்னேன் என்றால், ஆளவந்தார் அவர்களிடம் சென்று, ராதா தயங்கி நிற்பார்.
எங்களைவிட ஆளவந்தார் அவர்கள் மூத்தவர். ரயில்வே துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற பிறகு பெரியார் திடலுக்கு வந்து பணியாற்றினார். அய்யாவிடம் காட்டிய அதே ஈடுபாட்டுடன், அம்மா அவர்களிடம் காட்டிய அதே ஈடுபாட்டுடன் நம்மிடமும் அவர் அதே ஈடுபாட்டுடன் பணியாற்றினார்.
இந்த அலுவலகம் எவ்வளவு நேர்மையாக இருக்கிறது என்பதற்கு அடையாளம் அதுதான்.
ஆளவந்தார் அவர்கள் சில நேரங்களில் எழுதிக் கொண்டிருப்பார். அவருடைய பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பார்.
அவருடைய மருமகன் ராதாவைப் பார்த்து, ‘‘என்னங்க?” என்று கேட்பார்.
‘‘அய்யா, ஆசிரியர் சொன்னார், வாங்கி வரச் சொன்னார்” என்பார்.
‘‘சீட்டு இருக்கிறதா?” என்று ஆளவந்தார் கேட்பார்.
‘‘இல்லீங்க” என்பார் ராதா.
‘‘நான் பதிவு செய்யவேண்டும்; ஆகவே, நீங்கள் சீட்டு வாங்கி வாருங்கள்” என்று அனுப்பி விடுவார்.
ராதா, என்னிடம் வந்து, ‘‘ஆளவந்தார் சீட்டு கேட்கிறார்” என்று சொல்வார்.
‘‘பரவாயில்லை, நான் இங்கேதானே இருக்கிறேன். போய் கேளுங்கள்” என்பேன்.
அவ்வளவு கண்டிப்பானவர் ஆளவந்தார் அவர்கள்.
ரத்த உறவுக் குடும்பத்தைவிட, கொள்கை உறவு குடும்பம்தான் எங்களுக்கு முக்கியம்!
அதேபோன்று, டி.கே.நடராசன் அவர்களைப் பொறுத்தவரையில், எங்கள் குடும்பத்தில் ஒருவர். எங்கள் குடும்பம் வேறு; அவருடைய குடும்பம் வேறு அல்ல. ரத்த உறவுக் குடும்பத்தைவிட, கொள்கை உறவு குடும்பம்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம்.எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், அவருடைய குடும்பத்தை அறிந்தவன் என்ற முறையில், ஏறத்தாழ 75 ஆண்டுகளுக்குமேல் நான் அறிந்தவன்.
அய்யா இராமாமிர்தம்
டி.கே.நடராசன் அவர்கள் அறிமுகமாவதற்கு முன்பே, அவருடைய மாமா அய்யா ரத்தினசாமி அவர்கள் நமக்கு அறிமுகமானவர். அவருடைய தம்பியை மாமுண்டி என்று பட்டுக்கோட்டையில் அழைப்பார்கள். ராமாமிர்தம் அவர்கள். இவர்தான், குஞ்சிதம் அவர்களுடைய தந்தை யார். அவருடைய உறவுக்காரர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கின்றார்கள்.
மாணவப் பருவத்தில் நான், கலைஞர் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறபொழுது, அவர்களுடைய கடையில்தான் அமர்ந்திருப்போம். அதேபோன்று, கூட்டம் முடித்து வந்தவுடன்,
அய்யா இராமாமிர்தம் அவர்கள் விழித்திருந்து, இளை ஞர்களைத் தட்டிக் கொடுப்பார்.
அந்தக் காலத்திலேயே அவர் சுயமரியாதைத் திரு மணம் செய்துகொண்டவர். ‘குடிஅரசு’ முகவராக இருந்த வர். அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர் அவர்.
அதேபோன்று, அய்யா இரத்தினசாமி அவர்களுக்கு ஒரே ஒரு மகள். அவருடைய மருமகன் தியாகராசன் அவர்கள். அவரும் நம்முடைய இயக்கப் பொறுப்பில் இருந்தவர்.
அய்யா அவர்கள், நூல் பிடித்தால், கொஞ்சம்கூட அந்த அளவிலிருந்து நகர மாட்டார். இதுவரைக்கும் அவர் வைத்த தேர்வில், மதிப்பெண் வாங்குவது மிகவும் சுலபமல்ல.
நிறைவு வாழ்வு வாழ்திருக்கிறார். இந்தக் குடும்பத்தி னர் இந்தக் கொள்கையிலேயே வாழ்கிறார்கள்.
நான் என்ன சொல்லவேண்டும் என்று நினைத் தேனோ, அதை நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் அன்புராஜ் அவர்கள் சொன்னார்.
அய்யா டி.கே.நடராசன் அவர்களுக்கு கொஞ்சம் உடல் தொல்லைகள் இருந்தன. அந்தக் காலகட்டத்தில், அவருடைய மகன் மணவாளன் அவர்கள் வெளிநாட்டில் இருப்பதால், அடிக்கடி வந்து டி.கே.நடராசன் அவர்களைப் பார்த்துவிட்டுச் செல்வார். இங்கே கண்ணுதுரை அவர்களும், அவருடைய வாழ்விணையர் சுசீலா அவர்களும் மிகப்பெரிய அளவிற்கு டி.கே.நடராசன் அவர்களை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்.அதேபோன்று, பெரியார் திடலில், சீதாராமன் அவர்கள் எல்லா வகையிலும் அவரைப் பார்த்துக் கொள்வார்.
அதேபோன்று, எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களான இங்கே இருக்கின்ற பிள்ளைகள், வெளிநாட்டில் இருக்கின்ற பிள்ளைகள் அனைவருக்கும், அய்யா நடராசன் அவர்கள்மீது பற்று பாசம் அதிகம்.
இயக்கத்தினுடைய சொத்து
அய்யா டி.கே.நடராசன் அவர்கள்!
எவ்வளவு சொன்னாலும், இந்த இயக்கத்தினுடைய சொத்து அவர். நான், அவரிடம் உத்தரவு போட்டது கிடையாது. கோரிக்கைதான்.
‘‘இவர் 100 புத்தகங்கள் வாங்குகிறேன் என்று சொல்கிறார்; 20 சதவிகித கழிவை, 25 சதவிகிதமாகக் கொடுக்கலாம் அல்லவா?” என்பேன்.
நான் சொல்வதற்கு அவர் மறுப்பு சொல்லமாட்டார். கொஞ்சம் தயக்கம் காட்டுவார். பேசாமல் இருப்பார். அப்படி இருந்தால், அவர் நம்மோடு ஒத்துப் போக வில்லை என்று அர்த்தம்.
உடனே நான், ‘‘என்னங்க அய்யா, சொல்லுங்கள்” என்பேன்.
‘‘இல்லீங்க சார், நீங்கள் சொல்கிறீர்கள், இவருக்கு 25 சதவிகிதம் கழிவு கொடுக்கச் சொல்லி, அப்படியே கொடுத்துவிடலாம். ஆனால், இதேபோன்று மற்ற வர்களும் கேட்பார்களே, அது சங்கடமாக இருக்காதா?” என்பார்.
அரசாங்கப் பணியாற்றியவர் என்பதால், சட்டம், நேர்மை என்பதிலிருந்து கொஞ்சம்கூ பின்வாங்காமல் சொல்லக்கூடிய அளவிற்கு இருப்பார். அவர் போன்று இன்னொருவரை தயாரிப்பது அவ்வளவு சுலபமல்ல!
அப்படிப்பட்ட ஒருவரை நாம் இழந்திருக்கின்றோம். அவர் போன்று இன்னொருவரை தயாரிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவருடைய அனுபவம், உழைப்பு, அர்ப்பணிப்பு என்பது சாதாரணமானதல்ல.
அவர் நிறைவு வாழ்வு வாழ்ந்தார் என்றாலும், அவருடைய இழப்பை ஈடு செய்ய முடியாது. இந்த இயக்கத்தினுடைய தனித்தன்மையே என்னவென்று சொன்னால், இப்படிப்பட்டவர்களுடைய தொண்ட றம்தான்.
தந்தை பெரியாரின் கருத்து!
தந்தை பெரியார் அவர்கள் சொன்ன வார்த்தை, ‘‘இந்த இயக்கத்திடமிருந்து யாராவது எதிர்பார்த்தால், அவர்களை நான் வேலைக்காரனைவிட சாதாரணமாக நினைக்கிறேன். ஆனால், இந்த இயக்கத்திற்குக் காசு கொடுத்து வேலை செய்கிறவர்கள், எனக்கு எஜமானர்” என்றார்.
அதனால்தான், இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் பற்றற்றவர்களாக இருக்கிறார்கள்.
‘‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு’’ (குறள் 350)
மானுடப் பற்றில் பற்று கொண்ட ஒரு தலைவர். அவருடைய அமைப்பு. எவ்வளவோ சோதனைகளைத் தாண்டி இன்றைக்கு வளர்ந்திருக்கின்றது. சோதனை களைத் தாண்டுவதற்கு உறுதுணையாக இருந்த ஆடிட்டர் இராஜரத்தினம் அய்யா.
நம்முடைய பயணங்கள் தொடருகின்றன; பயணங்கள் எப்பொழுதும் முடிவதில்லை!
அதற்கு முன்பு வேணுகோபால் அய்யா அவர்கள். நமக்கு வழிகாட்டக் கூடியவர்கள் ஏராளம். ஒரு கூட்டு முயற்சியில் வருகிறபொழுதுதான் நம்முடைய பயணங்கள் தொடருகின்றன. பயணங்கள் எப்பொழு தும் முடிவதில்லை. யார் போனாலும், யார் வந்தாலும் இயக்கம் இருக்கும்.
ஆனால், அவர்களுடைய தொண்டு எதைக் காட்டுகிறது என்றால், நல்ல அடிக்கட்டுமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் அடிக்கட்டுமானம் – வேர் பலமாக இருக்கிறது.
விழுதுகள் நாணயமாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால், ஆலமரத்தை அசைக்க முடியாது
எனவே, விழுதுகள் நாணயமாகவும், ஒழுக்கமாகவும் இருந்தால், இந்த ஆலமரத்தை அசைக்க முடியாது எந்தப் புயலாலும்.
ஆகவே, அய்யா டி.கே.நடராசன் அவர்களுடைய நினைவைப் போற்றுகின்ற நேரத்தில், ஒவ்வொருவரும், அவரவருடைய பங்களிப்பை செய்வது என்பது அவசியமாகும்.
வாழ்க்கையில் நாணயம், நேர்மை ஒழுக்கத்தோடு வாழ்வதுதான் சிறந்த ஒன்று.
அய்யா டி.கே.நடராசன் அவர்களைப்பற்றி பேசினால் மட்டும்போதாது, குஞ்சிதம்மையாரைப்பற்றியும் சொல்லவேண்டும். இவருடைய கண்டிப்புக்கு அந்த அம்மையார் இவ்வளவு காலம் ஈடுகொடுத்திருக்கிறார் பாருங்கள், அது சாதாரண விஷயமல்ல.
நான் அவரிடமே சொல்வேன், ‘‘இந்த அம்மையாரை என்ன பாடுபடுத்தியிருப்பீர்கள்” என்று.
அந்த அம்மையார் எதுவும் பேசமாட்டார். அவர் என்ன சொன்னாரே அதை மட்டும் செய்வார். அதேபோன்று, அவருடைய பிள்ளைகளும்.
ஆக, இப்படி ஒரு நல்ல குடும்பம், ஒரு கொள்கைப் பல்கலைக் கழகமாக இந்தக் குடும்பத்தைப் பார்க்கிறோம்.
ஆகவே, அவருடைய தொண்டு தொடரவேண்டும். அவர் இருக்கிறார் என்ற உணர்வோடுதான் நாங்கள் இருக்கிறோம்.
பகீரதன் அய்யாவும், நடராசன் அவர்களும்தான் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். பகீரதன் அய்யா வினுடைய வாழ்விணையரை, கடைசி காலம்வரை பாதுகாத்து வந்தார், பழகியதால்.
அதேபோன்று, பெரியார் சாக்ரடீசு அவர்கள். ஒரு இளைஞனை நன்றாக தயாரித்து வந்த நேரத்தில், நம்மிடமிருந்து இயற்கை அவரைப் பறித்துக்கொண்டது.
இந்த இயக்கத்தை யாராலும் அலட்சியப்படுத்திவிட முடியாது!
நமக்குப் பிறகு இவர்கள் எல்லாம் இயக்கத்தை சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று நினைத்த நேரத்தில், திடீரென்று மின்னல் ஏற்பட்டு, பார்வை பறிக்கப்பட்டால், அதனைத் தாங்கிக் கொண்டு, எப்படி அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டுமோ, அந்த நிலையில்தான் எங்களைப் போன்றவர்கள் இருக்கி றோம்.
இந்த இயக்கத்தை யாராலும் அலட்சியப்படுத்திவிட முடியாது இன்றைக்கு. காரணம், இந்த இயக்கத்தினுடைய நேர்மை, உண்மை, கொள்கை பலம்தான்.
இப்படி ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக அவர்கள் இருக்கக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்று, எல்லா வகையிலும் அவர்கள் வழிகாட்டியாக நமக்கு இருக்கி றார்கள்.
எனவேதான், அந்த இடத்தை அவ்வளவு சுலபத்தில் யாராலும் நிரப்ப முடியாது. ஆனால், நிரப்பி ஆகவேண்டும். மற்றவர்கள் வருவார்கள்.
ஏனென்றால், இயற்கையைப் பொறுத்தவரையில், ‘‘தம்மின் தம்மக்கள் அறிவுடைமை” என்று சொல்வது போன்று, அடுத்த கட்டத்திற்குச் சென்றாகவேண்டும்.
எல்லோரும் நடராசன்கள் போன்று இருக்கவேண்டும்!
அய்யா நடராசன் போன்றவர்களுடைய இழப்பு என்பது நமக்குப் பெரிய அளவிற்கு இழப்பாக இருந்தா லும், அதேநேரத்தில், எல்லோரும் நடராசன்கள் போன்று இருக்கவேண்டும்; அவர்கள் எப்படி இயக்கத்தில் பணியாற்றினார்களோ, அதேபோல, அந்தப் பணியை நாம் தொடரவேண்டும் என்கிற உணர்வை நம்முள் விதைத்துக் கொள்வோம்.
அதன்மூலமாக நம்மை விதைத்துக் கொண்டி ருக்கின்றோம். அவர்களை நாம் புதைத்துவிடவில்லை. அந்த உணர்வுகளை விதைத்திருக்கின்றோம். அந்த விதைகள் மேலே கிளம்பும். எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக இருக்கும்.
லட்சியங்கள் தோற்பதில்லை,
பயணங்கள் முடிவதில்லை!
அதனால், இது எதுவும் அழிந்துவிடாது. அதுதான் நாம் அவர்களுக்குக் காட்டவேண்டிய மரியாதை. அதுதான் வீர வணக்கம் என்று சொல்வதற்குக்கூட அடையாளம் என்று சொல்லி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து, ஆறுதல் பெறுவோம்; ஆறுதல் பெறுவோம்; பயணத்தைத் தொடருவோம்; லட்சியங்கள் தோற்பதில்லை, பயணங்கள் முடிவதில்லை.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.