சென்னை, செப்.24- அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் அவ்வப்போது அகவலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, அகவலைப்படி நிலுவைத் தொகை குறித்து அறிவிப்புகளும், புதிய நடைமுறை, விதிமுறை, நிபந்தனைகள் சார்ந்தும் தகவல்கள் அவ்வப்போது அரசு சார்பில் வெளியிடப்படும். அந்த வரிசையில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சார்ந்து முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவு என்ன?
அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக காலதாமதமும் நடைமுறை சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் அரசு கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து தற்போது நடைமுறையில் உள்ள செயல்முறையை கீழ்கண்டவாறு எளிமைப்படுத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.
இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் (IFHRMS) கணவன் மற்றும் மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே குடும்ப ஓய்வூதியம் கோரும் தேர்வுகளில் கணவன் மற்றும் மனைவியின் இறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பித்தால் போதுமானது என்று அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
அதேபோல தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின்கீழ் நியமனதாரரை நியமனம் செய்வது தொடர்பான தெளிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரரின் விருப்பத்தின் பெயரில் அவருடைய ஓய்வூதியத்திலிருந்து சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியர் இறக்கும் நேர்வில் அவர்தம் துணைவருக்கோ அல்லது அவருடைய துணைவர் உயிரோடு இல்லாதபோது ஓய்வூதியர் நியமனம் செய்த நியமனதாரருக்கோ இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த தொகையானது வழங்கப்படும்.
மேலும் துணைவர் உயிரோடு இல்லாமல் இருந்தாலோ அல்லது நியமனதாரர் எவரும் நியமிக்கப்படாத நிலையில், ஒட்டுமொத்த தொகையானது மறைந்த ஓய்வூதியரின் வாரிசுகளுக்கு சமமாக பிரித்து வழங்கப்படும்.