தஞ்சையில் ரூ.30.5 கோடியில் டைடல் பார்க்: 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு

viduthalai
2 Min Read

தஞ்சாவூர், செப்.24- தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் ரூ.30.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க்கை சென்னையில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முக்கிய வளர்ச்சிப் பகுதியாக மாறியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் கடந்த 5 ஆண்டுகளில் பல வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஸ்டார்ட்அப், அய்டி, உள்கட்டமைப்பு என பல பிரிவுகளில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த் துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டுக்குச் சென்னை, கொங்கு மண்டலத்தைத் தாண்டி மத்திய தமிழ் நாடும் முக்கிய வளர்ச்சிப் பகுதியாக மாறியுள்ளது.
தஞ்சாவூர் மேல வஸ்தா சாவடி ரவுண்டானா பகுதியில் தமிழ்நாடு அரசு அறிவித்த நியோ டைடல் பார்க்கின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இதன் மூலம் தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில் நுட்ப நிறுவனங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்குப் படையெடுக்கும் பெரிய டெக் நிறுவனங்களுக்கு முக்கிய தேர்வாக உள்ளது.

3.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட தஞ்சாவூர் நியோ டைடல் பார்க்

தஞ்சாவூர் நியோ டைடல் பார்க் சுமார் 3.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் 55,000 சதுர அடி அலுவலக இடத்துடன் ரூபாய் 30.5 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

ஸ்டார்ட்அப்கள் மற்றும் அய்டி நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் G+3 தளங்களைக் கொண்ட மினி அய்டி பூங்காவாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நியோ டைடல் பார்க்கை சென்னையில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதற்காக தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப் பினர் முரசொலி, சட்டமன்ற உறுப் பினர்கள் துரை.சந்திரசேகரன் (திரு வையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்). மாநகராட்சி மேயர்கள் சண்.ராமநாதன் (தஞ்சாவூர்), சரவணன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் முத்து செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் மதியழகன், டைடல் செயற்பொறியாளர் ஜெயமணி மவுலி, மாவட்ட தொழில் மய்ய பொது மேலாளர் மணிவண்ணன், டைடல் பூங்கா உதவி பொறியாளர் கோபி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்ததாவது:

முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார்.

மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும் வரப்பிரசாதம்

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார் பட்டி ஊராட்சியில் மேலவஸ்தாச்சாவடி அருகில் 3.40 ஏக்கர் பரப்பளவில் 55,000 சதுர அடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் 4 அடுக்கு மாடி கட்டடமாக டைடல் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் படித்த இளைஞர்கள் சுமார் 500 பேருக்கு மென்பொருள் வல்லு நர்களாகவும், சுமார் 600 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெற உள்ளதால், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும் வரப்பிரசாதமாக அமைந் துள்ளது.

– இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *