கருநாடக உயர் நீதிமன்ற நீதிபதி வி. சிறீசானந்தா, பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என்று குறிப்பிட்டது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்து வழக்குரை ஞர்கள் வழக்காடிக்கொண்டு இருந்தனர். அப்போது கூட்ட நெரிசல் தொடர்பாக வழக்கிற்கு தொடர்பே இல்லாத ஒன்றை நீதிபதி கூறினார். அவர் கூறியதாவது:
“பெங்களூருவில் உள்ள மைசூர் சாலை மேம்பாலத்துக்கு போனால் ஒவ்வொரு ஆட்டோ ரிக்சாவிலும் 10 பேர் உள்ளனர். கோரி பால்யாவி லிருந்து(பெங்களூரு புறநகர்) பூ மார்க்கெட் வரை உள்ள மைசூர் மேம்பாலம் பாகிஸ்தானில் உள்ளதைப் போல் உணர்கிறேன். இந்தியாவில் இல்லை என்பதால் இது பொருந்தாது. இது தான் யதார்த்தம். நீங்கள் எவ்வளவு கண்டிப்பான காவல்துறை அதிகாரியை அங்கு வைத்தாலும், அவர்களால் ஒன்றுமே செய்ய முடியாது” என்று நீதிபதி சிறீசானந்தா கூறுவது – விசாரணையின் போது எடுக்கப் பட்ட காணொளியில் தெளிவாக பதிவாகி உள்ளது.
அதே போல் விசாரணையில் பெண் வழக்குரைஞர் எதிர் தரப்பு வழக்குரைஞர் குறித்து – நாளை சில ஆவணங்களைக் கொண்டுவரலாம் என்று கூறிய உடன், நீதிபதி ‘அவர் என்ன உள்ளாடை அணிந்து வருவார் என்றும் உங்களால் கூறமுடியுமா?’ என்று கொச்சையாகப் பேசினார். இவரது இந்த மோசமான கருத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் பார்வைக்குக் கருநாடக பார்கவுன்சில் கொண்டு சென்றது. இதனைத்தொடர்ந்து உச்சநீதிமன்றம் நீதிபதி சிறீசானந்தாமீது தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஒன்றியத்தில் அதிகாரப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி தான் எந்தப் பிரச்சினையையும் நிகழ்வையும் இந்து, முஸ்லிம் கண்ணோட்டத்தோடு காவி நிறக் கண்ணாடி அணிந்து பார்க்கிறது என்றால் – தன்னதிகாரம் படைத்த நிறுவனங்களிலும் அந்தத் தன்மை கொண்டவர்களைத் தட்டிப் பார்த்து நியமனம் செய்கிறதோ என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
உத்தரப்பிரதேச தேர்தலில் 80க்கும் 20க்கும் இடையிலான போராட்டம் என்று ஒரு முதலமைச்சர் சொல்லவில்லையா?
தேர்தல் ஆணையத்தில் என்ன நடந்தது? அரசுப் பணியில் செயலாளராக இருந்த ஒருவரை விருப்ப ஓய்வு பெறச் செய்து மறுநாளே, அவரைத் தேர்தல் ஆணைய உறுப்பினராக நியமிக்கவில்லையா? ஒன்றிய அரசின் அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடி யாமல், அவர் தேர்தல் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதும் உண்டே!
அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர், ஒரு பெண் வழக்குரைஞரைப் பார்த்து, என்ன பேசுவது என்ற நாகரிகம் வேண்டாமா?
அதே நீதிபதி சிறீசானந்தா ஒரு பெண் வழக்குரைஞர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காட்சிப் பதிவும் வைரலானது. இதையடுத்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையில், இந்த விவகாரம் தொடர்பாக கருநாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் எத்தகைய கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இஸ்லாமிய மக்கள் வாழும் பகுதியை பாகிஸ்தான் என குறிப்பிட்டது சர்ச்சையானதை அடுத்து கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் சிறீசானந்தா பகிரங்க மன்னிப்பு கோரினார்.
மன்னிப்புக் கேட்டது வரவேற்கத்தக்கதுதான் – உச்சநீதிமன்ற அழுத்தத்தின் காரணமாக இது நடந்திருக்கிறது என்றாலும் நீதிபதிகள் என்ற நிலையில்கூட எப்படி எல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதுதான் கவலை அளிக்கக் கூடியது.